Published:Updated:

`பெண் வதைக்கு மரண தண்டனைதான் தீர்வா!?’ - நிர்பயா வழக்கின் விவாதங்கள்

நிர்பயா குற்றவாளிகள்
நிர்பயா குற்றவாளிகள்

மரண தண்டனை குறித்தும் இந்திரா ஜெய்சிங் மீதான கங்கனா ரனாவத்தின் விமர்சனம் குறித்தும் பல பெண்கள் அமைப்புகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

டெல்லி நிர்பயா பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் பிப்ரவரியில் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இச்சூழலில், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் குற்றவாளிகளுக்கான மரண தண்டனைக்கு எதிராகக் கருத்து கூறியிருந்தார்.

நிர்பயா பெற்றோர்
நிர்பயா பெற்றோர்

இதற்கு பதில் கருத்து கூறிய பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், "அந்த வழக்கறிஞரை குற்றவாளிகளின் சிறையில் ஒருநாள் தங்கச் செய்ய வேண்டும்” என்பது போன்ற கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். கங்கனாவின் இந்தப் பேச்சு பல விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. இதற்கிடையே மரண தண்டனை குறித்தும் இந்திரா ஜெய்சிங் மீதான கங்கனாவின் விமர்சனம் குறித்தும் பல பெண்கள் அமைப்புகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

`இந்திரா ஜெய்சிங்கை அந்த குற்றவாளிகளுடன் சிறையிலிடுங்கள்!’- நிர்பயா வழக்கில் கங்கனா ரனாவத் ஆவேசம்

இதுதொடர்பாக டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அனைத்திந்திய முற்போக்குப் பெண்கள் கூட்டமைப்பு, "பெண்கள் தினமும் எதிர்கொள்ளும் பாலியல் கொடுமைகளுக்கு எவ்வித தீர்வும் தராத வகையில்தான் இந்த மரணதண்டனை தீர்ப்பு அமைந்துள்ளது” எனக் கூறியுள்ளது.

நிர்பயா
நிர்பயா

பத்திரிகையாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் தலைவர், "குற்றவாளிகளுக்கு தண்டனை தரக்கூடாது என்று இங்கு எந்தப் பெண்களுமே கூறவில்லை. ஆனால், அந்த ஒரு மரணதண்டனை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அத்தனையையும் நிறுத்திவிடுமா? நிர்பயா வன்புணர்வுக்கொலை செய்யப்பட்டு ஏழு வருடங்கள் கடந்துவிட்டன. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வுக் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அப்போது அமைக்கப்பட்ட நீதிபதி வர்மா கமிஷன் பரிந்துரைத்த சட்டத்திருத்தங்களை இதுவரை மத்திய அரசு ஏன் மேற்கொள்ளவில்லை? கமிஷனின் பரிந்துரைகளை நிறைவேற்றுவது மட்டுமே நிரந்தரத் தீர்வுக்கான வழியாக இருக்கும்.

வெறும் 30 சதவிகிதப் பாலியல் குற்ற வழக்குகளுக்கு மட்டுமே இந்திய நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியிருக்கின்றன. பாலியல் குற்றங்களை விசாரிக்கும் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, அந்த வகையில் வழக்குகளை விரைந்து முடிப்பது, பாலியல் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிப்பது, பாலியல் குற்றவாளிகளுக்கு உதவும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பது, பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்கும் காவல்துறை மற்றும் மருத்துவக் குழுவுக்குத் தகுந்த பயிற்சிகள் கொடுப்பது உள்ளிட்ட பல பரிந்துரைகள் இன்னும் செயல்படுத்தப்படாமலேயே இருக்கின்றன. முக்கியமாகப் பாலியல் வன்புணர்வுக் குற்றங்களுக்கு மரண தண்டனைத் தீர்வாகாது என கமிஷன் பரிந்துரை குறிப்பிடுகிறது” என்றார்.

`கங்கனா பேசியது சரியானது; மனித உரிமைகள் பெயரில் வியாபாரம்!’ -கொதித்த நிர்பயாவின் தாயார்

சந்திப்பில் கலந்துகொண்ட ஆவணப்பட இயக்குநர் வாணி சுப்ரமணியன் கூறுகையில், "பாலியல் வன்புணர்வுக் கொலை குற்ற வழக்குகளில் மரண தண்டனை தரப்படுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பு இதுபோன்று மூன்று வழக்குகளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை எதுவும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்தவில்லை. ஆனாலும் மக்கள் மரண தண்டனை என்ற நிலைப்பாட்டிலேயே பிடிவாதமாக இருக்கிறார்கள். தண்டனை என்றாலே பழிக்குப்பழிதான் என்பது என்ன மாதிரியான மனநிலை? பழிவாங்குவதற்கு நீதிமன்றம் எதற்கு, நீதி தருவதற்குத்தான் நீதிமன்றம்!” என்றார்.

`சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!’- கோபி இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்த போக்ஸோ நீதிமன்றம்

மேலும், "பாலியல் வன்புணர்வுக் குற்றங்கள் என்றாலே அது பெண்களுக்கு எதிரானது மட்டும்தான் என்கிற பார்வை இன்னும் பொதுச்சமூகத்தில் நிலவுகிறது. இவர்கள் திருநங்கைகள், திருநம்பிகள் உள்ளிட்ட மாற்றுப்பாலினத்தவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் கண்டுகொள்வதில்லை. மாற்றுப்பாலினத்தவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் இதுபோன்ற விவாதங்களில் சேர்க்கப்படவேண்டும்” என்று சந்திப்பில் கலந்துகொண்ட பார்வையாளர்கள் தரப்பிலிருந்து கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

அடுத்த கட்டுரைக்கு