Published:Updated:

``அரசின் கருத்தோடு மாறுபடுவது தேசத் துரோகமல்ல!'' - உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா

தீபக் குப்தா
தீபக் குப்தா

உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா சமீபத்தில் நிகழ்த்திய உரையில் தேசத் துரோகப் பிரிவுகள் தவறாக கையாளப்படுவதைச் சாடியிருந்தார்.

டெல்லி உச்சநீதிமன்ற பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா சமீபத்தில் பேசியிருந்தார். அதில் தேசத் துரோகப் பிரிவுகள் அரசால் கையாளப்படுவதைக் கடுமையாகச் சாடியிருந்தார். சமீப காலங்களாக அரசின் கருத்தோடு, நிலைப்பாட்டோடு மாறுபட்டு நிற்பவர்களைத் தேசத் துரோகிகள் என முத்திரை குத்துவதும், தேசத் துரோக சட்டம் போடுவதும் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் தீபக் குப்தாவின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக மட்டுமல்லாமல், அரசை விமர்சிக்கக்கூடியதாகவும் பார்க்கப்படுகிறது.

உச்சநீதிமன்ற பார் கவுன்சில்
உச்சநீதிமன்ற பார் கவுன்சில்

அந்த நிகழ்வில் தீபக் குப்தா பேசியதாவது, "மாற்றுக் கருத்துகளை முடக்க நினைப்பது ஜனநாயகத்துக்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். ஏனென்றால் அரசாங்கங்கள் அனைத்து நேரங்களிலும் சரியாக இருக்க முடியாது. அரசிடமிருந்து மாறுபட்ட கருத்து கொண்டவர்கள் அனைவரையும் தேசத் துரோகிகள் என்று முத்திரை குத்திவிட முடியாது. அரசின் கருத்தோடு முரண்படுபவர்களைத் தேசத் துரோகிகள் என்று முத்திரை குத்தும் போக்கு தற்போது அதிகரித்து வருகிறது. தேர்தல் அரசியலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுதான் ஆட்சியில் அமர முடியும் என்றாலும் பெரும்பான்மைவாதம் என்பது ஜனநாயகத்துக்கு தீங்கானது.

ஒரு கட்சி 51% வாக்குகளைப் பெற்று ஆட்சியில் அமர்ந்துவிட்டால் அவர்களுக்கு வாக்களிக்காத 49% மக்கள் 5 ஆண்டுகளுக்குப் பேசாமல் இருக்க வேண்டுமா என்ன? ஜனநாயகத்தில் அனைத்து குடிமக்களுக்கும் பங்கு இருக்கிறது. ஒரு விஷயத்தில் பல்வேறு மாறுபட்ட கருத்துகள் இருப்பது யதார்த்தம். மாற்றுக் கருத்துக்கான உரிமை என்பது ஜனநாயகத்தின் இன்றியமையாத அம்சம். அமைதியாகப் போராடுவதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு. அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து போராடியதற்காக அல்லது மாற்றுக் கருத்து கொண்டதற்காக வெளிப்படையாக எல்லோரையும் தேசத் துரோகிகள் என்று அழைத்துவிட முடியாது. மக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுகிற வரையில்தான் ஒரு ஜனநாயகம் வெற்றிகரமாக இயங்க முடியும்.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்
யோகி ஆதித்யநாத் உற்று கவனிக்கும் தமிழக ஐ.பி.எஸ்  முனிராஜ்... பதற்றமான இடத்தில் முக்கிய அசைன்மென்ட்!

கர்நாடக பார் கவுன்சில் காஷ்மீர் மாணவர்களுக்கு ஆஜராக மாட்டோம் எனத் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. குறிப்பிட்ட சிலருக்காக வாதாட மாட்டோம் என பார் கவுன்சில் தன்னிச்சையாக தீர்மானிக்க முடியாது. இது சட்ட விதிகளுக்கு எதிரானது. நீதித்துறை எப்போதும் சுதந்திரமாகவும், பயமின்றியும் இயங்க வேண்டும். விமர்சிப்பதற்கான உரிமை அனைவருக்கும் உண்டு, நீதித்துறையும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதல்ல. தேர்தல் அரசியலில் கலந்துகொள்வது மட்டுமே ஜனநாயக உரிமை அல்ல. நாடு எவ்வாறு நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பதிலும், கொள்கை முடிவுகள் எடுக்கப்படுவதிலும் குடிமக்களுக்கு பங்குண்டு. அவர்களின் கருத்துகள் மதிக்கப்பட வேண்டும்.

அமைதியான வழியில் போராடுவது அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமை மட்டுமல்ல, அது மனித உரிமையும் கூட. சட்டத்தின் ஆட்சி ஜனநாயகத்துக்கு முக்கியம் என்பதை எவராலும் மறுக்க முடியாது. சர்வாதிகாரத்துக்கு, ஆதிக்கத்துக்கு மாற்றாக மக்கள் எப்போதும் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையுமே தேர்வு செய்வர். ஒரு ஜனநாயகத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த சுதந்திரமான நீதித்துறை வேண்டும். எந்தவித அரசியல், ஊடக அழுத்தங்களுக்கு கட்டுப்படாமல் பணியாற்றக்கூடிய நீதிபதிகள் வேண்டும். அரசியல் சட்டத்தைக் காலத்துக்கு ஏற்றவாறு திருத்திக்கொண்டே இருக்க முடியாது. சட்டத்துக்கான விளக்கங்கள் மாறுவது இயற்கை, அதற்கான சட்டத்தின் அடிப்படையையே மாற்றிவிட முடியாது.

தீபக் குப்தா
தீபக் குப்தா

நீதிபதிகள் சுதந்திரமாக சிந்திக்க வேண்டும். அதற்காக அனைத்து வழக்குகளிலும் மாறுபட வேண்டிய தேவையில்லை. ஆனாலும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் ஒரு நீதிபதி மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு தீர்ப்பு வழங்க வேண்டும் என நினைத்தால் கட்டாயம் வழங்க வேண்டும். பல நேரங்களில் இத்தகைய மாறுபட்ட தீர்ப்புகள்தான் பிற்காலத்தில் சட்டங்கள் ஆகியிருக்கின்றன. விமர்சனங்களை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதிலிருந்து நீதித்துறையோ, சட்டமன்றமோ, பாதுகாப்பு படைகளோ யாருமே விதிவிலக்கு கோர முடியாது. ஆரோக்கியமான விமர்சனங்கள்தான் ஜனநாயகம் செழிப்புடன் இயங்குவதை உறுதி செய்யும். விமர்சனங்களையும் மாற்றுக் கருத்துகளையும் முடக்கிவிட்டால் ஜனநாயகம் செயலற்றுப் போகும். அரசாங்கத்தை கேள்வி கேட்பது அனைத்து குடிமக்களின் உரிமை” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு