Published:Updated:

வானத்திலிருந்து குதித்த சி.பி.ஐ! - அடுக்கடுக்கான கேள்விகள்

சாத்தான்குளம்
பிரீமியம் ஸ்டோரி
News
சாத்தான்குளம்

அடுத்தது என்ன?

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரின் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், `சி.பி.ஐ இந்த வழக்கை விசாரிக்கும்’ என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இருவரின் மரணம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையையும் சி.பி.ஐ தாக்கல் செய்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடங்கி குட்கா வழக்கு வரை ஏற்கெனவே சி.பி.ஐ விசாரணை அமைப்பு நடத்திய வழக்குகளுக்கே இன்னும் நியாயம் தேடித் தரப்படவில்லை. இந்தநிலையில் தான் ‘வானத்திலிருந்து குதித்து வந்ததா சி.பி.ஐ... இவர்கள் மட்டும் சாத்தான்குளம் வழக்கில் என்ன நியாயம் தேடித் தரப்போகிறார்கள்?’ என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது.

வானத்திலிருந்து குதித்த சி.பி.ஐ! - அடுக்கடுக்கான கேள்விகள்

சாத்தான்குளம் போலீஸார்மீதான இரட்டைக்கொலை வழக்கை, தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, ‘சாட்சியங்கள் கலைக்கப்படலாம்’ என்று அச்சம் தெரிவித்து, வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரிக்க உத்தரவிட்டது. குற்றவியல் நடுவர் பாரதிதாசன், இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து நீதிமன்றத்தில் அறிக்கையளித்தார். சம்பவ தினத்தன்று இரவுப் பணியிலிருந்த காவலர் ரேவதி, அன்றைய தினம் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் போலீஸார் சரமாரியாகத் தாக்கியதாக மாஜிஸ்ட்ரேட் விசாரணையில் குறிப்பிட்டிருந்தார். அவர் அளித்த சாட்சியம், இந்த வழக்கில் பெரும் ஆதாரமாக மாறியது. அதன் தொடர்ச்சியாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் என மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜெயராஜ் - பென்னிக்ஸ்
ஜெயராஜ் - பென்னிக்ஸ்

ஜூலை 8-ம் தேதி மீண்டும் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு ரேவதி அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். ‘‘இந்தச் சம்பவம் தொடர்பாக மாஜிஸ்ட்ரேட் விசாரணை நடத்தியபோது, மனசாட்சிக்கு ஏற்ப எனக்குத் தெரிந்த அனைத்துத் தகவல்களையும் மறைக்காமல் தெரிவித்துவிட்டேன். சி.பி.சி.ஐ.டி-யிடமும் எல்லாவற்றையும் தெரிவித்து விட்டேன். ஒரு கையெழுத்து போடுவதற்காக மீண்டும் சி.பி.சி.ஐ.டி அலுவலகம் சென்றேன்’’ என்று தெரிவித்தார்.

விடாமல் துரத்தும் சர்ச்சைகள்!

ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்தில் காவல்துறையினருக்கு இணையாகச் சர்ச்சையில் சிக்கியிருப்பது இருவரையும் பரிசோதனை செய்த டாக்டர் வினிலாவும், ரிமாண்ட் செய்ய உத்தரவிட்டு கோவில்பட்டி கிளைச் சிறைக்கு அனுப்பிவைத்த சாத்தான்குளம் மாஜிஸ்ட்ரேட் சரவணனும்தான்.

மருத்துவர் வினிலா, இருவரின் உடலில் இருந்த காயங்களைப் பார்த்துவிட்டு உடற்தகுதிச் சான்றிதழ் தராமல் மூன்று மணி நேரம் காலம் கடத்தியிருக்கிறார். ஆனால், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் அன்று விடுப்பில் இருந்த தலைமை மருத்துவர் ஆத்திக்குமார் ஆகியோர் கொடுத்த அழுத்தத்தால், அவர் உடல் தகுதிச் சான்றிதழில் கையெழுத்திட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர் விடுப்பிலிருக்கும் வினிலாவைத் தொடர்ந்து தொடர்புகொள்ள முயன்றும் பேச முடியவில்லை.

