சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பட்டியல் சமூக இளைஞர் பொறியாளர் கோகுல்ராஜ். இவர், 2015-ம் ஆண்டு, ஜூலை மாதம், 24 -ம் தேதி நாமக்கல் மாவட்டம், தொட்டிப்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். கோகுல்ராஜ், கல்லூரியில் படிக்கும்போது சுவாதி என்ற பெண்ணைக் காதலித்ததாகவும், அவர்கள் இருவரும் 2015-ம் வருடம், ஜூலை மாதம் 23-ம் தேதி திருச்செங்கோடு மலைக் கோயிலுக்கு வந்திருந்தபோது, கோகுல்ராஜ், யுவராஜ் தரப்பினரால் கடத்தப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் கோகுல்ராஜ் ஆணவக்கொலை செய்யப்பட்டதாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
கோகுல்ராஜ் கொலை வழக்கு, உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில், மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில், கைதான சேலம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அருண், குமார் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய பத்து பேருக்கும் சாகும்வரை சிறைத் தண்டனை விதித்தும், ஐந்து பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட நீதிமன்றம் கடந்த வருடம் மார்ச் 8-ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில், மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பை எதிர்த்து, யுவராஜ் உள்ளிட்ட பத்து பேரும், ஆயுள் தண்டனையை ரத்துசெய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

அதேபோல, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சங்கர் உள்ளிட்ட ஐந்து பேர் சிறப்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, கோகுல்ராஜின் உறவினர்களும், இந்த வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி போலீஸ் தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதி பிறழ் சாட்சியமாக மாறினார். வீடியோ காட்சிகளைவைத்து நீதிபதிகள் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்ததால், விசாரணை நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் சுவாதி மாறி மாறி சாட்சியம் அளித்ததாகக் கூறி, நீதிமன்றமே தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவுசெய்தது. அதுசம்பந்தப்பட்ட விசாரணை, சுவாதி தாய்மையடைந்த நிலையில் இருப்பதால், அவர் கணவரிடம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கில் கோகுல்ராஜின் தாயார், அரசு தரப்பு, சி.பி.சி.ஐ.டி தரப்பு வாதங்கள் நிறைவடைந்தபடியால், இந்த வழக்கில் சிறையிலிருக்கும் யுவராஜ் உள்ளிட்ட மேல்முறையீடு செய்தவர்கள் தரப்பு வாதங்களுக்காக வழக்கு விசாரணையை 20-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர். அதேபோல், கோகுல்ராஜ் கடைசியாக இருந்ததாக சி.சி.டி.வி காட்சிகளில் பதிவான நாமக்கல் மாவட்டத்திலிருக்கும் திருச்செங்கோட்டில் அமைந்திருக்கும் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வுசெய்ய உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், நீதிபதிகள் அறிவித்தபடி, நேற்று முற்பகல் 11:40 மணிக்கு கோகுல்ராஜ் மரணம் குறித்து சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வுசெய்ய உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் கோயிலுக்கு வருகை தந்தனர். கோயிலின் மேற்குப்புற வாசலில் அர்த்தநாரீஸ்வரர் கோயில் கொடிமரத்தின் அருகிலுள்ள சி.சி.டி.