Published:Updated:

நிர்பயா வழக்கு தண்டனையின் தற்போதைய நிலவரம் என்ன?

கடந்த அக்.29-ல் ஒருவார கால அவகாசம் கொடுத்தது உச்சநீதிமன்றம். அந்தக் கால அவகாசம் தற்போது முடிவடைய இருக்கும் நிலையில், தற்போது திருத்த மனு (curative petition) அளிக்க முடிவுசெய்துள்ளது மூன்று குற்றவாளிகள் தரப்பு.

நிர்பயா வழக்கு குற்றவாளிகள்
நிர்பயா வழக்கு குற்றவாளிகள்

2012 டெல்லி நிர்பயா கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குற்றவாளிகள் மூன்று பேரின் தண்டனை குறித்த மறுஆய்வு மீதான இறுதி முடிவு இந்த மாதத்துக்குள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரவில் தன் நண்பருடன் பேருந்தில் பயணித்த பிசியோதெரபி மாணவியான நிர்பயா (23 வயது) ஓடும் பேருந்தில் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். ஓடும் பேருந்திலிருந்து டெல்லி சாலையில் தூக்கி வீசப்பட்ட அவர், உயிருக்குப் போராடிவந்த நிலையில் மருத்துவ சிகிச்சைகள் பலன் அளிக்காமல் சம்பவம் நிகழ்ந்த பதிமூன்றாம் நாள் இறந்தார்.

நிர்பயா மரணத்தின் அதிர்வலை நாடெங்கிலும் இன்றளவும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. நிர்பயா மரணத்தை அடுத்து பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்பான பல சட்டத்திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவந்தது.

Vikatan
நிர்பயாவின் அம்மா
நிர்பயாவின் அம்மா

வழக்கில் இதுவரை நிகழ்ந்தவை!

குற்றம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஆறுபேரில் ராம் சிங் திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். குற்றத்தில் ஈடுபட்ட மற்றொருவர் 18 வயதுக்குக் குறைவானவர் என்பதால் அவருக்கு சிறார் குற்றவியல் சட்டத்தின் கீழ் மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மீதமுள்ள நான்கு பேருக்குத் தூக்குத்தண்டனை விதித்து விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்பின் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் அந்த நீதிமன்றம் தண்டனையை உறுதிப்படுத்தி தீர்ப்பு வழங்கியது. இதை மறுஆய்வு செய்யக் கோரி 2017-ல் குற்றவாளிகளில் மூன்றுபேர் தரப்பிலிருந்து உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. மறுஆய்வு மனுவை ஏற்றுக்கொள்ள மறுத்தது உச்சநீதிமன்றம். மற்றொரு குற்றவாளியான அக்‌ஷய் மறுஆய்வு மனு அளிக்க தனக்கு விருப்பமில்லை என்று அப்போதே பதிவு செய்துவிட்டார். மரணதண்டனை வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் டிசம்பர் 2018-ல் நிர்பயா தரப்பிலிருந்து மனு அளிக்கப்பட்டுவிட்டது.

மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பாகக் குற்றவாளிகள் கருணை மனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், மூன்று குற்றவாளிகள் தரப்பும் கருணை மனுத் தாக்கல் செய்யாமல் இருக்கின்றனர். இதையடுத்து, கருணை மனுத்தாக்கல் செய்ய கடந்த அக்.29-ல் ஒருவார கால அவகாசம் கொடுத்தது உச்சநீதிமன்றம். அதற்கான கால அவகாசம் தற்போது முடிவடைய இருக்கும் நிலையில், தற்போது திருத்த மனு (curative petition) அளிக்க முடிவு செய்துள்ளது மூன்று குற்றவாளிகள் தரப்பு.

இந்த திருத்த மனுவைப் பொறுத்தவரை, ஒருதலைபட்ச விசாரணை உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட விசாரணை பென்ச்சுக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் தரப்பு மனு அளிக்கலாம். இதன் அடிப்படையில் விசாரணை நீதிபதிகள் இந்த வழக்கிலிருந்து நீக்கப்படுவார்கள்.

நிர்பயா
நிர்பயா
`8 நகரங்கள் மட்டுமல்ல... நாடு முழுவதும் நிர்பயா நிதி பயன்பாடு!' - அமைச்சர் ஸ்மிருதி இரானி

தண்டனை நிறைவேற்றும் காலம் கிட்டத்தட்ட நெருங்கிவிட்ட நிலையில், குற்றவாளிகள் தரப்பு தற்போது இந்தத் திருத்த மனுவைத் தாக்கல் செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள்.

இதுகுறித்து எதிர்ப்பு தெரிவித்துள்ள நிர்பயா தரப்பு வழக்கறிஞரான ஜிதேந்திர குமார் ஜா, ``நாங்கள் தண்டனை நிறைவேற்றுவது தொடர்பான மனு அளித்து ஒருவருட காலம் நெருங்க இருக்கிறது. மறுசீராய்வு மனு ஆய்வு செய்யப்பட்ட காலத்திலேயே குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷயிடம் அவருக்கு மறுசீராய்வு மனு அளிக்க விருப்பமா எனக் கேட்கப்பட்டது. அவர் தனக்கு மனு அளிக்க விருப்பமில்லை என மறுத்துவிட்டார். அவர் மறுத்தது வழக்கில் எந்த இடத்திலும் இதுவரைப் பதிவு செய்யப்படவில்லை. இதற்கிடையேதான் திருத்த மனுவைத் தாக்கல் செய்ய குற்றவாளிகள் தரப்பு தற்போது முடிவு செய்திருக்கிறது. இது தண்டனையை நிறைவேற்றாமல் காலம்தாழ்த்துவதற்கான நடவடிக்கை. குற்றவாளிகள் நான்கு பேரும் ஒரே நிலைப்பாட்டில் இருந்தால்தான் தண்டனையை நிறைவேற்றமுடியும். குற்றவாளிகள் வெவ்வேறு நிலைப்பாட்டில் இருக்கும்போது தண்டனை இன்னும் காலம்தாழ்ந்தே போகும்” என்றார்.