Published:Updated:

``என்.ஆர்.சி அவசியமானது” - உச்சநீதிமன்றத்தில் உண்மையை உடைத்த மத்திய அரசு

மோடி - அமித் ஷா
மோடி - அமித் ஷா

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிற சி.ஏ.ஏ வழக்கில் மத்திய அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் மூன்று மாதங்களாக இந்தியாவை ஆக்கிரமித்த சி.ஏ.ஏ நெருப்பு சிறிது அணைந்திருக்கிறது. போராட்டங்கள் பின்வாங்கப்பட்டிருக்கின்றன. என்.பி.ஆர் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாநிலமாக என்.பி.ஆருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மாநில அரசின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே என்.பி.ஆர் பணி மேற்கொள்ள முடியும் என்கிற நிலையில் மத்திய அரசு செய்வதறியாது திணறி வருகிறது.

இந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் இந்தியாவிலும் பரவலாக உணரப்பட்டு வருகிறது. அரசு நிர்வாகங்கள் முடங்கியுள்ளன, அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைகள் மட்டுமே முழு வீச்சில் இயங்கி வருகின்றன. இவற்றுக்கிடையே மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிற சி.ஏ.ஏ வழக்கில் முதல்கட்ட பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

என்.ஆர்.சி
என்.ஆர்.சி

அதில் சி.ஏ.ஏ-வுக்கு ஆதரவான தன்னுடைய வாதங்களை முன்வைத்துள்ளது. சி.ஏ.ஏ-வை இந்தியா முழுவதும் பல மாநிலங்கள், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வருகிற சூழலில் சி.ஏ.ஏ-வில் இருந்து ஒரு அங்குலம் கூட பின்வாங்கப்போவதில்லை என மத்திய அரசு சொல்லி வருகிறது. சி.ஏ.ஏ-வை தனித்துப் பார்த்தால் அதில் பெரிதும் பிரச்னை இருப்பதாகத் தெரியவில்லை. அதுவே என்.ஆர்.சி, அதற்கு முன்னோட்டமான என்.பி.ஆருடன் இணைத்துப் பார்த்தால் இது பாதகமானது என இதை எதிர்க்கும் தரப்பினர் சொல்லி வருகின்றனர். சிஏஏவை எதிர்த்து பலரும் வழக்குத் தொடர்ந்திருந்தினர்.

சி.ஏ.ஏ உடன் என்.ஆர்.சி - என்.பி.ஆருக்கும் தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில் இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று சம்மந்தப்பட்டது இல்லை என மத்திய அரசு கூறி வந்தது. என்.ஆர்.சி பற்றிய பேச்சே தற்போது இல்லை என்றும் என்.பி.ஆர் அவசியமான ஒரு நடவடிக்கை என்றே கூறிவந்தது. என்.ஆர்.சி இல்லை என்று அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கைக்கும் மத்திய அரசு தற்போது வரை செவிசாய்க்கவில்லை.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

இந்த நிலையில் தற்போது உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் 'என்.ஆர்.சி அவசியமான ஒரு நடவடிக்கை' என்று தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. சி.ஏ.ஏ சட்டம் நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு அதன் பரிசீலனைகள் சேர்க்கப்பட்டுதான் சட்டவடிவம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

சி.ஏ.ஏ: சட்டம் நிறைவேறி நூறு நாட்கள்: இதுவரை நடந்தவற்றின் தொகுப்பு

மனுவில் எழுப்பப்பட்டுள்ள பிரதானமான கேள்விகளும் மத்திய அரசின் பதிலும்:

குடியுரிமை திருத்தச் சட்டத்தில் பாகிஸ்தான் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து ஆறு மதத்தினரை மட்டும் தேர்வு செய்தது ஏன்?

இந்த மூன்று நாடுகளும் மதச்சார்புள்ள நாடுகள், அரசியலமைப்பில் இஸ்லாமை அரச மதமாக ஏற்றுக்கொண்டுள்ள நாடுகள். இதனால் மற்ற மதச் சிறுபான்மையினர் இங்கு ஒடுக்குமுறைகளைச் சந்தித்துள்ளனர். இந்தியாவைச் சுற்றியும் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உள்ள பிரச்னைகள் அனைத்தும் குறித்து இந்திய அரசு கவனம் செலுத்த முடியாது. இந்த மூன்று நாடுகளுக்கும் இந்தியா உடன் வரலாற்றுத் தொடர்புகள் இருப்பதால் இவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

சி.ஏ.ஏ
சி.ஏ.ஏ

மியான்மர் ரோஷிங்யாக்களை, இலங்கைத் தமிழர்களைச் சேர்த்துக்கொள்ளவில்லை?

எந்த நாடுகளைச் சேர்த்துக்கொள்ளலாம், வேண்டாம் என்பது அரசின் வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்து நாடாளுமன்றம் முடிவெடுக்கும். நீதிமன்றம் அதைக் கேள்வி கேட்க முடியாது. ரோஹிங்யா முஸ்லிம்கள் மத ரீதியாக ஒடுக்கப்படவில்லை. அவர்கள் பொருளாதார வாய்ப்புகளைத் தேடியே இந்தியாவுக்கு வருகின்றனர்.

பாகிஸ்தானில் அஹமதியா போன்ற சில முஸ்லிம் பிரிவினரும் ஒடுக்குமுறைகளை எதிர்கொள்கிறார்களே. அவர்களை ஏன் சேர்த்துக்கொள்ளவில்லை?

மதத்திற்குள் இருக்கின்ற பிரிவுகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய தேவையில்லை. இந்த நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு இந்திய அரசு ஏற்கெனவே பல விதிவிலக்குகளை அளித்திருக்கிறது.

சர்வதேச சட்டங்களை சி.ஏ.ஏ சட்டம் மீறுகிறது என்கிற குற்றச்சாட்டு?

இந்தியா கையொப்பமிடாத எந்தவொரு சர்வதேச உடன்படிக்கைக்கும் கட்டுப்பட வேண்டிய தேவையில்லை. சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நாடு கடத்துவது அரசின் முடிவுக்குட்பட்டது, நீதிமன்றம் அதில் தலையிட வேண்டிய தேவையில்லை.

தேசிய குடிமக்கள் பதிவேடு என்.ஆர்.சி செயல்படுத்த தடைவிதிக்க வேண்டும்?

என்.ஆர்.சி என்பது இறையாண்மை உள்ள எந்த நாட்டிற்கும் அவசியமானது. இது 2004-ம் ஆண்டு அமலுக்கு வந்த குடியுரிமை சட்டத்திருத்தத்திலே இருக்கிறது. சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டறிந்து வெளியேற்ற வேண்டியது அரசின் தேவை.

 என்.ஆர்.சி
என்.ஆர்.சி

மேற்கண்டவாறு தன்னுடைய மனுவில் பதிலளித்துள்ளது. சி.ஏ.ஏ மூலமாக இந்திய குடிமக்கள் யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லை என்றும் மத்திய அரசு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது. என்.ஆர்.சி பற்றிய பேச்சு தற்போதைக்கு இல்லை என பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கூறிவந்த நிலையில் ‘என்.ஆர்.சி அவசியமானது’ என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது மீண்டும் சி.ஏ.ஏ - என்.ஆர்.சி - என்.பி.ஆர் பற்றிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு