அரசியல்
அலசல்
Published:Updated:

வெற்றிக் கொண்டாட்டம் இருக்கட்டும்... போராடியவர்களுக்கு நீதி எப்போது?

ஜல்லிக்கட்டுப் போராளிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜல்லிக்கட்டுப் போராளிகள்

- கொதிக்கும் ஜல்லிக்கட்டுப் போராளிகள்!

- ராணி கார்த்திக்

ஜல்லிக்கட்டுக்காக இயற்றப்பட்ட அவசரச் சட்டத்தை அங்கீகரித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில், “போராடிய எங்கள்மீது போடப்பட்ட வழக்குகள் ரத்தாவது எப்போது?” என்று வேதனைக்குரல் எழுப்புகிறார்கள் ஜல்லிக்கட்டுப் போராளிகள்.

ஜல்லிக்கட்டுப் போராளிகள்
ஜல்லிக்கட்டுப் போராளிகள்

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்துகொண்ட நொச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் நம்மிடம் பேசும்போது, “போராட்டத்தின் இறுதிநாளில் அவசரச் சட்டம் இயற்றப்பட்டுவிட்டது என்று கூறி சென்னை மெரினா கடற்கரையில் திரண்டிருந்த எங்களைக் கலைந்து போகச் சொல்லி போலீஸார் வற்புறுத்தினார்கள். மீடியாக்காரர்களும் அப்புறப்படுத்தப்பட்டனர். போலீஸாரின் இந்த அடக்குமுறையைக் கண்டித்து, மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்களுக்கு பக்கபலமாக நின்ற என்னை போலீஸார் சுயநினைவை இழக்கும் அளவுக்குத் தாக்கினர். என்மீது 25 வழக்குகள் போடப்பட்டன. சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின்பேரில் அந்த வழக்குகளிலிருந்து விடுபட்டிருக்கிறேன். ஆனால், என்னோடு துணைநின்ற 25-க்கும் மேற்பட்ட மீனவர்கள்மீது போடப்பட்ட வழக்குகள் இன்னமும் நிலுவையிலிருக்கின்றன. அன்று எங்களைத் `தீவிரவாதிகள்’ என்றும், `ஃப்ரீ செக்ஸுக்காகக் கூடிய கூட்டம்’ என்றும் விமர்சித்தவர்கள் இப்போது வெற்றியில் பங்குபோட வந்திருக்கிறார்கள்” என்று கொதித்தார்.

மணிகண்டன், செல்வராஜ்
மணிகண்டன், செல்வராஜ்

மதுரையில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு, 2021-ம் ஆண்டுக்கான ‘விகடன் நம்பிக்கை விருது’ பெற்ற கம்பூர் இளைஞர்கள் குழுவைச் சேர்ந்த செல்வராஜிடம் பேசினோம். “ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கு கொண்டதற்காக மதுரை மாவட்டத்தில் மட்டும் 200-க்கும் மேற்பட்டவர்கள்மீது சி.பி.சி.ஐ.டி போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். கடந்த 2021-ம் ஆண்டு, ‘ஜல்லிக்கட்டுப் போராட்ட வழக்கு முறியடிப்புக்குழு’ என்ற எங்கள் அமைப்பின் சார்பாக ஒரு மாநாடு நடத்தினோம். உடனே, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்குகள் ரத்துசெய்யப்படும்’ எனச் சட்டமன்றத்தில் அறிவித்தார். ஆனால் தமிழ்நாடு காவல்துறை தரப்பில் பெயர் தெரியாமல் போடப்பட்ட வழக்குகள் மட்டுமே ரத்துசெய்யப்பட்டன. ஆனால், சி.பி.சி.ஐ.டி-யால் போடப்பட்ட வழக்குகள் எதுவும் ரத்துசெய்யப்படவில்லை. இது தொடர்பாக விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் கமிஷன், தனது அறிக்கையை ஓராண்டுக்கு முன்பே தாக்கல் செய்துவிட்டது. ஆனால் இப்போதுவரை அந்த அறிக்கையை அரசு வெளியிடவில்லை. எங்கள் மீதான வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படவில்லை... நீதியும் கிடைக்கவில்லை. மாதம்தோறும் வாய்தாவுக்காக நீதிமன்றப் படியேறிக்கொண்டிருக்கிறோம். எங்கள்மீதான வழக்கை இந்த அரசாவது ரத்துசெய்ய வேண்டும்” என்றார்.

வாடிவாசலிலிருந்து காளைகள் கட்டவிழ்க்கப்பட்டுவிட்டன. வழக்கிலிருந்து இளைஞர்கள் விடுபடுவார்களா?