அலசல்
Published:Updated:

தூக்கு கயிற்றின் முன் 539 பேர்... அதிகரிக்கும் மரண தண்டனை... குற்றங்களை குறைக்க உதவுமா?

அதிகரிக்கும் மரண தண்டனை.
பிரீமியம் ஸ்டோரி
News
அதிகரிக்கும் மரண தண்டனை.

ஒரு குற்றம் நடக்கிறபோது, சட்ட நடைமுறைகளுக்கு அப்பால் அதீத உணர்ச்சிரீதியான விவாதங்கள் சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படுகின்றன. கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என அவை அவசரப்படுத்துகின்றன;

இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2022-ம் ஆண்டில் 165 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 539 பேர் தூக்குக்கயிற்றின் முன் நிற்கிறார்கள். இது தொடர்பான ஆய்வறிக்கை, மனித உரிமை ஆர்வலர்களிடையே அதிர்வை ஏற்படுத்தியிருப்பதுடன், அது பற்றிய விவாதத்தையும் கிளப்பியிருக்கிறது!

தூக்கு கயிற்றின் முன் 539 பேர்... அதிகரிக்கும் மரண தண்டனை... குற்றங்களை குறைக்க உதவுமா?

இந்தியாவில் மரண தண்டனை வழக்குகள் பற்றிய விவரங்களை டெல்லியில் இருக்கும் தேசிய சட்டப் பல்கலைக்கழகம் ஒவ்வோர் ஆண்டும் ஆய்வறிக்கையாக வெளியிட்டுவருகிறது. சமீபத்தில் 2022-ம் ஆண்டுக்கான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. “2022-ம் ஆண்டு 165 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. இது, கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகம். 2021-ம் ஆண்டு, 146 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காரணமாக நீதிமன்றச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்ததால், 2020-ம் ஆண்டு 77 பேருக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கப்பட்டது. 2022-ம் ஆண்டு டிசம்பர் நிலவரப்படி, இந்தியச் சிறைகளில் 539 மரண தண்டனைக் கைதிகள் இருக்கிறார்கள். அதிகபட்சமாக உத்தரப்பிரதேசச் சிறைகளில் 100 பேர், குஜராத் சிறைகளில் 61 பேர், ஜார்க்கண்ட் சிறைகளில் 46 பேர் மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கிறார்கள்” என்பதே அந்த ஆய்வறிக்கையின் சுருக்கம்.

தூக்கு கயிற்றின் முன் 539 பேர்... அதிகரிக்கும் மரண தண்டனை... குற்றங்களை குறைக்க உதவுமா?
தூக்கு கயிற்றின் முன் 539 பேர்... அதிகரிக்கும் மரண தண்டனை... குற்றங்களை குறைக்க உதவுமா?

இந்த அறிக்கையால், மரண தண்டனை பற்றிய விவாதங்கள் மீண்டும் எழுந்திருக்கின்றன. `மரண தண்டனை தேவைதானா... இது குற்றங்களைக் குறைக்க உதவுகிறதா?’ என்று வாத பிரதிவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. “இந்தியாவில் கீழமை நீதிமன்றங்கள் பல வழக்குகளில் மரண தண்டனை விதித்தாலும், மரண தண்டனை நிறைவேற்றம் குறைவாகத்தான் இருக்கிறது. இப்போது மரண தண்டனை அதிகரித்திருப்பதன் பின்னணியில் சமூக ஊடகங்களும் இருக்கின்றன” என்கிறார் எழுத்தாளரும் வழக்கறிஞருமான இரா.முருகவேள்.

“ஒரு குற்றம் நடக்கிறபோது, சட்ட நடைமுறைகளுக்கு அப்பால் அதீத உணர்ச்சிரீதியான விவாதங்கள் சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படுகின்றன. கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என அவை அவசரப்படுத்துகின்றன; அழுத்தம் கொடுக்கின்றன. குற்றம் பிறக்குமிடம், அதற்கான உளவியல், சமூகக் காரணிகள் குறித்த ஆழமான பார்வையற்ற, உணர்ச்சிரீதியான விவாதங்கள் சில வழக்குகளில் மரண தண்டனை வழங்க வேண்டிய நிர்பந்தத்தை நீதிமன்றத்துக்கு ஏற்படுத்துகின்றன. இந்தியாவில் மரண தண்டனைக்கு எதிரான சிந்தனைகளும் குரல்களும் எழுந்தாலும், குற்றங்கள் குறைய சமூகத்தில் மரண தண்டனை குறித்த ஓர் அச்சம் இருக்க வேண்டும் என்று காவல்துறையும், நீதித்துறையும், ஆட்சியாளர்களும் நினைக்கிறார்கள்” என்கிறார் அவர்.

இரா.முருகவேள் - ச.பாலமுருகன்
இரா.முருகவேள் - ச.பாலமுருகன்

மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (பி.யூ.சி.எல்) மாநிலச் செயலாளரும், வழக்கறிஞருமான ச.பாலமுருகனோ, “மரண தண்டனையே கூடாது” என்கிறார். அவர் மேலும் கூறுகையில், “ஒருகாலத்தில், கொலை வழக்கு என்றாலே மரண தண்டனை கட்டாயம் என்ற நிலை இருந்தது. கொலை வழக்கில் மரண தண்டனை வழங்கப்படவில்லை என்றால், அதற்கான விளக்கத்தை நீதிபதி கொடுத்தாக வேண்டும் என்கிற நிலைகூட இருந்தது. காலப்போக்கில், `மரண தண்டனை கூடாது’ என்ற கருத்து நீதிபதிகள் மத்தியிலிருந்தே எழுந்தது. ‘மரண தண்டனையால் குற்றங்கள் குறையப்போவதில்லை... குற்றங்களுக்கு மரண தண்டனை தீர்வும் இல்லை என்பதால் அது தேவையில்லை’ என்ற கருத்தைப் பல நீதிபதிகள் முன்வைத்தனர். பிறகு, அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கருத்து எழுந்தது. ஆனால், ‘அரிதிலும் அரிதான வழக்கு’ என்பதற்கு எந்த வரையறையும் இதுவரை இல்லை. அரிதிலும் அரிதான என்பது, ஒரு தனிப்பட்ட நீதிபதியின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப எடுத்துக்கொள்ளப்படுகிறது. நிலப்பிரபுத்துவப் பின்னணியிலிருந்து வரும் ஒரு நீதிபதிக்கு, கூலி உயர்வு கேட்பவர் மிகப்பெரிய கொடுமைக்காரராகத் தெரிவார். சாதியப் பின்புலத்திலிருந்து வரும் ஒரு நீதிபதிக்கு, தனக்கான நீதியைக் கேட்டுப் போராடும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் மிகக் கொடூரமானவராகத் தெரியலாம். இப்படியாக, சட்டத்தில் வரையறை இல்லாமல் தனிப்பட்ட கருத்தின் அடிப்படையில் நீதி வழங்கப்படும் நிலை இருக்கிறது. மரண தண்டனையால் குற்றங்கள் குறையப்போவதில்லை. மேலும், குற்றம் புரிந்த ஒருவர் உயிருடன் இருந்து தண்டனையை அனுபவிக்க வேண்டும். தன்னுடைய தவறை, குற்றத்தை தவறு என்று அவர் உணர வேண்டும். ஒருவரைத் தூக்கிலிட்டு சாகடிப்பது சரியான தண்டனை வடிவம் கிடையாது” என்கிறார் ச.பாலமுருகன்.

539 உயிர்கள் தூக்குக்கயிற்றின் முன் நிற்கின்றன. என்ன செய்யப் போகிறோம் நாம்?