இந்து தெய்வம் குறித்து அவதூறான கருத்து தெரிவித்தவர்கள் மீது தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கவில்லை என ட்விட்டருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆதித்யா சிங் தேஷ்வால் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ``அனைத்து மதங்களுக்கும் எதிரான அபத்தமான கருத்துகளை ட்வீட் செய்யும் பயனர்களையும், மேலும் தொடர்ந்து இது போன்ற கருத்துகளை ட்விட்டரில் பகிர்ந்துவருபவர்கள் மீதும் ட்விட்டர் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்து தெய்வம் இழிவான முறையில் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது, அத்தகைய ட்வீட்டுகள் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை மீறுவதாக உள்ளது" என மனுதாரர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு தற்காலிக தலைமை நீதிபதி விபின் சங்கி, நீதிபதி நவீன் சாவ்லா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ``காளி தேவி பற்றிய அவதூறு கருத்து நாத்திகம் பேசும் குடியரசு நாட்டின் ட்விட்டர் கணக்கிலிருந்து பதியப்பட்டுள்ளது. பிற பிராந்தியங்கள் மற்றும் இனங்களைச் சேர்ந்த மக்களின் உணர்வுகளைப் பற்றி ட்விட்டர் கவலைப்படுவதில்லை" எனத் தெரிவித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதைத் தொடர்ந்து ட்விட்டர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, ``தற்போதைய வழக்கில் உள்ள புண்படுத்தும் அந்த குறிப்பிட்ட ட்வீட் நீக்கப்பட்டுள்ளது. மேலும், பதிவுகள் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு இல்லாமல் தவறான ட்வீட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால் ட்விட்டர் எந்த நபரையும் தடுக்க முடியவில்லை" என்று அவர் பதிலளித்தார்.
இதற்கு நீதிபதிகள், ``நீதிமன்ற உத்தரவு இல்லாமல் தவறான ட்வீட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என்றால், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கணக்கை ஏன் தடுத்தீர்கள்?" எனக் கேள்வி எழுப்பினர். மேலும், இந்த வழக்கின் உள்ளடக்கத்தை ஆய்வு செய்து ஐடி சட்டத்தின் கீழ் கணக்கை முடக்குவது குறித்து முடிவு செய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.