உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், இந்த ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் விசாரிக்கப்பட்டு பல வழக்குகளில் தீர்வுகாணப்பட்டன. குறிப்பாக, எய்ம்ஸ் கட்டுமானம் குறித்த வழக்கு, சாத்தான்குளம் வழக்கில் கூடுதல் சட்டப்பிரிவை சேர்க்கும் வழக்கு, கோகுல்ராஜ் கொலை வழக்கு மேல்முறையீட்டில் பிறழ் சாட்சியான சுவாதியிடம் நடத்தப்பட்ட விசாரணை எனப் பல வழக்குகள் அதிக கவனம்பெற்றன.

நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அடங்கிய அமர்வு மிகச் சிறப்பாக செயல்பட்டு, கடந்த செப்டம்பர் 2-ம் தேதி முதல், டிசம்பர் 2-ம் தேதி வரை 57 வேலை நாள்களில் 6,500 வழக்குகளை விசாரணைசெய்து, உரிய உத்தரவு பிறப்பித்து வழக்குகளை முடித்துவைத்திருக்கிறது.
இவற்றில், சட்ட அறிஞர்கள், வழக்கறிஞர்களை கவனிக்கவைத்த, கர்மா அடிப்படையில் அளிக்கப்பட்ட தீர்ப்பை ரத்துசெய்த வழக்கு குறிப்பிடத்தக்கது. அதிக கவனம் ஈர்த்த இந்த வழக்கு குறித்து உயர் நீதிமன்ற வட்டாரத்தில் விசாரித்தோம்.
``மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் ஸ்ரீமுருகன் தாக்கல் செய்த மனுவில், `காவல்துறையில் 2003-ம் ஆண்டில் இரண்டாம் நிலைக் காவலராகப் பணியில் சேர்ந்தேன். 2011-ல் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து மருத்துவ விடுப்பில் இருந்தேன். தொடர்ந்து உடல்நலமில்லாததால் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. விதிகளைப் பின்பற்றாமல் விடுப்பு எடுத்ததாக, துறைரதியாக ஊதியக் குறைப்பு, பணிப் பதிவேட்டில் கறுப்புப்புள்ளி எனப் பலமுறை தண்டனை கொடுக்கப்பட்டது.

இவற்றை எதிர்த்து வழக்கு தொடர்ந்ததில், எனக்கு எதிரான உத்தரவுகளை ரத்துசெய்து, சிறிய தண்டனை வழங்க உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். ஆனால், காவல்துறை அதிகாரிகள் அதை அமல்படுத்தவில்லை. இந்த நிலையில் மதுரையிலிருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு இடமாறுதல் செய்து உத்தரவிட்டிருக்கின்றனர். இந்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்’' எனக் கூறியிருந்தார்.
`மனுதாரர் உயரதிகாரிகளை மதிப்பதில்லை. அவரின் தவறான செயல்கள் குறித்து ஐ.ஜி-க்கு அறிக்கை அளிக்கப்பட்டது. நிர்வாக காரணங்களுக்காக தூத்துக்குடி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார்' என்று காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.
அப்போது இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஸ்ரீமதி, `மனுதாரருக்கு கர்மா அடிப்படையில் இந்த நீதிமன்றம் நிவாரணம் வழங்க முனைகிறது. அதாவது, கர்மா கொள்கைகளில் `சஞ்சித கர்மா' (முழு கர்மா), `பிராரப்த கர்மா' (கர்மாவின் பகுதி) என்று பிரிக்கப்பட்டிருக்கிறது. மனுதாரர் பல தண்டனைகளை அனுபவித்துவிட்டார். அவருக்கு பிராரப்த கர்மாவுக்கு மட்டுமே தண்டனை விதிக்கப்படுகிறது. அவரை வேறு மாவட்டத்துக்கு பணிமாற்றம் செய்தால் பொருளாதாரரீதியாக மிகவும் பாதிக்கப்படுவார். அதனால் இடமாற்றம் செய்த உத்தரவை ரத்துசெய்கிறேன். அவரைப் போக்குவரத்துப் பிரிவு காவலராக நியமிக்க ஐ.ஜி-க்கு உத்தரவிடப்படுகிறது' என்று தெரிவித்திருந்தார்.

`கர்மா அடிப்படையில் தனி நீதிபதி உத்தரவு வழங்கியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இடமாற்றம் என்பது துறைரீதியான நடவடிக்கை. அதில் இந்தப் பதவியில், இந்த இடத்துக்கு மாற்ற வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட முடியாது. தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும்' என காவல்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மேல் முறையீட்டை அப்போது விசாரித்த நீதிபதிகள் வேல்முருகன், குமரேஷ் பாபு அரசுத் தரப்பு வாதத்தை பதிவுசெய்துகொண்டு காவலருக்கு பணி இடமாற்றம் குறித்து கர்மா அடிப்படையில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதித்தனர்.
இந்தத் தடையை எதிர்த்து காவலர் ஸ்ரீமுருகன் வழக்கு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த 29-ம் தேதி நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரை திண்டுக்கல், தேனி அல்லது சிவகங்கைக்கு இடமாற்றம் செய்வதாகக் கூறப்பட்டது. மனுதாரர் தரப்பில் திண்டுக்கல் இடமாற்றத்தை ஏற்பதாகக் கூறியவுடன் வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

இதையடுத்து, `சட்டத்தின்படிதான் உத்தரவிட வேண்டும். கர்மா அடிப்படையில் கூடாது' என கூடுதல் கருத்துகளை தெரிவித்த நீதிபதிகள், `கர்மா அடிப்படையில் மனுதாரரைப் போக்குவரத்து காவலராகப் பணி மாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை ரத்துசெய்கிறோம். மனுதாரார் ஸ்ரீமுருகனை, திண்டுக்கல் மாவட்டத்துக்கு இடமாறுதல் செய்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்" என்றனர்.
சமீபத்தில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடந்த வழக்குகளில் முக்கிய வழக்காக, இந்த கர்மா வழக்கு பேசப்பட்டுவருகிறது.