வி கேமராக்களைப் பார்வையிட்டனர். அதன் வழியாக, கோகுல்ராஜ் சுவாதியும் உள்ளே வரும் காட்சியும், யுவராஜ், அவரின் கும்பலுடன் வெளியே வரும் காட்சியும் பதிவாகியிருக்கிற நிலையில், மீண்டும் கோயிலுக்குள் வந்த யுவராஜ், அவரின் ஆட்கள் எந்த வழியாக வெளியேறினார்கள், வெளியேறுவதற்கான வாய்ப்புகள் என்ற அளவிலும் இந்த ஆய்வை அவர்கள் மேற்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. ராஜகோபுரம் உள்ளிட்ட நான்கு புற வாயில்களிலும் உள்ள கேமராக்கள், கேமரா இல்லாத பகுதிகள் எவை என்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. சேலம் சரக டி.ஐ.ஜி, நாமக்கல் மாவட்ட எஸ்.பி., போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நீதிபதிகள் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் ஆய்வை முடித்தபிறகு, கோகுல்ராஜ் உடல் கிடந்த ரயில்வே டிராக் உள்ள கிழக்கு தொட்டிப்பாளையம் பகுதிக்குச் சென்று, அங்கும் ஆய்வை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வுக்கு பின், செய்தியாளர்களிடம் பேசிய கோகுல்ராஜ் தரப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன், "நாமக்கல்லில் முறையாக விசாரிக்க முடியாததால், மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. கடந்த, 2019 தொடங்கி 05.03.2022 ல், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிற 15 பேரில், யுவராஜ் உட்பட 10 பேருக்கு மூன்று வாழ்நாள் சிறை, சாகும் வரை கொடுக்கப்பட்டது. தவிர, ஐந்து பேர் விடுவிக்கப்பட்டார்கள். தண்டிக்கப்பட்ட 10 பேர் மீது கூட 26 குற்றச்சாட்டுகளில் நான்கு மட்டுமே நிரூபிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆகவே தண்டிக்கப்பட்ட யுவராஜ், அவர் சார்ந்திருக்கிற ஒன்பது பேரும் சேர்ந்து தண்டனையைக் குறைக்கக் கோரி மேல்முறையீடு செய்தார்கள். பாதிக்கப்பட்ட கோகுல்ராஜின் தாயார் சித்ரா, ஐந்து பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். அரசும் அப்பீல் செய்தது. இந்த எல்லா வழக்குகளையும் சேர்த்து உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
மூத்த நீதிபதி ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அமர்வில் வழக்கு விசாரிக்கப்பட்டது. அப்படி, விசாரிக்கப்பட்டபோது, `சுவாதி பொறியியல் படித்திருக்கிறவர். மாஜிஸ்ட்ரேட் முன்னாள் வாக்குமூலம் கொடுத்தவர், எப்படி பிறழ்சாட்சியாக மாறினார்?’ என்பதை ஆராய்ந்து பார்த்துவிட்டு, சுவாதியை மீண்டும் விசாரிப்பதற்காக குற்ற விசாரணை சட்டம் 391-ன் படி, 175 வது பிரிவைப் பயன்படுத்தி சுவாதியை மீண்டும் நீதிமன்றத்துக்கு வரவழைத்தார்கள்.
அப்படி, வரவழைத்து கேட்டபோது, கோகுல்ராஜும், சுவாதியும் சேர்ந்து இந்த மலைக்குச் சென்று சாமி கும்பிட்டுவிட்டு உள்ளே உள்ள திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது பற்றிய சி.சி.டி.வி காட்சிகளைப் போட்டுக் காண்பித்து கேட்டபோது, சுவாதி மீண்டும், தவிர்க்க முடியாமல் சூழ்நிலை காரணமாக தன்னைப் பற்றி கேட்கிறபோது, 'தெரியாது' என்றதோடு, கோகுல்ராஜை மட்டுமே அடையாளம் காண்பித்தார். ஆகவே, அவரின் படிப்புத் திறன் சொல்லி, இருக்கக் கூடிய சாட்சிகளை வைத்து மீண்டும் கேட்டபோதும் கூட, அதையே சுவாதி திரும்பச் சொன்னதால், `கண்டம் ஆப் த கோர்ட்’ என அவர் மீது வழக்கு பதிவுசெய்ய உத்தரவிட்டார்கள்.
அந்த அமர்வு சென்னைக்கு மாறிய காரணத்தினால், இந்த வழக்கும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு மாற்றப்பட்ட பின்னால் அங்கே வாதிக்கிறபோது, அந்த வழக்கில் சிறப்பு வழக்கறிஞர் என்கிற முறையில் நானும் சேர்ந்து வாதிட்டேன். இந்த வழக்கில் சி.சி.டி.வி காட்சிகள் வருகிறபோது, மேற்குபுறவாயிலில் உள்ளே நுழைவது, வெளியே போவது, மீண்டும் சுவாதியும் சந்திரசேகரும், ஜோதிமணியும் இல்லாமல் யுவராஜ், கோகுல்ராஜ், ஏழு பேரும் உள்ளே போகிறார்கள். இதைத் தவிர, இவர்கள் கோகுல்ராஜை வெளியே கொண்டுபோனதற்கான முறையான சாட்சியம் இல்லை.
