Election bannerElection banner
Published:Updated:

ஞானவாபி மசூதி பகுதியில் காசி விஸ்வநாதர் கோயில் இருந்ததா?! - தொல்லியல் ஆய்வுக்கு நீதிமன்றம் உத்தரவு

ஞானவாபி மசூதி
ஞானவாபி மசூதி

``அயோத்தி தீர்ப்பிலும்கூட, பாபர் மசூதி இருந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் கடைசியில் மசூதி இடிக்கப்பட்ட பிறகும்கூட எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.”

``முகலாய மன்னர் ஔரங்கரசீப்பால், வாரணாசியின் 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த காசி விஸ்வநாதர் கோயில் இடிக்கப்பட்டது. அதன் பிறகுதான் அங்கு ஞான்வாபி மசூதி கட்டப்பட்டது. எனவே, அந்த நிலம் கோயிலுக்குச் சொந்தமானது” என்று கூறி வழக்கறிஞர் விஜய் சங்கர் ரஸ்தோகி என்பவர் வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், ``முகலாயர் ஆட்சி முடிவுற்ற பிறகே தற்போதுள்ள காசி விஸ்வநாதர் கோயில், மசூதிக்கு அருகில் புதிதாகக் கட்டப்பட்டிருக்கிறது. ஞானவாபி மசூதி அமைந்திருக்கும் வளாகத்தை மீண்டும் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும். மசூதி இருக்கும் இடத்தில் தொல்லியல் ஆய்வு நடத்தப்பட்டால், அதற்கான சான்றுகள் கிடைக்கும். காசி விஸ்வநாதர் லிங்கமும் மசூதி இருக்கும் இடத்தில்தான் புதைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

வாரணாசி
வாரணாசி

கடந்த 2019-ம் ஆண்டு முதல் நிலுவையிலிருந்த இந்த வழக்கு, நேற்று (வியாழன்) நீதிமன்ற அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த, சிவில் விரைவு நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ஆசுதோஷ் திவாரி, ``ஞானவாபி மசூதி அமைந்துள்ள இடத்தில் ஏற்கெனவே இந்து கோயில் இருந்ததா அல்லது வேறு ஏதாவது மற்றங்கள் செய்யப்பட்டு மசூதி கட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து உண்மை அறிய இந்திய தொல்லியல் ஆராய்ச்சி துறையின் (Archaeological Survey of India) ஐந்து பேர் கொண்ட நிபுணர்குழுவை அமைத்து, உத்தரப்பிரதேச அரசு ஆய்வு நடத்த வேண்டும். அந்தக் குழுவில் குறைந்தது இரண்டு நபர்களாவது சிறுபான்மையினராக இருத்தல் வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ``ஆய்வு மேற்கொள்ளும்போது முதலில் தரை ஊடுருவும் ரேடார் (Ground Penetrating Radar - GPR) அல்லது ஜியோ ரேடியாலஜி (Geo-Radiology) முறையைப் பயன்படுத்தி ஆய்வுசெய்யலாம், பின் தேவைப்பட்டால் நான்கு சதுர அடிக்கு மிகாமல் அகழ்வாராய்ச்சி செய்யலாம்” எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இஸ்லாமிய அமைப்பின் கருத்து:

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உத்தரப்பிரதேச சன்னி வஃக்பு வாரியம் (Sunni Central Waqf Board), உத்தரவை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் தலைவர் ஜுஃபர் ஃபாரூகி (Zufar Faruqi), ``இந்த உத்தரவு, இந்திய அரசியலமைப்பின் வழிபாட்டு உரிமைச் சட்டத்தை (Places of Worship (Special Provisions) Act, 1991) மீறுகிறது’’ என்றார்.

மேலும், அவர் ``அயோத்தி தீர்ப்பிலும்கூட, பாபர் மசூதி இருந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்று கூறியது, ஆனால், கடைசியில் மசூதி இடிக்கப்பட்ட பிறகும்கூட எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை” என்று குறிப்பிட்டார்.

நீதிமன்றம்
நீதிமன்றம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில், முதலில் அயோத்தியின் பாபர் மசூதி இருக்கும் இடம் ராமஜென்ம பூமி, அதில் ராமர் கோயில் இருந்தது என்று சொல்லப்பட்டது. பின் அதற்கான வழக்குகளும் பல்லாண்டு காலமாக நடந்து, உச்ச நீதிமன்றத்தால் முடித்துவைக்கப்பட்டன. பிறகு, மதுராவில் இருக்கும் ஷாஹி ஈத்கா மசூதி இருக்கும் இடம் கிருஷ்ண ஜென்ம பூமி என்று கூறி வழக்கு தொடரப்பட்டது. பின், அந்த வழக்கு உள்ளூர் சிவில் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது, வாரணாசியிலுள்ள ஞான்வாபி மசூதி இருக்கும் இடத்தில் காசி விஸ்வநாதர் கோயில் இருந்தது என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவற்றை அகழ்வாராய்ச்சி செய்ய உத்தரவிட்டு, வாரணாசி சிவில் நீதிமன்றம் தொடங்கியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு