Published:Updated:

கேரள எம்.பி-யின் பேச்சும் வெங்கைய நாயுடுவின் பாராட்டும்! - நீதிபதிகள் நியமனத்தில் என்ன நடக்கிறது?!

நீதிபதிகள் நியமனத்தில் என்ன நடக்கிறது?!
News
நீதிபதிகள் நியமனத்தில் என்ன நடக்கிறது?!

`நீதிபதிகள் தேர்ந்தெடுக்கும் முறையில் மர்மம், ரகசியம், இருள் சூழ்ந்த நிலை இருக்க வேண்டுமா?’, `நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைக் கெடுத்துவிடாதீர்கள்’ என நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று (டிசம்பர், 22-ம் தேதி) நிறைவடைந்தது. மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேர் இடைநீக்கத்துக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் உட்பட கொந்தளிப்பான சூழலுக்கு மத்தியில் முக்கியமான பல மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. பல மசோதாக்களுக்கு எதிராகக் கடும் விமர்சனங்களை எதிர்க்கட்சி எம்.பி-க்கள் முன்வைத்தனர். அந்த வகையில், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளம் மற்றும் சேவை நிபந்தனைகள்) திருத்த மசோதா, 2021 குறித்த விவாதத்தின்போது, தி.மு.க., சி.பி.ஐ (எம்) உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் காட்டமான, காத்திரமான விமர்சனங்களை முன்வைத்தனர்.

தயாநிதி மாறன்
தயாநிதி மாறன்

தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரான தயாநிதி மாறன், ``தொடர்ச்சியாக உங்கள் விருப்பப்படி எல்லா மசோதாக்களையும் நிறைவேற்றிவருகிறீர்கள். எதிர்க்கட்சிகளின் கருத்துகளை நீங்கள் ஏற்பதில்லை. வெறும் பார்வையாளர்களாக மட்டுமே எதிர்க்கட்சி உறுப்பினர்களை வைத்திருக்கிறீர்கள். உங்களின் யானை பலத்தை நீதித்துறையிலும் காட்ட முயல்கிறீர்களா? நீதித்துறையில் உங்களின் தலையீடுகள் அதிகமாக இருப்பதாக சாமானியர்களுக்குச் சந்தேகம் எழுகிறது. நீதித்துறையின் மீது மக்கள் அதிக நம்பிக்கைவைத்திருக்கின்றனர். தயவுசெய்து அதைக் கெடுத்துவிடாதீர்கள்” என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நீதித்துறையில் ஆட்சியாளர்களின் தலையீடுகள், நீதித்துறையின் செயல்பாடுகள் குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருக்கும் நிலையில், `நீதி அமைப்பை அர்த்தமுள்ளதாக மாற்ற வேண்டும்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அளித்தார்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

ரவிக்குமார் அளித்த ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸில், ``நீதித்துறையில் லட்சக்கணக்கான வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன. இது, நம்முடைய நீதி அமைப்பையே அர்த்தமில்லாததாக ஆக்குகிறது. எனவே, அவசர முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்னையை விவாதிக்க அவையின் மற்ற அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, கீழமை நீதிமன்றங்களிலும், உயர் நீதிமன்றங்களிலும் சுமார் 45 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தெரிகிறது. நீதித்துறையில் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது இதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று” என்று குறிப்பிட்டிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், ``செப்டம்பர் 2021 நிலவரப்படி, உயர் நீதிமன்றங்களில் உள்ள மொத்தப் பணியிடங்களில் 42 சதவிகிதம் காலியாக உள்ளன. கீழமை நீதிமன்றங்களில் கிட்டத்தட்ட 21 சதவிகித பணியிடங்கள் காலியாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது. காலியிடங்களை நிரப்புவதற்கான வழிகளைக் கண்டறியவும், நமது நீதி வழங்குதல் முறையை அர்த்தமுள்ளதாக மாற்றவும் மேற்கொள்ளவேண்டிய வழிகளைக் கண்டறிய அவசர விவாதம் தேவை” என்று அந்த நோட்டீஸில் ரவிக்குமார் குறிப்பிட்டிருந்தார்.

