Published:Updated:

முன்னாள் அமைச்சர் வீரமணி வேட்புமனுவில் தவறான தகவல்கள்?! - பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி

வேட்புமனுவில், தவறான தகவல்களைக் குறிப்பிட்டிருப்பதாகத் தொடரப்பட்ட வழக்கில், இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு தி.மு.க வேட்பாளரிடம் தோல்வியடைந்தார் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி. அப்போது, வீரமணி தாக்கல் செய்திருந்த வேட்புமனுவிலும், பிரமாணப் பத்திரத்திலும் தவறான தகவல்களைத் தெரிவித்திருந்ததாகவும், அது தொடர்பான ஆதாரங்களுடன் புகாரளித்தபோதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லையென்றும் வேலூரைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று காலை 10:50 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ``முன்னாள் அமைச்சர் வீரமணி தனது வேட்புமனுவில், வருமான வரியின் ‘பான்’ எண்ணைத் தவறாக குறிப்பிட்டிருந்தார். அந்த பான் எண்ணுடன் வீரமணியின் சொத்து விவரங்கள் ஒத்துப்போகவில்லை. எனவே, வீரமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

நீதிமன்றம்
நீதிமன்றம்

இதற்கு பதிலளிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ``வீரமணி மீதான புகார் குறித்து மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் முறையிடுமாறு கூறி அவர்கள் கொடுத்த மனுவை முடித்துவைத்துவிட்டோம். 1966-ம் ஆண்டுக்கு முன்புவரை வேட்புமனுவில் தவறான தகவல்கள் அளிக்கும் வேட்பாளர்களுக்கு எதிராகத் தேர்தல் ஆணையமே புகாரளித்துவந்தது. அதன் பிறகு, யார் வேண்டுமானாலும் குற்ற நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது’’ என்று தெரிவித்தார். இதையடுத்து, மனுதாரரின் புகார் தொடர்பாக தேர்தல் ஆணையமும், முன்னாள் அமைச்சர் வீரமணியும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

இதையடுத்து, வீரமணிக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக, வீரமணியிடம் விளக்கம் கேட்க அவரின் செல் நம்பரைத் தொடர்புகொண்டோம். போனை எடுத்துப் பேசிய வீரமணியின் உதவியாளர், ``கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் மூன்று நாள்களுக்கு நடக்கிறது. இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் கூட்டத்தில் அண்ணன் பேசிக்கொண்டிருக்கிறார்’’ என்றுகூறி அழைப்பைத் துண்டித்துவிட்டார்.

அடுத்த கட்டுரைக்கு