தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பாரம்பர்யமாக நடத்தப்பட்டுவந்த நிலையில், இடையில் நீதிமன்ற உத்தரவால் தடை ஏற்பட்டது. இதைக் கண்டித்து பொதுமக்கள் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதைத் தொடர்ந்து, அப்போதைய தமிழக அரசு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த சட்டத் திருத்தம் கொண்டுவந்தது. இதன் காரணமாகத் தற்போது தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டுவருகின்றன.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத் திருத்தத்தை ரத்துசெய்யக் கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த மனுக்களை விசாரித்துவந்த அரசியல் சாசன அமர்வு, அனைத்துத் தரப்பு வாதங்களையும் பதிவுசெய்துகொண்டது. பின்னர், இந்த மனுக்களின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒத்திவைத்தது. இந்த நிலையில், விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை அரசியல் சாசன அமர்வு இன்று வழங்குவதாக அறிவித்தது.

அதன்படி தற்போது தீர்வு வெளியாகியிருக்கிறது. உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, ``ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு சமர்ப்பித்திருக்கும் ஆவணங்கள் திருப்திகரமாக இருக்கிறது. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாசாரத்தோடு ஒருங்கிணைந்த ஒரு பகுதி என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஜல்லிக்கட்டு என்பது தமிழகத்தின் கலாசாரமாக இருந்தாலும் துன்புறுத்தல்களை தவிர்ப்பதற்கான வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் ” எனத் தெரிவித்திருக்கிறது. மேலும், ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தத் தடையில்லை எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.