Published:Updated:

ரவீந்திரநாத் கனவுக்கு வேட்டு வைத்த வாக்காளர்; கறார் காட்டிய நீதிபதி! -தேர்தல் வழக்கால் புதிய சிக்கல்

ரவீந்திரநாத் குமார்
ரவீந்திரநாத் குமார்

`இந்த வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் அ.தி.மு.க எம்.பி ரவீந்திரநாத் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, பதில் மனுவைத் தாக்கல் செய்யும் வரை, அவர் எம்.பி. பதவியை வகிப்பதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்'.

தேனி தொகுதியில் தனது வெற்றிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரிய ரவீந்திரநாத்தின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார். ` இந்த வழக்கு ரவீந்திரநாத்துக்குக் கூடுதல் சிக்கல்களை ஏற்படுத்தலாம்' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.

ரவீந்திரநாத்
ரவீந்திரநாத்

தேனி தொகுதியில் 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரும் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சார்பாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் அ.ம.மு.க கட்சி சார்பாக தங்க தமிழ்செல்வனும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் ரவீந்திரநாத் குமார், 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பொதுவாக, தேர்தல் களத்தில் ஒருவர் வெற்றி பெறுகிறார் என்றால், அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர்கள் அந்த வெற்றிக்கு எதிராக நீதிமன்றம் செல்வது வழக்கம்.

ஆனால், தேனி தொகுதியில் ரவீந்திரநாத்தின் வெற்றிக்கு எதிராக தொகுதி வாக்காளர் ஒருவரே சென்னை உயர் நீதிமன்றம் சென்றது அரசியல் வட்டாரத்தில் உற்று கவனிக்கப்பட்டது. இந்த வழக்கைத் தொடுத்தவர் மிலானி. இவர் தனது மனுவில், ` 2019 மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றிபெற்றார். ஆனால், தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஆண்டிப்பட்டியிலுள்ள கட்சி அலுவலகத்தில் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.1.48 கோடியை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதற்கான வீடியோ ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

தேனி தொகுதியில் அதிக அளவில் பணப்பட்டுவாடா நடப்பதாக புகார் வந்த போதும், தேர்தல் ஆணையம் தேர்தலை நிறுத்தவில்லை. மேலும், தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்களையும் கடன் விவரங்களையும் முழுமையாக பதிவு செய்யாமல் மறைத்துவிட்டார். அவர், பத்து கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியதையும் வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை. இது வாக்காளர்களை ஏமாற்றும் செயல் என்று பல வழக்குகளில் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றுள்ளார். எனவே, ரவீந்திரநாத்தின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

மோடியுடன் ரவீந்திரநாத் குமார்
மோடியுடன் ரவீந்திரநாத் குமார்

இந்தப் புகாருக்கு பதில் மனு தாக்கல் செய்யாமல் ரவீந்திரநாத் தரப்பில் தாமதம் செய்தனர். இதையடுத்து, மனுதாரர் மிலானி தரப்பில் வக்கீல்கள் வி.அருண், ஜி.கிருஷ்ணராஜா ஆகியோர் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அதில், `இந்த வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் அ.தி.மு.க எம்.பி ரவீந்திரநாத் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, பதில் மனுவைத் தாக்கல் செய்யும் வரை, அவர் எம்.பி. பதவியை வகிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இதையடுத்து, பதில் மனுத் தாக்கல் செய்ய நீதிமன்றம் கெடுவிதித்தது. இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி, ரவீந்திரநாத் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், `தொகுதி வாக்காளர் என்ற அடிப்படையில் மிலானி என்பவர் தொடர்ந்துள்ள இந்த வழக்கு செல்லத்தக்கது அல்ல. மேலும், தேர்தல் வழக்கு தொடர்வதற்கான உரிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்' எனக் கோரியிருந்தார். தொடர்ந்து வழக்கு விசாரணையின்போதும், `டெல்லியில் இருந்து மூத்த வழக்கறிஞர் வர வேண்டும்' எனக் கூறி ரவீந்திரநாத் தரப்பில் தாமதப்படுத்திக் கொண்டே வந்தனர்.

இளைஞர்களின் இதயநாயகன் ஓ.பி.ஆர்... யார் சொன்னா? - அவரேதான்! - ரவீந்திரநாத் எஸ்.டி.டி. வரலாறு

இதனை ஒருகட்டத்தில் ஏற்காத நீதிமன்றம், ரவீந்திரநாத்தின் மனு மீது அக்டோபர் 16-ம் தேதியன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தது. இதையடுத்து இன்று நீதிபதி ரமேஷ் அளித்த தீர்ப்பில், `ரவீந்திரநாத் மீது எதிர் மனுதாரர் கொடுத்த குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளது. ஓ.பி. ரவீந்திரநாத் குமார் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கில் முகாந்திரம் இருப்பதால் அவ்வழக்கை ரத்து செய்ய முடியாது' எனக் குறிப்பிட்டார். இதனால் தேர்தல் வழக்கு விசாரணை தொடர்வதில் எந்தத் தடையும் இல்லாததால் ஓ.பி.எஸ் தரப்பு அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

இதுதொடர்பாக பெயர் குறிப்பிட விரும்பாமல் நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், `` மத்திய அமைச்சரவையில் எப்படியாவது இடம்பெற்றுவிட வேண்டும் என்பதில் ஓ.பி.எஸ் தரப்பினர் உறுதியாக உள்ளனர். ஏற்கெனவே, அப்படியொரு வாய்ப்பு வந்தபோது, `வைத்திலிங்கம் உள்பட சீனியர்கள் இருக்கும்போது ஒருவருக்கு மட்டுமே கொடுப்பது சரியாக இருக்காது' என முதல்வர் பழனிசாமி தரப்பில் கறார் காட்டியதால் அந்த வாய்ப்பு பறிபோனது. `இந்தமுறை மத்திய அமைச்சரவையில் சில இடங்கள் காலியாக இருப்பதால் எப்படியும் நமக்கு ஒரு இடம் கிடைத்துவிடும்' என உறுதியாக நம்புகிறார் ஓ.பி.ஆர். இந்தநிலையில், நீதிமன்றத்தின் உத்தரவு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் ரவீந்திரநாத் பதில் மனுவைத் தாக்கல் செய்தார். அதுவும் நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படைலேயே தாக்கல் செய்தார். அதன்பின்னர், கொரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளிக் கொண்டே போனது. இப்போது தேர்தல் வழக்கை ரத்து செய்ய முடியாது என உயர் நீதிமன்றம் உறுதியாகக் கூறிவிட்டதால், அடுத்து என்ன செய்வது என சட்ட ஆலோசனையில் இறங்கியிருக்கிறது ஓ.பி.எஸ் தரப்பு" என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு