
அயோத்தி பிரச்னைக்கு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்துப் பெரிய அளவில் எதிர்ப்புகள் இல்லை.
தமிழகத்தில் தொல்.திருமாவளவன், சீமான், திருமுருகன், வேல்முருகன் மற்றும் சில இஸ்லாமிய அமைப்புகளும் ஹைதராபாத்தைச் சேர்ந்த முஸ்லிம் இயக்கத்தலைவர் ஓவைசியும் எதிர்ப்பைப் பதிவுசெய்திருந்தனர். ‘இந்தத் தீர்ப்பை விமர்சிப்பது மீண்டும் சமூகப்பதற்றத்தையோ மதக்கலவரங்களையோ ஏற்படுத்திவிடக்கூடாது’ என்கிற அணுகுமுறை இடதுசாரி இயக்கங்களிடமே இருந்தது. எந்த ஒரு தீர்ப்புக்கும் உள்நோக்கம் கற்பிப்பதுதான் குற்றமே தவிர, தீர்ப்பின் மீதான தங்கள் பார்வைகளை முன்வைப்பது தவறில்லை. 18ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இந்தப் பிரச்னைக்கு சரியான நீதிதான் வழங்கப்பட்டிருக்கிறதா, தீர்வை அளித்ததா தீர்ப்பு என்று இருதரப்பிடமும் கேட்டோம்.
அரசியல் சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து பேசும் பேராசிரியர் அ.மார்க்ஸ், ‘‘1528-ம் ஆண்டு முதல் அங்கே ஒரு மசூதி இருந்தது. 450 ஆண்டுகளாக அங்கே முஸ்லிம்கள் தொழுகை நடத்தியுள்ளனர். 1992-ல் அது உலகின் கண்முன் ஒரே நாளில் இடித்து வீழ்த்தப்பட்டது. இது தொடர்பான வழக்குகளில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் ஆணையின்படி நடத்தப்பட்ட அகழ்வாய்வு, ‘மசூதிக்கு முன் அங்கொரு கட்டுமானம் இருந்தது’ என்று கூறியுள்ளது. ஆனால், அது ஒரு கோயில், அதுவும் ராமர் கோயில் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அது ஒரு நம்பிக்கை மட்டுமே.

இவை அனைத்தையும் நவம்பர் 9-ல் அளிக்கப்பட்டுள்ள உச்சநீதிமன்றத் தீர்ப்பும் ஏற்றுக்கொண்டுள்ளது. கூடுதலாக நாம் நினைவில் கொள்ளவேண்டியது ‘இந்த வழக்கு, மசூதி இருந்த அந்த 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் எனத் தீர்மானிக்கும் வழக்கு மட்டும்தான்’ என்பதுதான் 5 நீதிபதிகள் அமர்வின் கருத்து. நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படை நமது அரசியல் சட்டம் மட்டுமே. அதைக்காட்டிலும் எதுவும் அடிப்படையானதாகவோ புனிதமானதாகவோ இருக்க முடியாது – ‘நம்பிக்கை’ உட்பட.
நம்பிக்கைகள் என்பவை பரஸ்பரம் போற்றி மதிக்கப்பட வேண்டியவை என்பதை யாரும் மறுக்க இயலாது. ஆனால் அதுவே ஒரு வழக்குக்கு ஆதாரமாக இருக்க முடியாது. தீர்ப்புக்கு அடிப்படையாக சட்டவிதிகளும் ஆதாரங்களும் மட்டுமே இருக்க முடியும். எப்படி ஒரு தீர்ப்புக்கு நம்பிக்கை அடிப்படையாக இருக்க இயலாதோ அப்படியே வழக்காடுபவர்களின் தரப்பு எண்ணிக்கை அதிகம் கொண்டதா, இல்லையா என்பதும் அடிப்படையாக இருக்க முடியாது.
எந்த ஒரு நம்பிக்கையையும் மதத்தையும் கடைப்பிடிப்பது என்பது இந்திய மக்களுக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை. இவற்றில் தங்கள் வழிபாட்டுத் தலத்தைப் பாதுகாக்கும் உரிமையும் அடங்கும். அந்த வகையில் இந்தத் தீர்ப்பு அரசியல் சட்ட அடிப்படை உரிமை ஒன்றைப் பறித்துள்ளது. ஆம், நம்பிக்கை என்பது சட்டத்தின் ஆட்சிக்கு எதிராக வைக்கப்பட்டு, சட்டத்தின் ஆட்சி பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பில் துருத்திக்கொண்டு நிற்கும் ஒரு வெளிப்படையான முரண்பாடு என்னவெனில், ‘நிலம் தொடர்பான வழக்கொன்றைத் தீர்மானிப்பதில் நம்பிக்கைக்கு இடமில்லை’ என்று அதே தீர்ப்பில் சொல்லிவிட்டு, இறுதியில் ‘இந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று இந்துக்கள் நம்புகிறார்கள்’ என்று நம்பிக்கையின் அடிப்படையிலேயே ‘அயோத்தி நிலம் இந்துக்களுக்குச் சொந்தம்’ என்று சொன்னதுதான்.