நீதிமன்றமே 310 CRPC பிரகாரம்,`நீதிமன்றத்தின் அதிகாரம் கொண்டு தாங்களாகவே சம்பவ இடத்தைப் பார்ப்பதற்கு அதிகாரம் உண்டு.

நாங்கள் வழக்கு தொடுக்கும்போது இதே பிரிவில் மனு போட்டோம். புலன்விசாரணையில் தவறுகள் இருந்தால் கூட, 310 வது விதியைக் குறிப்பிட்டு அன்றைக்கு நாங்கள் இதைக் கேட்டிருந்தோம். உச்ச நீதிமன்றத்தின் டெட்லைன் காரணமாக எங்கள் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இப்போது, மேல்முறையீட்டில் மிக நுட்பமாக ஆராய்ந்து அவர்களாகவே முடிவு எடுத்து இரண்டு நீதிபதிகள் வந்து ஆய்வுசெய்திருக்கிறார்கள். அவர்கள் பார்த்தது, ஏற்கெனவே சிசிடிவியில் இருக்கக்கூடிய காட்சிகள், ஏற்கெனவே கூறிய பிராகாரம் மேற்கு நுழைவாயிலில் இருந்த சி.சி.டி.வி, உள்ளே போய் சாமி கும்பிட்ட சந்நிதி, கேம் 5, கேம் 3 கேமராக்கள் மட்டும்தான் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டது. ஆகவே, கோகுல்ராஜை சங்ககிரி ஒருக்கா மலை, கொங்கணாபுரம் என கடத்திச்சென்று, மீண்டும் சங்ககிரியில் வைத்து தற்கொலை என பேசவைத்து, அதை எழுத வைத்து கொலை செய்திருக்கிறார்கள். இங்கிருந்து கொண்டு சென்றதற்கு இன்று என்ன சாட்சியம் என்று கேட்கிறார்கள்.
அந்த சாட்சியம் என்பது நேரடியாக வாய்மொழி சாட்சியம் இல்லாவிட்டாலும், இங்கு இருக்குற சாட்சியத்தை யாரும் மறைக்க முடியாது. அதனால், நீதிபதிகள் நேரடியாக வந்து ஆய்வு செய்தனர். யாரையும் உடன் அழைத்துச் செல்லாமல், அவர்களாகவே அனைத்து நிபுணர்களையும் கூட்டிவந்து, வரைபடம், சி.சி.டி.வி காட்சிகள் அனைத்தும் வைத்து பார்த்திருக்கிறார்கள். உள்ளே சென்று பார்த்துவிட்டு, வந்து எத்தனை வழிகள் இருக்கிறது, எந்தெந்த வழியாகக் கொண்டு செல்லலாம் என்பதை ஆராய்ந்தனர், வரைபடத்தில் இருப்பது ஒரே வழிதான், ஆனால், அனைத்து வழிகளையும் நேரில் பார்த்துவிட்டு, ரயில்வே ட்ராக்லேயும் ஆய்வுசெய்திருக்கிறார்கள். சுவாதி மாறியதால், தீர்ப்பு மாறாது. கீழமை நீதிமன்றத்திலேயே அவர் கொடுத்திருக்கிற வாக்குமூலமும், சாட்சியங்களும் இருக்கின்றன. இது தற்கொலை அல்ல. இது ஒரு கொலை. கொடூரமான கொலை, திட்டமிட்ட கொலை எனக் கூறப்பட்டிருக்கிறது. சி.சி.டி.வி காட்சிகள், பாரன்சிக் டிபார்ட்மென்ட்க்கு எடுத்துச் செல்லப்பட்டு ஆய்வுசெய்யப்பட்டிருக்கிறது. இது இரண்டாவது முக்கியமான சாட்சி. மூன்றாவதாக, தனியார் தொலைக்காட்சியில் வலியப்போய் யுவராஜ் கொடுத்த பேட்டி. இவைதான் இந்த குற்றத்தைத் தீர்மானித்திருக்கின்றன. எனவே, தீர்ப்பு மாறும் வாய்ப்பில்லை" என்றார்.