திருநங்கைகளுக்கான அடிப்படை உரிமைகளுக்கான போராட்டம் நெடிய தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. குறிப்பாக, கழிப்பறை வசதி. திருநங்கைகளுக்கான கழிவறை என்பது எங்கேயும் காணக்கிடைப்பதில்லை.
இந்நிலையில், டெல்லியைச் சேர்ந்த ஜேஸ்மின் கவுர் என்பவர் இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், `டெல்லியில் திருநங்கைகளுக்குத் தனி கழிவறை வசதி இல்லாமல் இருக்கிறது.
இதனால் ஆண்கள் பயன்படுத்தும் கழிவறைகளை திருநங்கைகள் பயன்படுத்தவேண்டியிருக்கிறது. அவ்வாறு பயன்படுத்துவதால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மத்திய அரசு திருநங்கைகளுக்கு தனி கழிவறை கட்ட நிதி ஒதுக்கியும் டெல்லியில் கழிவறைகள் கட்டப்படாமல் இருக்கிறது.

நாட்டில் மக்கள் தொகையில் 7% வரை திருநங்கைகள் இருக்கின்றனர். எனவே மற்ற மக்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் திருநங்கைகளுக்கும் கிடைக்க வேண்டும். மைசூர், போபால், லூதியானா போன்ற நகரங்களில் ஏற்கெனவே திருநங்கைகளுக்குத் தனி கழிவறை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நாட்டின் தலைநகரத்தில் அது போன்ற வசதி இல்லாமல் இருக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இம்மனு, கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது டெல்லி அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், ’டெல்லியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 505 கழிவறைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றை திருநங்கைகள் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்படும், திருநங்கைகளுக்குத் தனிக்கழிவறை கட்டும் பணியும் விரைவுபடுத்தப்படும்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து கருத்து தெரிவித்திருந்த நீதிபதிகள், `இனி எங்கு புதிய கழிவறைகள் கட்டப்பட்டாலும் அங்கு திருநங்கைகளுக்குத் தனிக்கழிவறை கட்டப்படவேண்டும்’ என்று தெரிவித்திருந்தனர்.
இவ்வழக்கு மீண்டும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், `டெல்லி அரசு தாக்கல் செய்த அறிக்கையில், திருநங்கைகளுக்குத் தனி கழிவறை கட்டுவதற்கான பணிகள் நடந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் கட்டப்படவில்லை. டெல்லியில் 8 வாரங்களுக்குள் திருநங்கைகளுக்குத் தனிக்கழிவறை கட்டவேண்டும். 8 வாரங்கள் கழித்து புதிய அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். டெல்லி மாநகராட்சி தாக்கல் செய்துள்ள அறிக்கையில், கழிவறை கட்டும் பணி பேப்பர் மட்டத்தில்தான் இருக்கிறது. ஆனால் பணிகள் எதுவும் நடக்கவில்லை. எனவே 8 வாரங்களுக்குள் திருநங்கைகளுக்குத் தனிக்கழிவறை கட்ட இறுதி சந்தர்ப்பம் கொடுக்கப்படுகிறது. அப்படி கட்டவில்லையெனில் டெல்லி மாநகராட்சி கமிஷனர் ஆஜராக உத்தரவிடப்படும்’ என்று எச்சரித்தனர்.
இது தொடர்பான வழக்கு வரும் ஜூலை மாதம் 14-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.