சென்னை உயர் நீதிமன்றம், விவாகரத்து வழக்கு ஒன்றில், மனுதாரரின் மனைவி தாலியைக் கழற்றியது பற்றி குறிப்பிட்டுள்ள வரிகள் இப்போது தேசத்தின் தலைப்புச் செய்தியாகத் தடதடத்துக்கொண்டிருக்கிறது; ’தீர்ப்பு திரிக்கப்பட்டுள்ளது; சொல்லப்பட்ட கருத்து வேற’ என்ற விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

ஈரோடு மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் சிவக்குமார், 2015-ம் ஆண்டு ஈரோடு குடும்பநல நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், நீதிமன்றம் தனக்கு விவாகரத்து கொடுக்க மறுத்ததை எதிர்த்து சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். கடந்த ஜூலை 5 அன்று மனுதாரருக்கு, அவர் மனைவியின் கொடுமைப்படுத்தும் செயல்களின் அடிப்படையில் விவாகரத்து வழங்கித் தீர்ப்பளித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். மனுதாரருக்கு அவர் உடன் பணிபுரிபவருடன் திருமணத்தை மீறிய தொடர்பு இருக்கிறது என்று ஆதாரமில்லாமல் குற்றம்சாட்டியது, மேலும், மனுதாரரும் அவர் மனைவியும் பிரிந்திருந்த காலத்தில் திருமணத்தை முடித்துக்கொள்ளும் எண்ணத்துடன் அவர் தாலியைக் கழற்றி வைத்தது உள்ளிட்ட மனைவியின் நடவடிக்கைகளை கருத்தில்கொண்டு, உயர் நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது.
தீர்ப்பின் சாரம் இங்கே.
‘மனுதாரரின் மனைவி மனுதாரர் பேராசிரியராக பணிபுரியும் மருத்துவக் கல்லூரிக்குச் சென்று, அவருடன் பணிபுரியும் பெண்களுடன் தொடர்பு இருப்பதாக உடன் பணிபுரிபவர்கள் மற்றும் மாணவர்கள் முன்னர், வெளிப்படையாகக் குற்றம் சாட்டியிருக்கிறார். இதை பற்றி கேட்டபோது பொதுவான மறுப்பு தெரிவித்த அவர், கணவரின் இந்த நடவடிக்கை பற்றி கேட்டபோது தான் குடும்ப வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறார். எனினும், அவர் தன் கணவர் மீது கொண்ட சந்தேகங்கள் ஆதாரமற்றவை. காரணம், உடன் பணிபுரியும் பெண்களுடன் தன் கணவர் போனில் பேசியதை மட்டுமே வைத்து இந்தக் குற்றச்சாட்டை வைத்ததாக இந்த நீதிமன்றம் முடிவுக்கு வருகிறது.

மனுதாரரின் மனைவி, தன் கணவர் உடன் பணிபுரியும் பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். ஆனால், அதில் யாரின் பெயரையோ, ஆதாரங்களையோ குறிப்பிடவில்லை. இப்படி ஆதாரமில்லாத புகாரை, அவர் தன் கணவரை கொடுமைப்படுத்தும் எண்ணத்துடன் செய்ததாக நீதிமன்றம் பார்க்கிறது. ஆதாரமற்ற புகார் அளிப்பது மற்றும் அடிக்கடி புகார் அளிப்பது, கணவரின் பணியில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற நிலையில், கணவருக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இதை மனைவி செய்தது கொடுமையாகவே பார்க்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளது.
மனைவி தரப்பில் தங்கள் வாதத்தில் இந்தக் குற்றச்சாட்டை மறுத்து, ‘காவல் நிலையத்தில் புகார் செய்ததன் நோக்கம், சேர்ந்து வாழ வேண்டும் என்பதுதான், அதை மனரீதியான கொடுமை கொடுக்கும் செயலாகச் சொல்லக் கூடாது’ என்று சொல்லப்பட்டது. என்றாலும், அவருக்கு தன் கணவருடன் சேர்ந்து வாழ்வதில் விருப்பமில்லை என்றும், அதற்கு அவர் தாலியைக் கழற்றி வைத்ததும் சாட்சி என்றும் குறிப்பிட்டது நீதிமன்றம். ’’மனுதாரரின் மனைவி, தான் சங்கிலியை மட்டுமே கழற்றியதாகவும், தாலியை அணிந்துகொண்டதாகவும் விளக்கம் அளித்தாலும், தாலி சங்கிலியை கழற்றுவது என்பதும் முக்கியக் கருத்தை உணர்த்துகிறது. தாலி கட்டுவதும், ஒருவேளை தாலியை மனைவி கழற்றியிருந்தாலும் மண வாழ்க்கையில் அது எந்த முக்கியத்துவமும் பெறுவதில்லை என்று அவர் தரப்பு கூறுகிறது. ஆனால் பொதுவான அறிவின்படி, உலகில் நாம் வசிக்கும் நிலப்பரப்பில், தாலி கட்டுவது திருமணத்தின் முக்கிய சடங்கு’’ என்கிறது கோர்ட் ஆர்டர்.

