அரசியலூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பா.ஜ.க மற்றும் இந்துத்துவா அமைப்புகள் மாணவியின் மரணத்துக்குப் பள்ளி நிர்வாகம் மதம் மாறச் சொல்லி வற்புறுத்தியதே காரணம் எனச் சொல்லி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன.
மாணவியின் வாக்குமூலத்தில் குளறுபடி ஏற்பட்டதாகச் சிறப்புப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ததை அடுத்து, இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என மாணவியின் பெற்றோர் உட்பட பலர் கோரிக்கை முன்வைத்துவந்தனர். இதற்கிடையே, இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க பா.ஜ.க சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழு இன்று காலை முதல் பள்ளி நிர்வாகம் உட்பட பலரிடம் விசாரணை நடத்திவருகிறது.
அதேபோல, தற்கொலை செய்துகொண்ட மாணவியின் பெற்றோர் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டுமென்று உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இந்த நிலையில், மாணவியின் பெற்றோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, அவர்களின் கோரிக்கையை ஏற்று, இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறது.
