கோவிட் தொற்று சிகிச்சைக்காக சென்னை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 72 வயது முதியவர் காணாமல் போனதைத் தொடர்ந்து, அவரின் குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

72 வயதான ஆதிகேசவன் வளையல் வியாபாரி. இவருக்கு மனைவி, மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள். ஆனால், இவரின் பிள்ளைகள் யாரும் இவருடன் வசிக்கவில்லை. இவர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டது 2020 ஜூன் 9-ல், ஆரம்ப சுகாதார நிலையத்தில் உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரி, ஜூன் 11-ம் தேதி அவரின் வீட்டிற்குச் சென்று, ஆம்புலன்ஸில் ஏற்றி ஈக்காடுதாங்கல் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு பரிந்துரைத்துள்ளனர்.
அப்போது அவர் அலைபேசியை கொண்டு செல்லாததால், அவரின் குடும்பத்தினரால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. உடனே குடும்பத்தினர், அவரை அழைத்துச் சென்ற மருத்துவமனைக்குச் சென்று பார்க்கையில், அங்கும் காணவில்லை. தன்னுடைய தந்தையைக் காணவில்லை என ஆதிகேசவனின் இளைய மகன் மணிவண்ணன் என்பவர் சென்னை செயின்ட் தாமஸ் மவுன்ட் காவல் நிலையத்தில் 2020, ஜூன் 17-ல் தெரிவித்துள்ளார்.
ஆனால் காவல்துறை அதிகாரிகள் அதைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. அதனைத் தொடர்ந்து குடும்பத்தினர் ஜூன் 21-ல் ஆன்லைன் புகாரைப் பதிவு செய்தனர். ஜூன் 23-ல் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

அப்போதும் காவல்துறையினரால் முதியவரைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. இதனால் ஜூலை 2, மணிவண்ணன் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். நீதிமன்றத்தில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலிருந்து அவர் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதும், அதன் பின் அவர் அங்கிருந்து வெளியே நடந்து செல்லும் காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகி இருந்தன. குடும்பத்தினர் அந்த வீடியோ காட்சிகளைப் பார்த்து அவர்தான் என உறுதி செய்தனர்.
தற்போது இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் என். ஆனந்த் வெங்கடேஷ், ``குடும்பத்தினர் புகார் அளித்தபோதே காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தால், அவரை கண்டுபிடித்திருக்கலாம். அதேசமயம் அச்சமயத்தில் கோவிட் தொற்றை எதிர்த்து மாநில அரசும் போராடிக் கொண்டிருந்தது. முதியவர் காணாமல்போன நிகழ்விற்கு ஒரு அதிகாரி மட்டும் காரணமில்லை, இந்த நிகழ்வில் பலர் ஈடுபட்டுள்ளனர்.
எனவே மனிதாபிமான அடிப்படையில் முதியவரின் குடும்பத்திற்கு மாநில அரசு 1 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், கூடிய விரைவில் காணாமல் போனவரை போலீஸார் கண்டுபிடித்து தர வேண்டும்’’ என்றும் உத்தரவிட்டுள்ளனர்.