வானத்திலிருந்து குதித்த சி.பி.ஐ! - அடுக்கடுக்கான கேள்விகள்

வினிலா சார்பாகப் பேசிய அவரின் சகோதரர் அமர்நாத் பொன்னுமணி, ‘‘ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்து வந்தபோது, அவர்களை வினிலா பரிசோதனை செய்திருக்கிறார். அவர்களின் கை, கால் மற்றும் உடலிலிருந்த காயங்கள் குறித்து மருத்துவக் குறிப்பில் தெளிவாகக் குறிப்பிட்டிருக் கிறார். அவர்கள் இருவரும் பரிசோதனைக்கு அழைத்து வரப்படும்போதும், மீண்டும் திரும்பிச் செல்லும்போதும் யாருடைய துணையும் இல்லாமல் தாங்களாகவே நடந்து வந்திருக்கிறார்கள். அவர்களின் ரத்த அழுத்தம் உள்ளிட்ட அனைத்தையும் முழுமையாகப் பரிசோதித்து, அதன் அடிப்படையிலேயே அறிக்கை தந்திருக் கிறார். மருத்துவ அறிக்கைகளை மாஜிஸ்ட்ரேட் விசாரணை மற்றும் சி.பி.சி.ஐ.டி விசாரணையின்போது தாக்கல் செய்துள்ளார்’’ என்றார்.

‘‘முதல்லயே சொல்லியிருக்கலாமே?’’

சர்ச்சையில் சிக்கியிருக்கும் சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் சரவணன், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஜெயராஜ், பென்னிக்ஸ் கைதுக்குப் பிறகு அவர்கள் சார்பாக ஜாமீன்மனு தாக்கல் செய்யப்பட்டிருக் கிறது. அப்போது இருவரையும் போலீஸார் கொடூரமாகத் தாக்கியதை அவரின் கவனத்துக்குக் கொண்டுசென்றுள்ளனர். அதிர்ச்சியடைந்த அவர், ‘‘என்னிடம் போலீஸார் ஆஜர்படுத்திய போதே இதைச் சொல்லியிருக்கலாமே?’’ என வேதனைப்பட்டதாக வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

தகவல் சொல்லாத எஸ்.பி ஏட்டு!

காவல் நிலையங்களில் அன்றாடம் நடக்கும் விசாரணைகள், பதிவு செய்யப்படும் வழக்குகள் குறித்து எஸ்.பி அலுவலகத்துக்குத் தகவல் அளிக்க, அந்தந்தக் காவல்நிலையங்களில் எஸ்.பி-யின் தனிப்பிரிவு காவலர் இருப்பார். `இந்தச் சம்பவத்தின்போது தனிப்பிரிவு தலைமைக் காவலரான சந்தனக்குமார் எந்தத் தகவலும் கொடுக்கவில்லை’ என்ற குற்றச்சாட்டு எழுந்திருக் கிறது. அவரைத் தொடர்புகொண்டு கேட்டதற்கு, ‘‘நான் ஆபீஸுக்குள் இருக்கிறேன். வெளியே வந்த பிறகு பேசுகிறேன்’’ என்று சொன்னவர், அதன் பின்னர் தொடர்புகொள்ளவில்லை.

விரிவடையும் விசாரணை வளையம்!

ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் தாக்கிய சம்பவத்தில் தொடர்புடைய எஸ்.எஸ்.ஐ-யான பால்துரை, காவலர்கள் சாமதுரை, செல்லதுரை, கம்ப்யூட்டர் பிரிவில் பணியாற்றும் தாமஸ், வெயிலுமுத்து ஆகிய ஐவரும் கைதாகியிருக்கிறார்கள்.

சிறப்பு சப் இன்ஸ்பெக்டரான பால்துரை, ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் கடுமையாகத் தாக்கியிருக் கிறார். சாமதுரை, செல்லதுரை ஆகியோர் தந்தை, மகன் இருவரையும் தனியார் வாகனத்தில் கோவில்பட்டி கிளைச் சிறைக்கு அழைத்துச் சென்றவர்கள். இவர்களில், தலைமைக் காவலர் சாமதுரை கடந்த குடியரசு தின விழாவில் சிறந்த காவலருக்கான முதலமைச்சர் விருது பெற்றவர்.

பால்துரை - சாமதுரை - செல்லதுரை - தாமஸ் - வெயிலுமுத்து
பால்துரை - சாமதுரை - செல்லதுரை - தாமஸ் - வெயிலுமுத்து

தாமஸ், வெயிலுமுத்து ஆகியோர் சி.சி.டி.வி கேமரா காட்சிகளை முறையாகப் பாதுகாக்காதது, எஃப்.ஐ.ஆரில் திருத்தம் செய்தது, ஆதாரங்களை அழிக்க முயன்றது ஆகியவற்றுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா தன்னார்வலர்களும் தாக்குதலில் ஈடுபட்டதாகப் பரபரப்பு கிளம்பியது. ஆனால், அன்றைய தினம் சொந்த வேலை இருந்ததால் பணிக்குச் செல்லவில்லை என முருகேஷ் ராஜா என்பவர் தெரிவித்ததால், அவரை விசாரணை வளையத்திலிருந்து நீக்கியுள்ளனர் (இது தொடர்பாக அவர் அனுப்பியிருக்கும் மறுப்பை பெட்டிச் செய்தியாக பதிவு செய்துள்ளோம்).

யார் இந்த பால்துரை?

நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட காவல் நிலையங்களில் காவலர், தலைமைக் காவலராக இருந்து சிறப்பு உதவி ஆய்வாளராகப் பதவி உயர்வு பெற்றவர் பால்துரை. அவரின் நெருங்கிய உறவினரான சத்திய நாராயணன், தூத்துக்குடி எஸ்.பி அலுவலகத்தில் பி.ஆர்.ஓ-வாகப் பணிபுரிந்துவருகிறார். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஏற்கெனவே பணிபுரிந்த இடங்களில் அவருக்கு கார் ஓட்டுநராக பால்துரை இருந்ததால், நல்ல அறிமுகம் உண்டு.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் தட்டார்மடம் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்ட பால்துரைக்கும், அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரான ஹரிகிருஷ்ணனுக்கும் இடையே முட்டல் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக விசாரித்த டி.எஸ்.பி பிரதாபன், பால்துரையை சாத்தான்குளம் ஸ்டேஷனுக்குத் தற்காலிகமாக மாற்றியிருக்கிறார்.

சிறை அதிகாரிகளின் விளக்கம்!

சிறைத்துறை அதிகாரிகளுக்கு நெருக்கமானவர்கள் நம்மிடம், ‘‘இந்தியச் சிறைத் தண்டனைச் சட்டப்படி காயமடைந்த சிறைக் கைதிகளை சிறைக்குள் அடைக்கக் கூடாது. ஆனால், நடைமுறையில் அது சாத்தியமில்லை. வழக்கமாக, விசாரணைக் கைதிகளை காவல்துறையினர் அழைத்துவரும் போதே பலருக்குக் காயம் இருக்கும். காவல்துறையினர் நீதிபதி உத்தரவையும், மருத்துவரின் தகுதிச் சான்றிதழையும் சேர்த்தே கொண்டுவருவார்கள். சிறைக்குள் அவர்களை என்ட்ரி போடும்போது கைதியின் உடல்நிலையைப் பொறுத்து நாங்கள் சிறைக்குள் வைப்போம் அல்லது உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்புவோம். நள்ளிரவில் வந்த அந்த இருவரையும் மருத்துவமனைக்குக்கூடக் கொண்டு செல்ல மறுத்துவிட்டார்கள் அவர்களுடன் வந்த காவலர்கள்’’ என்கின்றனர் கோவில்பட்டி சிறைத்துறையினர்.

‘‘உடலில் காயம் இருந்தவர்களை ஏன் மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்லவில்லை?’’ என சி.பி.சி.ஐ.டி தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு, ‘‘கிளைச் சிறையில் மருத்துவ வசதி இல்லாததால், அரசு மருத்துவமனைக்குத்தான் கொண்டு செல்ல வேண்டும். மதுரை மண்டல மருத்துவ இயக்குநரகம் சார்பில், கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் இருப்பதால், அதீத தேவையுள்ள கைதிகளை மட்டுமே அழைத்து வரச் சொல்லி ஏற்கெனவே சுற்றறிக்கை அனுப்பியிருந்தனர். ஜெயராஜ், பென்னிக்ஸ் விஷயத்தில் உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துச் சான்றிதழில் குறிப்பிட்டிருந்ததால், அடுத்தநாள் விசிட்டிங் மருத்துவர் மூலம் பார்த்துக்கொள்ள முடிவு செய்தே நாங்கள் சிறைக்குள் அனுமதித்தோம்’’ என்று விளக்கம் கொடுத்துள்ளார்கள்.

சி.பி.சி.ஐ.டி மீது வியாபாரிகள் நம்பிக்கை!

ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் அடைந்த 16-ம் நாளான ஜூலை 8-ம் தேதி இரவு சாத்தான்குளம் பஜாரில் காமராஜர் சிலை அருகில் ஏராளமானோர் திரண்டு மெழுகுவத்தி அஞ்சலி செலுத்தினர். ‘‘70 சதவிகித விசாரணை முடிந்துள்ளது. இதே நிலையில் விசாரணை தொடர்ந்தால், ஓரிரு மாதங்களுக்குள் முழு விசாரணையும் முடிந்து விடும். சி.பி.ஐ விசாரணையைத் தொடங்கினால் மீண்டும் முதலிலிருந்து தொடங்க வேண்டும். ஏற்கெனவே சி.பி.ஐ விசாரித்த பல வழக்குகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை. அதனால், சி.பி.சி.ஐ.டி விசாரணையே தொடர வேண்டும் என முதல்வருக்கு மனு அனுப்பியிருக்கிறோம்’’ என்றார்கள்.

இனி என்னவாகும் இந்த வழக்கு?

`சி.பி.ஐ கூடுதல் எஸ்.பி-யான விஜய்குமார் சுக்லா இந்த வழக்கை விசாரிப்பார்’ என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஏற்கெனவே இரண்டு எஃப்.ஐ.ஆர்-கள் பதிவு செய்துள்ள நிலையில், சி.பி.ஐ-யும் புதிதாக எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்துள்ளது. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் குறிப்பிட்டுள்ள சி.பி.ஐ., சட்டத்துக்குப் புறம்பாக அடைத்துவைத்தல், கொலை, கொலைக்கான ஆதாரங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருக்கிறது. கொலைக்கான எதிரிகளாக ‘தெரியாத நபர்கள்’ எனக் குறிப்பிடப் பட்டிருக்கிறது.

சி.பி.ஐ விசாரணை குறித்து மூத்த வழக்கறிஞர் களிடம் கேட்டதற்கு, ‘‘சிபிஐ அதிகாரிகள் எந்தச் சிறிய விஷயத்தையும் நுணுக்கமாகவும், ஆழமான பார்வையுடனும் விசாரிப்பார்கள் என்பதால் கைது செய்யப்பட்டவர்களிடம் அவர்கள் விசாரிக்கும்போது முழுமையான தகவலும் கிடைத்துவிடும். சி.பி.ஐ விசாரணையிலிருந்து குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது’’ என்கிறார்கள். ஆனாலும், சி.பி.ஐ கையாண்ட பிற பெரும்பாலான வழக்குகளில் அந்த அமைப்பு வெற்றி பெற இயலவில்லை. அதனால், இந்த வழக்கை சி.பி.ஐ எப்படிக் கையாளப்போகிறது என்பது போகப் போகத்தான் தெரியும்!

காட்டிக்கொடுக்குமா கைலி?

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரையும் விசாரணை முடிந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்ல காவல்துறையினர் முடிவு செய்தனர். அப்போது ஜெயராஜ் உடையில் ரத்தக் கறை இருந்தது. எனவே, ஜெயராஜ் உறவினர்கள் மூலம் வேறு ஒரு கைலியை எடுத்துவரச் செய்து, மாற்றச் சொல்லியிருக்கிறார்கள். ரத்தக்கறை படிந்த கைலியை காவல்துறையினர், உறவினர்கள் வசமே கொடுத்துள் ளனர். அந்தக் கைலியிலிருந்த ரத்தக் கறையை இப்போது காவல்துறைக்கு எதிராகச் சாட்சியமாக்கியிருக்கின்றனர். அந்த ரத்தக்கறையை டி.என்.ஏ ஆய்வுக்கு அனுப்பி, அது யாருடைய ரத்தம் என்பதை விசாரணை அதிகாரிகள் உறுதிசெய்ய உள்ளார்கள்.

மறுப்பு

12.7.2020 தேதியிட்ட கடந்த ஜூ.வி இதழில், ‘சாத்தான்குளம்... வேகமெடுக்கும் விசாரணை... திசைதிருப்பும் சக்திகள்’ என்ற தலைப்பில் அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இந்தநிலையில் எஸ்.பி.முருகேஷ்ராஜா என்பவர் நமக்கு ஒரு மறுப்பை அனுப்பியிருக்கிறார். அதில், ‘அந்தக் கட்டுரையில் ஐந்து நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டு, அவற்றுக்குக் கீழே பெயர்களைக் குறிப்பிட்டுள்ளீர்கள். அதில் `முருகேஷ்ராஜா’ என்றும் ஒரு படத்தின் கீழ் குறிப்பிட்டுள்ளீர்கள். அந்தப் படத்துக்கும் எனது பெயருக்கும் சம்பந்தம் இல்லை. இது மிகவும் தவறாகும்.

நான் கொரோனா காலத்தில் தன்னார்வலராக மட்டுமே பணியாற்றிவந்தேன். எனக்கும் சாத்தான்குளம் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸுக்கும் சம்பந்தம் இல்லை. தங்களின் தவறான தகவலால் எனது எதிர்காலம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நான் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிவருகிறேன். ஆகவே, இதழிலும், விகடன் வெப்சைட்டிலும் வெளியான செய்திக்கு மறுப்பை வெளியிட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில், ‘ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ உடன் சேர்ந்து கொரோனா தன்னார்வலர்கள் சிலரும் போலீஸாருடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்பட்டது. அதன் அடிப்படையில் கிடைத்த தகவல்கள் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தியிருந்தோம். இதில்தான் தவறு நேர்ந்துவிட்டது. இதனால் முருகேஷ்ராஜாவுக்கு எற்பட்டிருக்கும் சிரமங்களுக்காக வருந்துகிறோம்.

- ஆசிரியர்