2016 நவம்பர் 8-ம் தேதி கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த வழக்கில் `பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. ஆனால் `நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றிய பின்பே பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். எந்தப் பரிசீலனையையும் மேற்கொள்ளாமல், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்திருக்கிறது.

எனவே, பண மதிப்பிழப்பு சரியே என்ற கருத்தில் இருந்து நான் மாறுபடுகிறேன்’ என தன்னுடைய மாறுபட்ட கருத்தைத் தெரிவித்து அனைவரின் கவனத்தையும் பெற்றிருக்கிறார் நீதிபதி பி.வி.நாகரத்னா.
நீதிபதி பி.வி.நாகரத்னா, 1962 அக்டோபர் 30-ம் தேதி பிறந்தார். இவர் இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ஈ. எஸ் வெங்ட ராமையாவின் மகள். டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற இவர், 2008 முதல் 2021-ம் ஆண்டு வரை கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பணியாற்றினார். வணிகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டங்கள் சார்ந்த மிக முக்கியமான தீர்ப்புகளை கர்நாடகாவில் வழங்கியுள்ளார்.
2012-ல் போலிச் செய்திகளின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்த இந்தியாவில் ஒளிபரப்பு ஊடங்கங்களை ஆய்வு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டார். மாநிலத்துக்கு வெளியே வாங்கப்படும் வாகனங்களை கர்நாடகாவில் பயன்படுத்த, உரிமையாளர்கள் `வாழ்நாள் வரி’ கட்ட வேண்டியதில்லை என வாகன வரிவிதிப்புக்கு எதிராக 2016-ல் மற்றொரு நீதிபதியுடன் சேர்ந்து தீர்ப்பளித்தார்.

பணிக்கொடை வழங்குவது தொடர்பான தொழிலாளர் சட்ட விதிகள் கோயில் ஊழியர்களுக்குப் பொருந்தாது, கோயில்கள் வணிக நிறுவனங்கள் அல்ல என்று 2019-ம் ஆண்டில் மற்ற இரண்டு நீதிபதிகளுடன் தீர்ப்பளித்தார். கோவிட் பெருந்தொற்றின்போது, குழந்தைகளுக்கான இணைய வகுப்புகளை உறுதி செய்து, ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களை முன்னிலை தொழிலாளர்களாகக் கருத வேண்டும் என உத்தரவிட்டார்.
இவரின் கடமை மற்றும் உழைப்பைத் தொடர்ந்து, இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக 2021 ஆகஸ்ட் 31-ம் தேதி பதவி ஏற்றார். இந்தியா குடியரசாக மாறியது முதல் இதுவரை இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியில் 50 பேர் இருந்துள்ளனர். அவர்கள் அனைவருமே ஆண்கள். ஆனால், நீதிபதி பி.வி.நாகரத்னாவுக்கு 2027-ம் ஆண்டுக்குள் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.