Published:Updated:

`சிறையிலேயே விசாரிக்கலாம்; தேவைப்பட்டால் கைது!' - ப.சிதம்பரம் வழக்கில் அமலாக்கத்துறைக்கு அனுமதி

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திடம் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை காவலில் வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ப.சிதம்பரம் கடந்த 50 நாள்களுக்கும் மேலாக நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை 14 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி அமலாக்கத்துறை சார்பில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அஜய்குமார், `அரைமணிநேரம் தருகிறேன்; நீதிமன்றத்திலே விசாரித்துக்கொள்ளுங்கள்’ என்றார். இதற்கு மறுப்பு தெரிவித்த, அமலாக்கத்துறை, `நீதிமன்றத்தில் விசாரணை நடத்த விரும்பவில்லை; சிறையில் விசாரிக்கிறோம்’ என்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்தது. இதையடுத்து நீதிபதி அஜய்குமார், டெல்லி திகார் சிறையிலிருக்கும், ப.சிதம்பரத்திடம் 30 நிமிடங்கள் விசாரணை நடத்தலாம். தேவைப்பாட்டால் கைது செய்யலாம் என்று அமலாக்கத்துறைக்கு நீதிபதி அனுமதி அளித்தார். நாளை காலை 8 மணி அளவில் சிறையிலிருக்கும் ப.சிதம்பரத்திடம் ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த உள்ளது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

முன்னதாக இன்று காலை உச்சநீதிமன்றத்தில், ப.சிதம்பரம் தாக்கல்செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கபில்சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி, `ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களை கலைக்கமாட்டார் எனக் கூறமுடியாது என யூகத்தின் அடிப்படையில் டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

Vikatan

ப.சிதம்பரம் மீதோ அல்லது அவர்களின் குடும்பத்தினர் மீதோ இதற்கு முன் சாட்சியங்களைக் கலைத்ததாக எந்தவிதமான குற்றச்சாட்டும் இல்லை. அரசுக்கு எந்தவகையிலும் இழப்பீடு ஏற்படுத்தியதாகவும் இல்லை. அவ்வாறு இருக்கும்போது தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்படுகிறது. சாட்சியங்களை ப.சிதம்பரம் கலைத்துவிடுவார் என்றால், சாட்சியங்களைப் பாதுகாக்க சிபிஐ என்ன செய்தது? ஜாமீன் வழங்கக் கூடாது என்பதற்காகவே, சாட்சியங்களை ப.சிதம்பரம் கலைத்துவிடுவார் எனக் கூறப்படுகிறது.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

சி.பி.ஐ அமைப்பு எந்தவிதமான காரணமும் இன்றி, தொடர்ந்து சிறையிலேயே அடைத்துவைத்து அவமானப்படுத்த விரும்புகிறது” என்று தெரிவித்தனர். சிபிஐ சிறப்பு வழக்கறிஞரின் வாதம் நாளை நடைபெற உள்ளதால், ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது தீர்ப்பு வழங்குவார்கள் எனத் தெரிகிறது. இதனிடையே டெல்லி திகார் சிறையில் வைத்தே ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாம் என டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு