Published:Updated:

தப்பும் ஊழல் பெருச்சாளிகள்... சிக்கும் பலியாடுகள்!

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு விசாரணை நேர்மையாக நடக்குமா?

பிரீமியம் ஸ்டோரி

நாளுக்குநாள் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது தேர்வாணைய முறைகேடு விவகாரம். ஆனால், விசாரணை நேர்மையாக நடக்குமா, தவறு செய்தவர்கள் அனைவரும் சிக்குவார்களா என்று பலரும் சந்தேகம் எழுப்புகின்றனர்.

டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் இடைத்தரகராகச் செயல்பட்ட காவலர் சித்தாண்டியைக் கைதுசெய்துள்ள சி.பி.சி.ஐ.டி போலீஸார், முறைகேட்டுக்குத் துணைபோன சில அதிகாரிகளின் பட்டியலை சித்தாண்டியின் வாக்குமூலமாகப் பெற்றுள்ளனராம். முன்னாள் தேர்வாணைய உறுப்பினர், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் எனப் பலரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அவர்களையும் சி.பி.சி.ஐ.டி விசாரிக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

போலீஸ் பிடியில் ஜெயக்குமார்
போலீஸ் பிடியில் ஜெயக்குமார்

கடந்த 9.2.2020 தேதியிட்ட ஜூ.வி இதழில், ‘அமைச்சருக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்காது! - தெறிக்கவிடும் டி.என்.பி.எஸ்.சி’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதில், ‘சென்னைக்கு அருகே உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சித்தாண்டியை சில தினங்களுக்கு முன்னரே சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைதுசெய்துவிட்டனர். அவரிடம் விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களைப் பெற்ற பிறகே முறைப்படி கைதுசெய்வார்கள்’ என எழுதியிருந்தோம். நாம் சொன்னதுபோலவே, இப்போது சம்பவங்கள் நடந்துவருகின்றன. கடந்த பிப்ரவரி 4-ம் தேதி சிவகங்கையில் உள்ள தன் மாமனாரின் பண்ணையில் பதுங்கியிருந்தபோது, சித்தாண்டியைக் கைதுசெய்யததாக அறிவித்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்ததாகக் கூறியுள்ளனர்.

சித்தாண்டி அளித்த தகவலின்பேரில் காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் காவலர் பூபதி, எழிலகம் வணிகவரித் துறை அலுவலகத்தில் பணியாற்றும் கார்த்திக் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம், வடமருதூர் வி.ஏ.ஓ-வாகப் பணியாற்றும் சக்தி என்கிற நாராயணன் என்பவரும் கைதுசெய்யப் பட்டார். சி.பி.சி.ஐ.டி-யால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இடைத்தரகரான முகப்பேர் ஜெயக்குமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இப்படி விறுவிறுவென அடுத்தடுத்த சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

சி.பி.சி.ஐ.டி-யிடம் சித்தாண்டி கக்கியது என்ன? சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.

சித்தாண்டி
சித்தாண்டி

‘‘2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி நடந்த குரூப்-2ஏ தேர்வில் 40 பேரிடம் தலா 10 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கிக்கொண்டு பணி பெற்றுத் தந்துள்ளதை ஒப்புக்கொண்டிருக் கிறார் சித்தாண்டி. இந்த மோசடியில் தொடர்புள்ள ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் பலரின் பெயர்களை சித்தாண்டி கூறியுள்ளார். வாங்கிய பணத்தை எந்தெந்த அதிகாரிகளுக்கு லஞ்சமாகப் பிரித்துக் கொடுத் துள்ளார் என்ற விவரங்களையும் சேகரித்துள்ளோம். அவரால் பணி நியமனம் பெற்ற 40 அதிகாரிகளின் பட்டியலும் தயாராகி யுள்ளது. அவர்களையும் கைதுசெய்து விசாரிக்க உள்ளோம். குரூப்-4 தேர்வில் இதேபோன்ற மோசடியை நடத்தியுள்ள சித்தாண்டி, 168 பேருக்கு முறைகேடாகப் பணியிடங்களைப் பெற்றுத் தந்துள்ளார். அதுகுறித்து தனியாக விசாரிக்கப்படவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு ஏஜென்ட்டை நியமித்து இந்தக் கும்பல் வசூல் வேட்டை நடத்தியிருக்கிறது. அப்படியொரு ஏஜென்ட்தான் வடமருதூர் வி.ஏ.ஓ-வான நாராயணன். மல்டிலெவல் மார்க்கெட்டிங் போல், இந்த ஏஜென்ட்டுகளுக்குக் கீழே சிறு ஏஜென்ட்டுகள் இருக்கின்றனர். பணம் கொடுத்து அரசுப்பணி பெற துடிக்கும் நபர்களை அடையாளம் கண்டு, மாவட்ட ஏஜென்ட்டுகளிடம் அழைத்துச் செல்வார்கள். சிறு ஏஜென்ட்டுகளுக்கு தனியாக கமிஷன் அளிக்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி-யில் அரங்கேறிய முறைகேடு போன்று, காவலர்களைத் தேர்வுசெய்யும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்திலும் முறைகேடு நடைபெற்றிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படை யிலும் விசாரித்துவருகிறோம்’’ என்றனர்.

டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் பணியாற்றும் சார்புச்செயலாளர்கள் சிலரின் பெயர் களையும் சித்தாண்டி தன் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும், விடைத்தாள்களை மாற்றி வைப்பதற்கு இவர்கள் உதவியதாகவும் சி.பி.சி.ஐ.டி வட்டாரத்தில் கூறப்படுகிறது. 2017, குரூப்-2ஏ தேர்வின்போது ஆணையத் திலிருந்து மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பெயர்களையும் சித்தாண்டி கக்கியுள்ள தாகவும் கூறப்படுகிறது. முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவரின் பெயரையும் தன் வாக்குமூலத்தில் சித்தாண்டி கூறியுள்ளார். அவரை எப்படி நெருங்குவது என சி.பி.சி.ஐ.டி போலீஸார் கையைப் பிசைவதாகவும் தகவல் வெளியாகியிருக் கிறது.

நேர்மையான டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.

‘‘டி.என்.பி.எஸ்.சி தேர்வு வினாத்தாள், விடைத்தாள்களை எடுத்துச் செல்ல 2017-ம் ஆண்டு ஓப்பன் டெண்டர் விடப்பட்டது. கோவையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் மட்டுமே டெண்டரில் கலந்துகொண்டது. டெண்டர் விடப்படும்போது சட்டப்படி குறைந்தபட்சம் இருவர் கலந்துகொள்ள வேண்டும். ஆனால், சட்டத்துக்குப் புறம்பாக அவர்களுக்கு டெண்டர் அளிக்கப்பட்டது. தேர்வு முறைகேடுகள் வெளிவந்துள்ள நிலையில், இந்த நிறுவனத்தின் லாரி ஓட்டுநர் கல்யாணசுந்தரம் சி.பி.சி.ஐ.டி போலீஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். முறைகேட்டில் இந்த நிறுவனத்துக்கு என்ன பங்களிப்பு என்பதை விசாரித்தால் இன்னும் பல உண்மைகள் வெளிவரும்’’ என்றனர்.

சித்தாண்டியைத் தொடர்ந்து முக்கிய இடைத்தரகரான ஜெயக்குமாரும் சி.பி.சி.ஐ.டி வசம் சிக்கியுள்ளார். இவர் களிடம் மட்டும் விசாரணையை நடத்திவிட்டு, டி.என்.பி.எஸ்.சி விவகாரத்தை மூடிமறைக்க முடிவெடுத்திருப்பதாகவும் பேச்சு எழுந்துள்ளது. சித்தாண்டி வாக்குமூலத்தில் அளித்துள்ள அதிகாரிகளை நெருங்கவோ, ஆணையத்தின் முன்னாள் நிர்வாகிகளை விசாரிக்கவோ, மக்கள் பிரதிநிதிகள் சிலருக்கும் இந்த முறைகேட்டுக் கும் உள்ள தொடர்பை விசாரிக்கவோ வேண்டாம் என சி.பி.சி.ஐ.டி-க்கு கடும் அழுத்தம் தரப்படுவதாகவும் டி.என்.பி.எஸ்.சி வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

ஆடுகளை பலிகடாவாக்கிவிட்டு, ஊழல் பெருச்சாளிகள் தப்ப முயல்கின்றன.

கோட்டைக்கு டிரான்ஸ்ஃபர்!

தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவிப் பிரிவு அலுவலராகப் பணிபுரிபவர்கள்தான், கோப்புகளைத் தயாரிக்கும் பணியை மேற்கொள்கின்றனர். துறைரீதியிலான நடவடிக்கைக்குள்ளாகும் அதிகாரிகளின் கோப்புகளையும் இவர்கள்தான் தயாரிக்கின்றனர். இதில் முறைகேடு செய்து சிக்கும் பிரிவு அலுவலர்கள், வேறொரு துறைக்கு அனுப்பப்படுவர். அப்படிச் செல்பவர்கள் மீண்டும் தலைமைச் செயலகத்துக்குள் பிரிவு அலுவலராக நுழைவதற்கு, தலா 5 லட்சம் ரூபாய் லஞ்சம் அளிக்கிறார்களாம். மூன்று அமைச்சர்களிடம்தான் இந்தப் பணம் குவிவதாகக் கூறப்படுகிறது.

விசாரிக்கப்படுமா?

2018, நவம்பர் 11-ம் தேதி 1,199 பணியிடங்களுக்கு குரூப்-2 தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில், கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் பலர் தேர்வு எழுதினர். இவர்களுக்கு வயது 19, 20தான் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் பலர், தேர்வுப் பட்டியலில் முதல் 500 இடங்களைப் பெற்றனர். `தேர்வு மையங்களுக்குச் சென்று பயிற்சியெடுத்த தேர்வர்கள் பலரே தேர்ச்சிபெறாத நிலையில், முதன்முறையாகத் தேர்வு எழுதிய இந்த மாணவர்கள் மட்டும் அதிக மதிப்பெண் எடுத்தது எப்படி?’ என, தேர்வு எழுதிய மற்ற மாணவர்கள் சந்தேகிக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு