
ஓவியம்: சுதிர்
அறநெறி தவறாமை, நேர்மை, குற்றம் புரியாமை ஆகியவை தேசத்தை வழிநடத்தும் மக்கள் பிரநிதிகளுக்கு இருக்கவேண்டிய லட்சணங்கள். ஆனால், நம்மை ஆளும் இடத்தில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகளில் பலரின் லட்சணங்கள் முகம் சுளிக்க வைக்கின்றன. நம் எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்களில் 40 சதவிகிதத்துக்கு மேற்பட்டோர் கிரிமினல் வழக்குகளைக்கொண்டிருப்பவர்கள்; அந்த வழக்குகள் பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் விசாரிக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றன என்று வரும் செய்திகள் அதிர்ச்சிக்குரியவை.
முதலிடத்தில் உத்தரப்பிரதேசம்!
இந்தியா முழுவதும் முன்னாள் மற்றும் இந்நாள் எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் மீதான கிரிமினல் வழக்குகள் கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகரித்திருக்கின்றன. உயர் நீதிமன்றங்கள் உச்ச நீதிமன்றத்திடம் அளித்த தகவல்களின் அடிப்படையில், 2018-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 4,122-ஆக இருந்த எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான கிரிமினல் வழக்குகளின் எண்ணிக்கை, 2021-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 4,984-ஆக அதிகரித்திருக்கிறது.
இத்தனைக்கும் உ.பி., ராஜஸ்தான், பீகார், தெலங்கானா, சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் உயர் நீதிமன்றங்கள் இன்னும் இந்தப் புள்ளிவிவரங்களை உச்ச நீதிமன்றத்திடம் அளிக்கவில்லை. விடுபட்ட மாநிலங்களின் கணக்கையும் சேர்த்தால், இந்த வழக்குகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். ஏனென்றால், உத்தரப்பிரதேசத்தில் தற்போது இருக்கும் எம்.எல்.ஏ-க்களில் 50 சதவிகிதம் பேர் கிரிமினல் வழக்குகளைக்கொண்டிருப்பவர்கள்.
எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் மீதான கிரிமினல் வழக்குகள் பற்றிய புள்ளிவிவரங்கள் குடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டன. அவற்றில், இந்தியாவி லேயே அதிக கிரிமினல் வழக்குகளைக் கொண்ட முதல் ஐந்து எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்களின் பெயர் பட்டியல் இடம்பெற்றிருந்தது. 204 கிரிமினல் வழக்குகளுடன் கேரளாவில் காங்கிரஸைச் சேர்ந்த இடுக்கி தொகுதி எம்.பி டீன் குரியகோஸ் முதலிடத்தில் இருக்கிறார். 64 கிரிமினல் வழக்குகளுடன் இந்தப் பட்டியலில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் இடம்பிடித்திருக்கிறார்.

40 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு!
அதிகாரம் மிகுந்த எம்.பி-க்களும் எம்.எல்.ஏ-க்களும் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, தங்கள் மீதான கிரிமினல் வழக்குகள் நகர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்கிறார்கள். பத்து ஆண்டுகள், இருபது ஆண்டுகள் அல்ல… முப்பது ஆண்டுகள், நாற்பது ஆண்டுகளாகக்கூட முடிவுக்கு வராத கிரிமினல் வழக்குகளும் இருக்கின்றன.
இந்த நிலையில்தான், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று கோரி பா.ஜ.க-வைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் 2016-ம் ஆண்டு பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதை விசாரித்துவரும் உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியாவை நியமித்தது. உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட சில மாநிலங்கள் நீங்கலாக, 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளித்த புள்ளிவிவரங்கள் அடங்கிய அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் நவம்பர் 12-ம் தேதி விஜய் ஹன்சாரியா தாக்கல் செய்தார். தற்போது, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்துவருகிறது.
விசாரணையில் தாமதம் ஏன்?
எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான கிரிமினல் வழக்குகள் ஏன் விரைந்து விசாரிக்கப்படுவதில்லை என்று மக்கள் சிவில் உரிமைக் கழகப் பொதுச்செயலாளரான வழக்கறிஞர் வி.சுரேஷிடம் கேட்டோம். “ஊழல் தங்களின் அடிப்படை உரிமை என்று நினைப்பதைப்போல, கிரிமினல் செயல்களில் ஈடுபடுவதும் தங்களின் உரிமை என்று மக்கள் பிரதிநிதிகள் கருதுகிற நிலை ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் தங்களுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை தாமதப்படுத்துகிறார்கள். அதை நீதிமன்றமும் அனுமதிக்கிறது என்பதுதான் வேதனைக்குரியது. `ஆறு மாதங்களில் வழக்கை முடிக்கப்போகிறோம்... அதற்குள் சாட்சியங்களை அளிக்க வேண்டும்’ என்று நீதிமன்றம் கறார் காட்டினால், குறித்த காலத்துக்குள் இந்த வழக்குகளை முடித்துவிட முடியும்” என்று உறுதியாகக் கூறுகிறார் வி.சுரேஷ்.

தேர்தலில் போட்டியிடத் தடை?
இது குறித்து முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமியிடம் பேசினோம். “தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீதான கிரிமினல் வழக்குகள் பற்றிய விவரங்களைப் பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்ய வேண்டுமென்று 20 ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் கூறியது. ஆரம்பத்தில், தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி., எம்.எல்.ஏ-க்களில் 15 சதவிகிதம், 20 சதவிகிதம் என்ற அளவில் கிரிமினல் வழக்குகளைக் கொண்டவர்கள் இருந்தனர். இன்றைக்கு அது 43 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. அரசியல் காரணங்களுக்காக பதியப்பட்ட வழக்குகள் நீங்கலாகப் பார்த்தால், கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை ஆகிய குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பான வழக்குகளே 21 சதவிகிதம் இருக்கின்றன.
இப்படி கிரிமினல் வரலாறு கொண்டவர்களைத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடைவிதிக்க வேண்டும் என்பது உண்மையில் ஜனநாயகத்தை நேசிப்பவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால், அதற்கு எந்த ஆட்சியாளர்களும் தயாராக இல்லை” என்று வருத்தத்துடன் கூறுகிறார் என்.கோபால்சாமி.
`உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா’ என்று பெருமையுடன் கூறுகிறோம். ஆனால், நாடாளுமன்றமும், சட்டமன்றங்களும் கிரிமினல்களின் கூடாரங்களாக மாறுவதை ஜனநாயகம் என்று எப்படிக் கருத முடியும்?