உத்தரப்பிரதேச மாநிலம், பாரபங்கியைச் சேர்ந்த நபர் பசுவைக் கொன்று, இறைச்சி விற்க முயன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டார். உத்தரப்பிரதேசத்தில் பசுவதைத் தடுப்புச் சட்டம் அமலில் இருப்பதால், அவர்மீது காவல்துறை வழக்கு பதிவுசெய்தது. இந்த வழக்கை ரத்துசெய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட நபர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஷாமிம் அகமது (Shamim Ahmad) முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஷாமிம் அகமது, `தடுப்புச் சட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட இந்த வழக்கை ரத்துசெய்ய முடியாது’ என பாதிக்கப்பட்டவரின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், பசு தொடர்பாக தன் கருத்துகளையும் தெரிவித்திருக்கிறார். அதில், "நாம் ஒரு மதச்சார்பற்ற நாட்டில் வாழ்கிறோம், அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும். இந்து மதத்தில், பசு தெய்வீக, இயற்கை நன்மையின் பிரதிநிதி என்று நம்பப்படுகிறது.
எனவே, அது பாதுகாக்கப்பட்டு வணங்கப்பட வேண்டும். பசு பல்வேறு தெய்வங்களுடன் தொடர்புடையது. குறிப்பாக சிவபெருமான் நந்தி, காளையுடனும், இந்திரன் காமதேனுவுடனும், கிருஷ்ணர் இளமையில் ஒரு மாடு மேய்ப்பவராகவும் குறிப்பிடப்படுகிறது.
புராணத்தின்படி, தேவர்கள், அசுரர்களால் பாற்கடலைக் கடையும்போது பாற்கடலிலிருந்து பசு வெளிப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, பசு ஏழு முனிவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது, காலப்போக்கில் வசிஷ்ட முனிவரின் காவலில் இருந்தது.
இந்து நூல்களில், பசுவதையில் ஈடுபடும் நபர்கள் நரகத்தில் துன்புறுத்தப்படுவார்கள் எனக் கூறப்பட்டிருக்கிறது. பசுவிலிருந்து பால், வெண்ணெய், தயிர், சாணம், கோமியம் ஆகியவை கிடைக்கிறது.
பசுவின் கால்கள் நான்கு வேதங்களையும், பால் நான்கு தனங்களையும், கொம்புகள் தெய்வங்களையும், முகம் சூரியன், சந்திரனையும், தோள்கள் அக்னி கடவுள்களையும் குறிக்கின்றன. எனவே, பசுவைப் பாதுகாக்க தேசிய அளவில் பசுவதைத் தடுப்புச் சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.