Election bannerElection banner
Published:Updated:

டெல்லி: `யாசகம் பெற்றோ, திருடியோ ஆக்ஸிஜன் பெறுங்கள்!’ - மத்திய அரசிடம் உயர் நீதிமன்றம் காட்டம்

ஆக்ஸிஜன்
ஆக்ஸிஜன் ( Aijaz Rahi )

`யாசகம் பெறுங்கள், கடன் வாங்குங்கள், திருடக்கூட செய்யுங்கள். எது வேண்டுமென்றாலும் செய்யுங்கள். ஆனால், தேவையான ஆக்ஸிஜனைத் தர வேண்டியது உங்கள் வேலை’ என மத்திய அரசிடம் டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

நாட்டில் கொரோனா பாதிப்பு தற்போது மின்னல் வேகத்தில் அதிகரித்திவருகிறது. இது ஒருபுறம் என்றால், மறுபுறம் கொரோனா நோயாளிகளுக்கான ஆக்ஸிஜன் தேவையும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் போன்ற மாநிலங்களில் ஆக்ஸிஜன் தேவை மிக அதிகமாக இருக்கிறது.

இந்தநிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் விபின் சங்கி, ரேகா பல்லி அமர்வு மத்திய அரசிடம் கடுமையாக சில உத்தரவுகளைப் பிறப்பித்தது.

மருத்துவ வசதிகளுக்குத் தேவையான ஆக்ஸிஜனை வழங்குவது மத்திய அரசாங்கத்தின் பொறுப்பு என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய நீதிமன்றம், `மன்னிக்கவும். எங்களிடம் ஆக்ஸிஜன் இல்லை. உங்கள் உயிரை இழந்துவிடுங்கள்' என்று நீங்கள் சொல்ல முடியாது. அதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறியது.

மேலும் மத்திய அரசிடம், ``மாநிலத்திலுள்ள மனித உயிர்கள் அவ்வளவு முக்கியமல்ல” என்று தோன்றுகிறதா எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பியது.

மோடி
மோடி

தொடர்ந்து, ``யாரிடமிருந்தாவது யாசகம் பெறுங்கள் அல்லது கடன் வாங்குங்கள். திருடக்கூடச் செய்யுங்கள். ஆனால் ஆக்ஸிஜனை வழங்குங்கள். இந்தச் சூழல் தேசியத்தின் அவசரநிலை. மாநிலத்திலுள்ள மக்கள் இறக்கும் நேரத்தில் இறந்தால் பரவாயில்லை, என்று விட முடியாது. அது இந்திய இறையாண்மைக்கு ஏற்புடையது அல்ல” என்றனர்.

தொடர்ந்து, ``அரசு ஏன் இந்த அவசர சூழ்நிலையைப் பார்க்கவில்லை... ஏன் அதைப் பார்த்து விழிப்படையவில்லை? இதைப் பார்த்து நாங்கள் அதிர்ச்சியடைகிறோம், திகைக்கிறோம்” என்று கூறினர்.

``மேக்ஸ் ஹெல்த்கேர் நெட்வொர்க் அவசர வழக்காகத் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், நீதிமன்றம் சிறப்பு விசாரணையை நடத்தியது. அப்போதுதான் பெரும்பாலான மருத்துவமனைகள் ஆபத்தான முறையில் குறைந்த அளவு ஆக்ஸிஜன் விநியோகத்தில் செயல்படுவதாகத் தெரியவந்துள்ளது. இவை செயற்கையாக உருவாக்கப்பட்டவையா... இல்லை ஆக்ஸிஜன் பற்றாக்குறையா என்று எதுவும் தேவை இல்லை. ஆனால், நாங்கள் இவற்றைப் பார்த்துக் கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது” என்றனர்.

ஆக்சிஜன்
ஆக்சிஜன்
Aijaz Rahi

தொழில்துறையினர் ஆக்ஸிஜனைப் பயன்படுத்துவதற்கான தடையிலிருந்து சில தொழில்களுக்கு விலக்கு அளிப்பதற்கான மத்திய அரசின் முடிவு குறித்துப் பேசிய நீதிமன்றம், ``உங்களிடம் சொந்தமாக அரசு நடத்தும் எஃகு ஆலைகள் மற்றும் பெட்ரோலியத் தொழில்கள் உள்ளன. அவற்றில் ஆக்ஸிஜன் பயன்பாட்டை ஏன் குறைக்க முடியாது அல்லது ஏன் அதை நிறுத்த முடியாது?

முற்றிலும் முக்கியமான எந்தவொரு விஷயத்தையும் நிறுத்த முடியாது. நாட்டில் நீங்கள் பெட்ரோலிய உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்த முடியாது என்பதை நாங்கள் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில் அது ஒரு முக்கியமான விஷயம். ஆனால் நீங்கள் அதைக் குறைக்க முடியும். மருத்துவப் பயன்பாட்டுக்காக நீங்கள் அவர்களின் ஆக்ஸிஜனைத் திருப்பினால், நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்” என்றது.

``மனிதநேயம் எஞ்சியிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் நீங்கள் தொழில்களைப் பற்றிக் கவலைப்படுகிறீர்கள். ஒரு வாரம், இரண்டு வாரங்கள், உங்கள் தொழில்கள் காத்திருக்கலாம். இது ஒரு கடுமையான அவசரநிலை. மனித வாழ்க்கை முக்கியமில்லையா உங்களுக்கு?” எனக் கேள்வியெழுப்பியது.

ஆக்சிஜன்
ஆக்சிஜன்
Aijaz Rahi

மேலும், ``டெல்லியிலுள்ள எந்த மருத்துவமனையும் இன்றிரவு ஒரு மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ளாது என்று மத்திய அரசு உறுதியளிக்க முடியுமா?” என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அதற்கு, `டெல்லி அரசுதான் அந்த உத்தரவாதம் அளிக்க முடியும்' என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பதிலளித்தார். பின் டெல்லிக்கு ஒதுக்கப்பட்ட 480 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் விநியோகத்தை மத்திய அரசு எளிதாக்கும் என்ற மேத்தாவின் உறுதிமொழியை நீதிமன்றம் பதிவுசெய்தது. டெல்லிக்கு ஆக்ஸிஜன் டேங்கர்கள் தடையின்றி, பாதுகாப்பாகச் செல்வதை அரசு உறுதி செய்யும் என்ற மேத்தாவின் அறிக்கையையும் அது பதிவுசெய்தது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு