சாத்தான்குளம் காவல் நிலயத்தில் தந்தை-மகன் தாக்கப்பட்டு மரணமடைந்த வழக்கில், உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் எஸ்.ஐ-க்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2020-ம் ஆண்டு சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கை முதலில், சி.பி.சி.ஐ.டி விசாரித்து, தற்போது சி.பி.ஐ விசாரித்து வருகிறது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த வழக்கில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ உள்ளிட்ட 10 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர். ஒருவர் சிறையிலேயே இறந்துவிட, 9 பேருக்கு எதிராக மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் தினமும் விசாரணை நடந்து வருகிறது. இதுவரை 22 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். ஒவ்வொருவரின் சாட்சியமும் கேட்பவரை அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் இருக்கிறது.

இந்த நிலையில், குற்றவாளிகள் தரப்பில் ஜாமீன் கேட்டு தொடர்ந்து மனுத்தாக்கல் செய்து வருகிறார்கள். ஆனால், சி.பி.ஐ தரப்பில் அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால் ஜாமீன் மறுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த வழக்கில் கைதாகி சிறையிலிருக்கும் எஸ்.ஐ ரகு கணேஷ் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த ஜாமீன் மனுவில், ``கடந்த 20 மாதங்களாக சிறையில் இருக்கிறேன். 105 சாட்சிகளில் 22 பேரிடம்தான் இதுவரை விசாரணை நடந்துள்ளது. விசாரணை முடியும்வரை காவலில் வைத்திருப்பது சட்டவிரோதமானது. எனவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என்று கேட்டிருந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிட்ட சி.பி.ஐ தரப்பு வழக்கறிஞர், ``காவல்துறைக்கு கொடுக்கப்பட்ட அதிகாரம் மக்களை பாதுகாக்கத்தான். இந்த வழக்கை பொறுத்தவரையில் இரண்டு மனிதர்கள் காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்கள். இதை நிரூபிக்கும் முக்கியமான சாட்சியங்கள் உள்ளனர்.
தற்போது வழக்கை விசாரித்து வரும் நீதிமன்றத்தில் சாட்சியங்கள் பதிவு செய்யபட்டு வருகின்றன. இந்நிலையில் இவர்களுக்கு ஜாமீன் கொடுத்தால் வழக்கின் உறுதித்தன்மை பாதிக்கும்" என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ``ஒருவருடத்துக்கும் மேலாக சிறையில் இருக்கிறவர்களுக்கு ஜாமீன் மறுக்க முடியாது" என்றனர்.

அதற்கு சி.பி.ஐ தரப்பு வழக்கறிஞர், ``கொரோனா காலத்தில் வழக்கு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இப்போதுதான் வழக்கு விசாரணை விரைவாக நடக்கிறது. அதனால் ஜாமீன் வழங்க கூடாது" என்றனர். அதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் ஜாமீன் வழங்காமல் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.