ரவிக்குமார்
ரவிக்குமார்

தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களின் விமர்சனங்கள், அவர்கள் வலியுறுத்தும் கோரிக்கைகளின் பின்னணி குறித்து தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். ``இந்திய நீதிமன்றங்களில் லட்சக்கணக்கான வழக்குகள் தேங்கியுள்ளன. இப்படியான சூழலில், நீதிமன்றங்களில் போதுமான நீதிபதிகள் நியமிக்கப்படவில்லை. இன்னொரு முக்கியமான பிரச்னையை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் குறிப்பிட்டிருக்கிறார்.

அதாவது, தலித் சமூகத்திலிருந்து இதுவரை ஒரே ஒருவர்தான் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பதவி வகித்துள்ளார். அதுபோல, தலித் சமூகத்தைச் சேர்ந்த வெறும் நான்கு பேர்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக ஆகியிருக்கிறார்கள்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

பெரும்பாலும் குறிப்பிட்ட சாதிப் பிரிவைச் சேர்ந்தவர்களே உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் அதிகமாக இருக்கிறார்கள் என்று தயாநிதி மாறன் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஜனநாயகத்தில் சமூகநீதிக்கான பார்வை இல்லை என்பதையே இது காட்டுகிறது. சமீபகாலமாக, சட்டத்தின் அடிப்படையிலும், ஆதாரங்களின் அடிப்படையிலும் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு மாறாக, வேறு மாதிரியாகத் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றனவோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

அரசு எந்தப் பாதையில் போகிறதோ, அந்தப் பாதையிலிருந்துதான் நீதிமன்றத் தீர்ப்பு கிடைக்குமென்றால், அது எப்படி நீதியாக இருக்க முடியும்? இது பற்றியெல்லாம் விவாதிக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஜனநாயகத்தின் கட்டமைப்பில் எது சிதிலமடைகிறதோ, அதை நாம் சரிசெய்ய வேண்டும். இல்லையென்றால், ஜனநாயக அமைப்பே சிதிலமடைந்துவிடும். எனவே, அதைத் தடுத்து நிறுத்தவேண்டிய பொறுப்பு எங்களைப் போன்றவர்களுக்கு இருக்கிறது. அதனால்தான், எங்கள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இது பற்றிப் பேசியிருக்கிறார்கள்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக இருந்தவர்களுக்கு ஆளுநர் பதவியும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் வழங்கப்பட்டிருக்கின்றன. இதை எப்படி எடுத்துக்கொள்வது... அவர்கள் நீதிபதிகளாக இருந்தபோது வழங்கப்பட்ட தீர்ப்புகளை எப்படிப் பார்ப்பது? சட்டமன்றம் - நாடாளுமன்றம், நிர்வாகம், நீதி என்கிற ஜனநாயகத்தின் தூண்களுக்கு தனித் தனி அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில், உச்ச அதிகாரம் நீதிமன்றத்துக்கு இருக்கிறது. அப்படிப்பட்ட நீதிமன்றமே அரசியல்மயமாகிவிட்டதால், நாம் எங்கே போவது? எனவே, அது சரிசெய்யப்பட வேண்டும்” என்றார் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.

இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க-வின் மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். ``வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க ஆட்சியின்போது, நீதித்துறை சீர்திருத்தம் குறித்து மிகப்பெரிய அளவுக்கு முன்னெடுக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு மத்தியில் ஆட்சிக்கு வந்த தி.மு.க அங்கம்வகித்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, நீதித்துறை சீர்திருத்தத்தை மறந்துவிட்டது. தற்போதைய பா.ஜ.க ஆட்சியில் நீதித்துறையில் பல சீர்திருத்தங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் தி.மு.க இறங்குகிறதோ என்று தோன்றுகிறது. பணி ஓய்வுக்குப் பிறகு நீதிபதிகளுக்குப் பதவிகள் வழங்கப்படுவதை விமர்சிப்பது தவறு.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

அரசியல்வாதியாக இருக்கும் தலைவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் பிரதமராகலாம், ஜனாதிபதி ஆகலாம் என்கிறபோது, நீதித்துறையில் பணியாற்றி, சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டியவர்கள் தங்கள் அனுபவங்கள் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மையை மேலும் வலுப்படுத்துவதில் என்ன தவறு? ஒரு தவறும் கிடையாது” என்றார் நாராயணன் திருப்பதி.

இந்த மசோதா குறித்து, கேரளாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ஜான் பிரிட்டாஸ் ஆற்றிய உரை அதிக கவனம் பெற்றிருக்கிறது.

``இந்தச் சட்ட முன்வடிவின் நோக்கம், நீதிபதிகளின் ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கானது என்று சட்ட அமைச்சர் தெளிவாகக் கூறியிருக்கிறார். இதை நான் முழுமையாக வரவேற்கிறேன். ஆனாலும், இது போன்ற விஷயங்களைத் தீர்மானிக்கும்போது ஓர் ஆழமான இடைவெளி (Serious Lacuna) இருப்பதை மாண்புமிகு சட்ட அமைச்சர் புரிந்துகொண்டிருக்கிறாரா? நீதிபதிகளின் நியமனத்தைப் பொறுத்தவரை நமக்கு எவ்விதமான பங்கும் கிடையாது. இது போன்ற நிலைமை உலகில் வேறெங்கும் இருக்கிறதா? கிடையாது. நீதிபதிகளே, நீதிபதிகளை நியமனம் செய்யும் முறையைக் கேள்விப்பட்டதே இல்லை. இந்த `விசித்திரமான’ நிலை குறித்து சட்ட அமைச்சர் ஓர் உறுதியான பார்வையைக் கொண்டிருக்கவில்லை. `விசித்திரமான’ நிலை என்பதை நான் அழுத்தமாகக் குறிப்பிட விரும்புகிறேன்.

ஜான் பிரிட்டாஸ்
ஜான் பிரிட்டாஸ்

நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் முறையில் மர்மம், ரகசியம், இருள் சூழ்ந்த நிலை இருக்க வேண்டுமா என்ன... இது போன்ற நிலைமை உலகில் வேறெந்த நாட்டிலாவது உண்டா? இந்தியாவில் மட்டும்தான் இது போன்ற நிலை. இந்த முறை ஒட்டுமொத்த நாட்டையும் பாதிக்கிறது, நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிக்கிறது.

நீதிபதிகளின் குடும்பங்களிலிருந்து வந்து நேர்மையான நீதி வழங்கிய எண்ணற்ற நீதிபதிகளும் உண்டு. நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அவையெல்லாம் விதிவிலக்குகள். உயர் நீதிமன்ற இணையதளத்தில் ஒரு நீதிபதியின் தன் விவரம் குறித்துப் படிப்பதற்கு என்னை அனுமதிக்க வேண்டும். அவர் பெயரை நான் குறிப்பிட வில்லை. அவருடைய தாய்வழித் தாத்தா உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவர். அவருடைய மாமா உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி. இவ்வாறு அது நீண்டு போய்க்கொண்டிருக்கிறது. இங்கே நாம் வம்சாவளியினரின் ஆட்சி குறித்து விவாதித்துக்கொண்டிருக்கிறோம்” என்றார் ஜான் பிரிட்டாஸ்.

மாநிலங்களவை உறுப்பினரான பிறகு, அவர் ஆற்றிய முதல் உரை இது. இந்த உரையை மாநிலங்களவைத் தலைவரான வெங்கைய நாயுடு பாராட்டினார். ``கேரளாவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸின் உரையைக் கேட்பதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. உண்மையில் அது ஓர் அற்புதமான உரை. அவரின் உரையை நான் ரசித்தேன். மறுநாள் எனக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது. அவரது பேச்சில் ஒரு வரியைக்கூட எந்தவொரு தேசிய ஊடகமும் வெளியிடவில்லை” என்றார் வெங்கைய நாயுடு.