இது குடிமக்கள் அரசியல் சட்டத்தின்மீது நம்பிக்கை இழப்பதற்கே இட்டுச் செல்லும். அந்த வகையில் 2019 நவம்பர் 9 என்பது நமது அரசியல் சட்ட வரலாற்றில் ஒரு வேதனை மிகு நாளாகவே பதியப்படும். ஒரு சில முஸ்லிம் அமைப்புகள், சிறு குழுக்கள் தவிர, இடதுசாரிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டிருப்பது இன்னும் பெரிய சோகம். நீதிமன்றத் தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பிக்கக்கூடாதே ஒழிய அதை விமர்சிக்கும் உரிமை குடிமக்களுக்கு உண்டு என்பதை எப்படி அவர்கள் புறக்கணித்தார்கள்? வரலாற்றின் முன் அவர்கள் இந்தக்கேள்விக்குப் பதிலளித்தே ஆக வேண்டும்’’ என்றார்.
“பன்மைத்துவத்தில் ஒற்றுமையைக் காணும் இந்திய அரசியல் அமைப்பின் அடிப்படையையே ஆட்டம் காணவைத்துவிட்டது இந்தத் தீர்ப்பு” என்கிறார் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் தியாகு.
“1992 டிசம்பர் 6-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, ‘மீண்டும் அதே வடிவத்தில் பாபர் மசூதி கட்டித் தரப்படும்’ என்று இந்திய அரசு ஏற்கெனவே உறுதியளித்திருந்தது. அந்த உறுதிமொழி இப்போது மீறப்பட்டுள்ளது. இது நம்பிக்கைகளையும் சாஸ்திரங்களையும் அடிப்படையாகக் கொண்ட தீர்ப்புதானே தவிர, சட்டத்தையும் உண்மையையும் அடிப்படையாகக் கொண்டதல்ல.
80-களின் இறுதியில் ரத யாத்திரை தொடங்கியபோது, ‘அயோத்தியில்தான் ராமர் பிறந்தார் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதை நிரூபணமெல்லாம் செய்யமுடியாது’ என்றார் எல்.கே.அத்வானி. பதிலளித்துப் பேசிய அன்றைய பிரதமர் வி.பி.சிங், ‘இந்துக்களின் நம்பிக்கை மட்டுமே இருக்கிறதென்றால், எந்தவிதப் பிரச்னையும் இல்லை. ஆனால், ‘இது ராமர் பிறந்த இடம் அல்ல. இந்துக் கோயிலை இடித்துவிட்டு பாபர் மசூதி கட்டப்படவில்லை’ என்று இன்னொரு நம்பிக்கையும் இருக்கிறபோது, மதச்சார்பற்ற அரசு இவையிரண்டில் எதை ஏற்றுக்கொள்வது? எனவே உண்மை என்னவென்பதை நீதிமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும்’ என்றார்.

இப்போது நீதிமன்றத் தீர்ப்பு என்ன சொல்கிறது? ‘இந்துக்கோயிலை இடித்து விட்டுதான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்று சொல்வது தவறு. அதேசமயம் ராமர் இங்குதான் பிறந்தாரா என்பதையெல்லாம் நாங்கள் ஆராயமுடியாது. அது சாஸ்திரம் நம்பிக்கை சார்ந்தது’ என்றெல்லாம் சொல்லிவிட்டு, இந்துக்களே இங்கு கோயில் கட்டிக்கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கினால், இந்திய அரசியலமைப்பின் அடிப்படையே மதச்சார்பின்மைதான் என்று எப்படிச் சொல்ல முடியும்?
