
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்குக்கு ஆதரவாக ஆஜரானவர் லலித்
`நீதிபதி யு.யு.லலித்’ எனப்படும் உதய் உமேஷ் லலித், உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்படவிருப்பதாகச் செய்திகள் பரபரக்கின்றன. தலைமை நீதிபதி பதவி என்பது உச்ச நீதிமன்றத்தை நிர்வகிக்கும் பொறுப்பு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த நாட்டின் நீதி பரிபாலனத்தை நிலைநிறுத்தும் கடமையையும்கொண்டது என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது!
நீதிபதியின் மகன்...
உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்னும் சில தினங்களில் (ஆகஸ்ட் 26-ம் தேதி) ஓய்வுபெறவிருக்கிறார். அதனால், உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகளில் இரண்டாம் இடத்தில் இருக்கும் யு.யு.லலித்தை, புதிய தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கு, என்.வி.ரமணா முறைப்படி பரிந்துரை செய்திருக்கிறார். உச்ச நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக அவர் ஆகஸ்ட் 27-ம் தேதி பதவியேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
யு.யு.லலித் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். இவரின் தந்தை யு.ஆர்.லலித், மும்பை உயர் நீதிமன்றத் துணை நீதிபதியாகவும், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியவர். மும்பை அரசு சட்டக் கல்லூரியில் படித்த
யு.யு.லலித், 1983-ல் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார். குற்றவியல் வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற இவர், 1986 ஜனவரியில் டெல்லிக்குக் குடிபெயர்ந்தார். அங்கு 1986 முதல் 1992 வரை மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞரான சோலி சொராப்ஜியுடன் இணைந்து பணியாற்றினார். 2004-ம் ஆண்டு, மூத்த வழக்கறிஞராக உச்ச நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட இவர், 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியானார்.
பாபர் மசூதி முதல் அமித் ஷா வரை!
வழக்கறிஞராகப் பணியாற்றிய காலத்தில் பல பிரபல வழக்குகளில் யு.யு.லலித் ஆஜராகியிருக்கிறார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்குக்கு ஆதரவாக ஆஜரானவர் லலித். அதனால், அயோத்தி வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்விலிருந்து அவர் விலக நேரிட்டது. அதேபோல, மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு ஆதரவாக இவர் வாதாடியிருக்கிறார். அதனால், மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக நியாயமான விசாரணை வேண்டும் என்று 2015-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிப்பதிலிருந்தும் விலகிக்கொண்டார். குஜராத்தில் சொராபுதீன் ஷேக் என்கவுன்ட்டர் வழக்கு மற்றும் துள்சிராம் பிரஜாபதி என்கவுன்ட்டர் வழக்கு ஆகியவற்றில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்காக நீதிமன்றத்தில் லலித் ஆஜரானார்.
சூர்யநெல்லி பாலியல் வல்லுறவு வழக்கு தொடர்பாக 2017-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதிலிருந்தும் தன்னைத் தானே அவர் விலக்கிக்கொண்டார். காரணம், அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவருக்காக இவர் வழக்கறிஞராக முன்பு ஆஜராகியிருக்கிறார். மான் வேட்டை வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு ஆதரவாகவும், ஒரு ஊழல் வழக்கில் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கு ஆதரவாகவும், பிறப்புச் சான்றிதழ் தொடர்பான வழக்கில் முன்னாள் ராணுவத் தளபதி வி.கே.சிங்குக்கு ஆதரவாகவும் இவர் ஆஜராகியிருக்கிறார். 2ஜி வழக்கில் விசாரணை நடத்துவதற்காக சி.பி.ஐ-யின் சிறப்பு அரசு வழக்கறிஞராக இவரை உச்ச நீதிமன்றம் 2011-ம் ஆண்டு நியமித்திருந்தது.

வழங்கிய தீர்ப்புகள்!
உச்ச நீதிமன்ற நீதிபதியாக முக்கியமான பல வழக்குகளில் லலித் தீர்ப்பு வழங்கியிருக்கிறார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல தீர்ப்புகளை வழங்கிய அமர்வுகளில் இவர் இடம்பெற்றிருக்கிறார். முஸ்லிம்கள் விவாகரத்து செய்யக் கடைப்பிடிக்கும் ‘முத்தலாக்’ நடைமுறையைச் சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் 2017-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. அந்த வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகள்கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வில், நீதிபதி லலித் இடம்பெற்றிருந்தார். பாலியல் நோக்கத்துடன் ஒருவரை ‘தோலுடன் தோல் தொடர்பு கொண்டால்’ மட்டுமே அது பாலியல் வன்முறை என்கிற சர்ச்சைக்குரிய ஒரு தீர்ப்பை மும்பை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு வழங்கியது. அந்தத் தீர்ப்பை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வுதான் ரத்துசெய்தது.
எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக நீதிபதிகள் யு.யு.லலித், ஏ.கே.கோயல் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்தத் தீர்ப்பு, எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்கிறது என்று கூறி போராட்டங்கள் நடந்தன. சமீபத்தில், கடன் மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு நீதிமன்ற அவமதிப்புக்காக நான்கு மாத சிறைத் தண்டனை விதித்த அமர்விலும் நீதிபதி லலித் இடம்பெற்றிருந்தார்.
எஸ்.ஏ.பாப்டேவுக்குப் பிறகு தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்ற என்.வி.ரமணா, 16 மாதங்களாக அந்தப் பதவியில் இருந்துவருகிறார். என்.வி.ரமணாவுக்குப் பிறகு தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவிருக்கும் யு.யு.லலித், 74 நாள்களுக்கு மட்டுமே அந்தப் பதவியில் இருப்பார். வரும் நவம்பர் 8-ம் தேதி அவர் பணி ஓய்வுபெறுவார். காரணம் அன்றுடன் அவருக்கு 65 வயது நிறைவடைகிறது!