Published:Updated:

`அனுமதியின்றி போராடுபவர்கள் மீது கைது நடவடிக்கை?!' திருப்பூர் வழக்கில் நீதிமன்ற உத்தரவும் மறுவிசாரணையும்

CAA Protests
CAA Protests

வழக்கறிஞர் வி.ஜெயப்ரகாஷ் நாராயணன், சி.ஏ.ஏ-வுக்கு எதிராகவும், ஆதரவாகவும் போராடிய நபர்கள் மீது இருபதுக்கும் மேற்பட்ட FIR-கள் பதியப்பட்டிருப்பதாகவும், சில வழக்குகளில் சார்ஜ் சீட் போடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

குடியுரிமைச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்ட நாள் முதல் இன்றுவரை, இந்தியப் பிரதேசம் முடிவில்லா போராட்டக் களமாகி இருக்கிறது. டெல்லி பல்கலைக் கழகங்களில் வலுப்பெற்ற போராட்டக் குரல்கள், ஷாகீன்பாக் களத்தில் 80 நாள்களைக் கடந்து நிலைபெற்றிருக்கிறது. டெல்லி மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் பல்வேறு இடங்கள் ஷாகீன்பாக் ஆக மாறியிருக்கின்றன. அதிலும் குறிப்பாகத் தமிழகமும் கேரளாவும் மிகத் தீவிரமாகப் போராட்டங்களில் இறங்கியுள்ளன.

CAA Protests
CAA Protests

இந்த நிலையில், திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர், இந்து முன்னேற்றக் கழகத் தலைவர் கே.கோபிநாத், சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டங்கள் குறித்தான பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவரது மனுவில் சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டங்கள் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் முறையான போராட்ட வரைமுறைகள் இன்றி போக்குவரத்து பாதிப்படைவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மார்ச் 3-ம் தேதி வழக்கு விசாரணை நடைபெற்றது. வழக்கு திருப்பூர் பகுதியைச் சார்ந்தது என்றாலும், நீதிபதிகள் அமர்வு தமிழகம் முழுவதும் நடக்கும் இதே மாதிரியான போராட்டங்களை போலீஸ் எப்படிக் கையாளுகிறது என்று அரசுத் தரப்பிலிருந்து விளக்கம் கேட்டது.

கூடுதலாக, போராட்டங்களில் குழந்தைகள் கலந்துகொள்வதற்கு ஏதேனும் சட்டரீதியான தடை இருக்கிறதா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

Chennai High court
Chennai High court
`ரஜினியின் தற்காப்பு; விஜய் ஆதரவு அளித்திருந்தால்..?' - குடியுரிமை சட்டத்தைக் குறிப்பிட்ட முத்தரசன்

இந்த நிலையில், நேற்றும் (மார்ச் 5) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது, அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் வி.ஜெயப்ரகாஷ் நாராயணன், சி.ஏ.ஏ-வுக்கு எதிராகவும் ஆதரவாகவும் போராடிய நபர்கள் மீது இருபதுக்கும் மேற்பட்ட எஃப்.ஐ.ஆர்-கள் பதியப்பட்டிருப்பதாகவும், சில வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தப் பதிலால் மிகவும் ஏமாற்றமடைந்ததாகத் தெரிவித்த நீதிபதிகள், "வெறும் எஃப்.ஐ.ஆர் மட்டும் பதியப்படுவதால் எந்த லாபமும் இல்லை. முறையான அனுமதி இல்லாமல் போராடும் நபர்களால் பொதுமக்களுக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது எனில், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்துங்கள் அல்லது கைது செய்யுங்கள். போராட்டங்கள் சி.ஏ.ஏ-வுக்கு ஆதரவாக இருந்தாலும் சரி, எதிர்ப்பாக இருந்தாலும் சரி, அனுமதியற்ற போராட்டங்களை கட்டுப்படுத்துவது காவல்துறையின் கடமை" என்று தமிழகக் காவல்துறை டிஜிபி அவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர். ஆனால், சற்று நேரத்தில் இதுகுறித்து மீண்டும் விளக்கமளித்த நீதிபதிகள் இருவரும், கைது செய்யச் சொல்லி அறிவுறுத்தியது திருப்பூரில் வழக்கில் குறிப்பிட்ட பகுதியில் உள்ள போராட்டக்காரர்கள் பற்றி மட்டுமே என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.

Protest Against CAB
Protest Against CAB
AP Photo/Anupam Nath

வழக்கின் அவசர நிலை கருதி மீண்டும் இன்று (மார்ச் 6) இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கைத் தொடர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் மீது வேறு வழக்கு நிலுவையில் இருப்பதாலும் போராடுபவர்களின் சார்பாக வாதாடும் வழக்கறிஞர்களின் முழுதரப்பு வாதத்தையும் நீதிபதிகள் கேட்கவேண்டும் என முறையிடப்பட்டதாலும் டிஜிபிக்கு போடப்பட்ட (மேலே குறிப்பிட்ட) உத்தரவு நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்த மறுவிசாரணை 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சி.ஏ.ஏ சார்ந்த போராட்டங்கள் நீண்ட நாள்களாகத் தொடர்ந்தாலும், இன்றுவரை இந்தப் பிரச்னை குறித்த வழக்குகளை விசாரிப்பதை உச்ச நீதிமன்றம் தாமதப்படுத்திக்கொண்டே இருக்கிறது. சமீபத்தில், சபரிமலை வழக்கு விசாரணை முடிந்த பிறகு, சி.ஏ.ஏ தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. குடியுரிமைச் சட்டத் திருத்தம் பற்றி, அது சார்ந்த போராட்டங்கள் - கலவரங்கள் பற்றி நீதிமன்றத்தின் நிலைப்பாடும் ஒவ்வொரு தீர்ப்பும் ஒவ்வொரு சொல்லும் உற்றுநோக்கிக் கவனிக்கப்படுகிறது. இந்த நிலையில், மேற்கண்ட திருப்பூர் சி.ஏ.ஏ போராட்டம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் ஒரு நேரடி உத்தரவு பிறப்பித்திருப்பதும், அதுகுறித்து பின்னர் விளக்கம் அளித்திருப்பதும் பேசு பொருளாகியிருக்கிறது.

`மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை’ - நீதிமன்ற தீர்ப்பு விபரமும் மருத்துவர்கள் கருத்தும்

இந்நிலையில், குறிப்பிடத்தக்கது ஒன்றுதான். எத்தனை போராட்டங்கள் நடைபெற்றாலும், இந்தச் சட்டத்திருத்தம் திரும்பப் பெறப்படாது என பா.ஜ.க தலைவர்கள் உறுதிபடத் தெரிவித்து வரும் நிலையில், போராட்டக் குரல்களுக்கான தீர்வு நீதிமன்றம் வழியே கிடைக்கப்பெறும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

அடுத்த கட்டுரைக்கு