Published:Updated:

குடும்ப வன்முறை வழக்கு: கணவரிடம் மனைவி கேட்ட பராமரிப்புத் தொகை, நிராகரித்த நீதிமன்றம் சொன்ன காரணம்!

தீர்ப்பு

``சட்டத்தின் நோக்கம் வேண்டுமென்றே வேலைக்குச் செல்லாமலிருப்பதையும், கணவனை தேவையின்றி சார்ந்திருப்பதையும் ஊக்கப்படுத்துவது அல்ல. அவருக்கு பராமரிப்பை வழங்குவதானது, சோம்பேறித்தனத்தையும், சார்புநிலையையும் ஊக்குவிக்கும்.’’

Published:Updated:

குடும்ப வன்முறை வழக்கு: கணவரிடம் மனைவி கேட்ட பராமரிப்புத் தொகை, நிராகரித்த நீதிமன்றம் சொன்ன காரணம்!

``சட்டத்தின் நோக்கம் வேண்டுமென்றே வேலைக்குச் செல்லாமலிருப்பதையும், கணவனை தேவையின்றி சார்ந்திருப்பதையும் ஊக்கப்படுத்துவது அல்ல. அவருக்கு பராமரிப்பை வழங்குவதானது, சோம்பேறித்தனத்தையும், சார்புநிலையையும் ஊக்குவிக்கும்.’’

தீர்ப்பு

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண், தனக்கு பரமாரிப்புத் தொகையை வழங்கக்கோரி தொடர்ந்த வழக்கில், கோரிக்கையை டெல்லி நீதிமன்றம் நிராகரித்து தீர்ப்பளித்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த ஷைனி வர்மா பக்‌ஷி என்ற பெண், தான் குடும்ப வன்முறையை எதிர்கொண்டதாகக் கூறி, எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவரான தன் கணவர் குனீத் சிங் பக்‌ஷிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். அவரிடம் இருந்து இடைக்கால நிவாரணமாக தனக்கு மாதம் ரூ. 50 ஆயிரம் வழங்கக்கோரி நீதிமன்றத்தில் கோரினார்.

குடும்ப வன்முறை
குடும்ப வன்முறை

பெண்கள் குடும்ப வன்முறை பாதுகாப்பு சட்டம்- 2005, பிரிவு 20 என்பது, குடும்ப வன்முறையை அனுபவித்த பெண்களுக்கு பராமரிப்புத் தொகை வழங்குவதற்கான ஒரு வாய்ப்பைக் கொண்டுள்ளது. பிரதிவாதியை பணரீதியான நிவாரணம் வழங்குமாறு உத்தரவிட முடியும் என்றும் இந்தப் பிரிவின் கீழ் வழங்கப்படும் நிவாரணம் போதுமானதாகவும், நியாயமானதாகவும், பாதிக்கப்பட்ட நபர் பழக்கப்பட்டுள்ள வாழ்க்கைத் தரத்தை வழங்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்றும் அந்தப் பிரிவு கூறுகிறது.

இந்த நிலையில், ஷைனி வர்மா பக்ஷி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த டெல்லி நீதிமன்ற நீதிபதி சுயம் சித்தா திரிபாதி, “கணவனிடம் இருந்து பராமரிப்பு பெறும் மனைவியின் உரிமையானது முழுமையான உரிமையல்ல. முதலில் மனைவி, அவரை நிலைநிறுத்திக் கொள்ளவோ, பிழைத்திருக்கவோ, தனது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவோ முடியவில்லை என்பதைக் காட்ட வேண்டும்.

அத்துடன், தனது கணவன் சம்பாதித்து ஒரு மேலான வாழ்க்கை முறையில் இருந்து வருவதையும், அதே சமயம் தன்னை நாட்டாற்றில் விட்டுவிட்டார் என்பதையும் மனைவி நிரூபிக்க வேண்டும். ஒன்று மனைவி தான் சம்பாதிக்கவில்லை என்பதையோ, அல்லது அவரது வருவாய் புகுந்த வீட்டில் அனுபவித்த அதே மாதிரியான வாழ்க்கையை பராமரிக்க போதுமானதாக இல்லை என்பதையோ நிரூபிக்க வேண்டும்.

பராமரிப்பு நிதி
பராமரிப்பு நிதி
சித்தரிப்புப் படம்

இவ்வழக்கை பொறுத்தவரை, புகார்தாரர் ஒரு எம்.பி.ஏ. பட்டதாரி ஆவார். இவர் தன் கணவனுக்கு சமமான கல்வித்தகுதியை பெற்றுள்ளார். அவர் முழு உடல் தகுதியும், நல்ல கல்வியும் பெற்றுள்ளபோதும், வேலைக்குச் செல்லாமல் கணவனைச் சார்ந்திருந்தார். மேலும், புகார்தாரர் தன் கணவர் தன்னை விட மேலான வாழ்க்கைத் தரத்தை கொண்டிருப்பதாக நிரூபிக்கவில்லை. அவரின் கணவர் தற்போது வேலையில் இல்லாததால், அவர் ஓர் ஆடம்பர வாழ்க்கையைக் கொண்டிருப்பதாக கூற முடியாது.

சட்டத்தின் நோக்கம் வேண்டுமென்றே வேலைக்குச் செல்லாமலிருப்பதையும், கணவனை தேவையின்றி சார்ந்திருப்பதையும் ஊக்கப்படுத்துவது அல்ல. புகார்தாரர் நல்ல கல்வித் தகுதி பெற்றிருப்பதால், அவருக்கான வருவாய் ஆதாரத்தை அவரே பெற்றுக்கொள்ள முடியும். அவருக்கு பராமரிப்பை வழங்குவதானது, சோம்பேறித்தனத்தையும், சார்புநிலையையும் ஊக்குவிக்கும். எனவே, அவருக்கு பராமரிப்புத் தொகையை வழங்க உத்தரவிட இயலாது" என்று தீர்ப்பளித்தார்.

- நிலவுமொழி செந்தாமரை