‘இந்துத்துவாவுக்கு நாங்கள்தான் மாற்றுசக்தி. எங்களுக்கு வாக்களித்தால், சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும்’ என்றெல்லாம் சொல்லி வாக்கு சேகரித்த தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி உள்ளிட்ட கட்சிகளும்கூட இந்தத் தீர்ப்பைக் கண்டிக்கவில்லை. ‘பாபர் மசூதியை இடித்தது தவறு; மீண்டும் அங்கே பாபர் மசூதியைக் கட்டித்தர வேண்டும்’ என்றெல்லாம் இத்தனை ஆண்டுக்காலமாகக் கேள்வி கேட்டுக்கொண்டும் இஸ்லாமிய அமைப்புகளோடு சேர்ந்து போராடிக்கொண்டிருந்ததற்கும் அர்த்தமே இல்லாமல்போய்விட்டதே! சுருக்கமாகச் சொன்னால், எல்லோருமே இந்தப் பிரச்னையைக் கைகழுவத்தான் பார்க்கிறார்கள். அரசியலுக்காகத் தலைவர்கள் எதுவேண்டு மானாலும் பேசிக்கொள்ளலாம். ஆனால், இஸ்லாமியர்களின் மனதில் இது ஆழமான காயத்தைத்தான் ஏற்படுத்தும்’’ என்கிறார் தியாகு.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் க.பாலபாரதி, “இந்த விவகாரத்தில், அரசியல் கட்சிகள் எடுத்திருக்கும் முடிவுகளை எல்லோராலும் புரிந்துகொள்ள முடியும். ஆனால், நீதிபரிபாலனத்திலிருந்து தீர்ப்பு வழங்கக்கூடிய நீதிமன்றமே இப்படியொரு தீர்ப்பு வழங்கியிருப்பதைப் பொதுமக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதேநேரம் அரசியல் கட்சித் தலைவர்களும்கூட மக்களின் இந்த உணர்வுகளைப் பிரதிபலிக்காமல் போனதுதான் வேதனைக்குரியது. நான் அறிந்தவரையில், இந்துக்களிலேயே பலரும் இந்தத் தீர்ப்பை விரும்பவில்லை.
நாட்டின் சிக்கலான பிரச்னைகளில் ஆய்ந்து முடிவெடுக்கக்கூடிய துறையாக உயர்ந்த இடத்தில் இருப்பவை நீதிமன்றங்கள்தான். ‘கோயில் கட்டலாமா, கூடாதா’ என்ற உணர்வுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அதையும் தாண்டி பிரச்னையை எப்படி அணுகவேண்டும் என்ற கவனமும் உரிய தீர்வளிக்கவேண்டிய பொறுப்பும் நீதிமன்றங்களுக்குத்தான் உண்டு. அயோத்தி வழக்கின் தீர்ப்பு என்பது தனிப்பட்ட முறையில் எனக்குப் பேரதிர்ச்சிதான்!’’ என்றார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்துப் பல்வேறு தரப்பினரும் கொண்டுள்ள விமர்சனங்களுக்கு விளக்கம் கேட்டு, பா.ஜ.க-வின் அகில இந்திய தேசிய செயற்குழு உறுப்பினரும், தமிழக பா.ஜ.க-வின் மையக் குழு உறுப்பினருமான சி.பி.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்.

“அனைவரின் மத உணர்வுகளையும் மதிக்க வேண்டும். அதேநேரம் இந்தப் பிரச்னையை இன்னும் நீண்ட நாள்களுக்கு இழுத்துக் கொண்டே போவது எதிர்கால இந்திய முன்னேற்றத்துக்கு உதவாது என்பதையும் கருத்தில்கொண்டுதான், இப்படியொரு அருமையான தீர்ப்பைத் தந்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.
‘இஸ்லாமியர்களுக்குப் புதிய மசூதியைக் கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படவேண்டும்’ என்று தீர்ப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது, காலம் காலமாகக் காக்கப்பட்டு வரும் மதச்சார்பின்மையை வெளிப்படுத்துகிறது. ‘பாபர் மசூதி, இன்னொரு கட்டடம் இருந்த இடத்தில்தான் கட்டப்பட்டிருக்கிறது. ஆனால், கோயிலை இடித்துவிட்டுத்தான் கட்டப்பட்டது என்று சொல்லப்படுவதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை’ என்று உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொல்லியிருப்பதே, ஒரு சாராரின் நம்பிக்கைக்கு ஆதரவாக நீதிமன்றம் செயல்படவில்லை என்பதற்கான சாட்சி.
இருவேறு பிரிவினருக்கிடையேயும், வேற்றுமையைக் களைந்து மன ஒற்றுமையை ஏற்படுத்துகிறவிதத்திலான இந்தத் தீர்ப்பை, எல்லோரும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதிலும் அரசியல் செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள்தான் குறை கூறிக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால், தமிழ்நாட்டில்தான் இத்தகையவர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இரண்டு சமூகங்களும் தொடர்ந்து ஒருவரையொருவர் வெறுத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள்தான் இந்தத் தீர்ப்பைக் குறை கூறிக்கொண்டிருக்கின்றனர்’’ என்கிறார்.
இருதரப்பும் எதிரெதிர் வாதங்களை முன்வைத்தாலும், இது இறுதித்தீர்ப்பு என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இனி வரும் காலங்களில் மதநல்லிணக்கமும் சமூக ஒற்றுமையும் வலுப்படுவதற்கான முயற்சிகளை அனைவரும் மேற்கொள்ள வேண்டும். எந்த ஒரு சமூகமும் தனிமைப்பட்டதான உணர்வை அடைவது, தேசத்தின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல.