நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில், மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 10 பேரை குற்றவாளிகள் என அறிவித்ததோடு, அனைவருக்கும் ஆயுள் தண்டனை அளித்து சாகும் வரை சிறையில் இருக்கவும் தீர்ப்பளித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, யுவராஜ் உள்ளிட்ட குற்றவாளிகள் 10 பேரும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்திருந்தனர். இதேபோல கோகுல்ராஜின் தாயார் சித்ரா தரப்பில், இந்த வழக்கில் சங்கர் உள்ளிட்ட 5 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தனர்.
இந்த நிலையில், இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு, ``கடந்த 24-ம் தேதி இந்த வழக்கை விசாரணை செய்து பிறழ் சாட்சியான சுவாதியை 25-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டோம். அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினோம். சத்திய பிரமாணம் செய்த பிறகு, சுவாதி தொடர்ந்து கேட்ட கேள்விகளுக்கு உண்மையைச் சொல்லவில்லை. அவரின் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. சிசிடிவி காட்சியை காண்பித்தும், அதில் தெரியும் பெண், தான் இல்லை எனத் தெரிவித்துவிட்டார். அந்த வீடியோவில் தெரியும் பெண் அவராக இருந்தும், அதனை ஏற்காமல் தொடர்ச்சியாக மறுத்துவிட்டார். அவரையே அடையாளம் தெரியவில்லை எனக் கூறிவிட்டார். சுவாதி வேறு யாராலோ அழுத்தத்துக்கு ஆளாகி, யாரையும் காப்பாற்ற இவ்வாறு கூறுகிறாரோ என நினைக்கத் தோன்றுகிறது.

சத்திய பிரமாணம் எடுத்த பின்னர் நீதிமன்றத்தில் தவறான தகவலை அளித்தால், குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என அவரிடம் தெளிவாக குறிப்பிட்டே வழக்கு அன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இன்றும் சத்திய பிரமாணம் எடுத்த பின்னர், 25-ம் தேதி குறிப்பிட்ட வாக்குமூலத்தில் மாற்றம் ஏதும் இருக்கிறதா... வேறு ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா என கேள்வி எழுப்பியபோது, `இல்லை' என சுவாதி தெரிவித்துவிட்டார்.
ஆகவே, வழக்கு விசாரணை பொருள் உள்ளதாக அமைய வேண்டும். அதனடிப்படையில் சாட்சிகள் சேகரிக்கப்பட்டு, விசாரணை நடைபெற வேண்டும். உயர் நீதிமன்றங்களில் தவறான தகவலை அளிப்பதை ஏற்க இயலாது. அதுவும் சத்திய பிரமாணம் செய்தபிறகு, தவறான தகவலை அளிப்பவர்கள் எளிதாக கடந்து சென்றுவிட இயலாது.
இந்த வழக்கீழ், நீதித்துறை நடுவர் முன்பாக சத்திய பிரமாணம் செய்து சுவாதி 20.12.18-ல் அளித்த வாக்குமூலத்துக்குப் பிறகு வழக்கு விசாரணை நகராமலேயே இருந்திருக்கிறது.
இந்த வழக்கை பொறுத்தவரை தவறான தகவலை அளித்ததற்காக சுவாதி மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க இயலுமா என கேள்வி எழுகிறது. அதற்கு பதிலளிக்கும் விதமாக உச்ச நீதிமன்றத்தின் பல உத்தரவுகள் இருக்கின்றன.

மேற்கொண்ட காரணங்களைக் கருத்தில் கொண்டு, நீதிமன்றத்தில் தவறான தகவலை அளித்ததற்கான முகாந்திரம் இருப்பதால் சுவாதி மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படுகிறது" என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை இரண்டு வாரகாலத்துக்கு ஒத்திவைத்தனர்.