’’தாலியைக் கழற்றுவது என்பது பெரும்பாலும் சம்பிரதாயமற்ற செயலாகக் கருதப்படுகிறது. தாலியைக் கழற்றுவது, ஒரு திருமண பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வர போதுமானது என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால், மனைவியின் இந்தச் செயல், இந்த வழக்கில் அவர் நோக்கங்களின் அடிப்படையில் ஒரு முடிவுக்கு வர ஓர் ஆதாரமாக இருக்கிறது. மனைவி தன் கணவரை பிரித்திருந்த நேரத்தில் தாலியைக் கழற்றியதை, மற்ற சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களுடன் சேர்த்துப் பார்க்கும்போது, இந்த திருமண பந்தத்தை இரு தரப்பிலும் சரிசெய்ய மற்றும் தொடரும் நோக்கம் அவருக்கு இல்லை என்ற இறுதியான முடிவை எடுக்க நாங்கள் தள்ளப்படுகிறோம்’’ என்கிறது தீர்ப்பு.
மேலும், நீதிமன்றம் வல்லபாய் V ராஜசபை வழக்கை மேற்கோள் காட்டியது. அதில், ‘மனைவி தாலியைக் கழற்றுவது என்பது கணவருக்கு செய்யும் உளவியல் கொடுமை; அது அவரின் சம்பிரதாயங்களை புண்படுத்தியிருக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
‘’எனவே, குடும்பநல நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, கணவருக்கு சாதகமான விவாகரத்து வழங்கப்படுகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

இந்த தீர்ப்பில், ’மனைவி, தன் கணவர் பணிபுரியும் இடத்துக்கு சென்று திருமணத்தை மீறிய உறவு குறித்து குற்றம்சாட்டியது, காவல் நிலையத்தில் ஆதாரமில்லாத புகார் அளித்தது போன்றவை அவருக்கு உளவியல் கொடுமையை ஏற்படுத்தும் செயல்’ என்று குறிப்பிட்டதையும், மேற்கோள் காட்டிய வழக்கில் இருந்த, ‘மனைவி தாலியைக் கழற்றுவது என்பது கணவருக்கு செய்யும் உளவியல் கொடுமை’ என்பதையும் பொருத்தி, ‘தாலியைக் கழற்றியது கணவருக்கு செய்யும் உளவியல் கொடுமை, விவாகரத்து தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம்’ என்று செய்திகள் எழுதப்பட்டன. எனவே இப்போது, ‘அது தவறான செய்தி’ என்ற விளக்கங்கள் எழுதப்பட்டு வருகின்றன.
வரிகள் மாற்றியமைக்கப்பட்ட விதத்தில், செய்தி தவறாக வெளியாகியிருக்கிறது; தவறு திருத்திக்கொள்ளப் பட வேண்டியது. என்றாலும், இந்தத் தீர்ப்பு கேள்விக்கு அப்பாற்பட்டதல்ல.

ஒரு பெண்ணுக்குத் திருமணமாகிவிட்டது என்பதை குறிக்கும் குங்குமம், மெட்டி, தாலி என ஏராள அடையாளங்கள் உள்ளன. ஆனால், ஓர் ஆண் திருமணமானவன் என்பதை குறிக்கும் அடையாளம் ஏன் ஒன்றுகூட இல்லை? காரணம், இவையெல்லாம் ஆணாதிக்க மனப்பான்மையிலிருந்து உருவாக்கப்பட்ட, பெண்ணை ஆணுக்கு அடிமையாக்க உருவாக்கப்பட்ட சடங்குகள். குறிப்பாக, தாலி என்பது, நூற்றாண்டு காலமாக பெண்ணை ஆணுக்கு உடைமையாக்கும் ’புனித’ பொருள். இப்படி, பெண்ணடிமைத்தனத்துக்கு நீரூற்றும் ஒரு வழக்கத்துக்கு, உயர் நீதிமன்றம் தன் தீர்ப்பில் வலுவேற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
பெண்களை மதத்தின் பெயரால், சடங்குகளின் பெயரால் அடிமையாக்கும் வழக்கங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பது நூற்றாண்டுகளாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் போராட்டம். இச்சூழலில், மனைவி தாலியைக் கழற்றியதை, விவாகரத்துக்கு சாதகமான ஓர் அம்சமாக தீர்ப்பில் குறிப்பிடுவது, பெண் விடுதலையை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு பின் தள்ளவே செய்யும். ‘தாலியை கழற்றியதை எல்லாம் இந்த நீதிமன்றம் சாட்சியாக எடுத்துக்கொள்ளாது’ என்ற வரி தீர்ப்பில் இடம்பெற்றால்தானே, தாலி போன்ற பெண்னை ஆணுக்கு உடைமையாக்க உறுதி தரும் சடங்குகளில் இருந்து அவளை விடுவிக்க சட்டம் கைக்கொடுப்பதாக அமையும்?

மாறாக, ‘தாலியை கழற்றியதை, மனைவிக்கு சேர்ந்து வாழ விருப்பமில்லை என்பதற்கான சாட்சியாக நீதிமன்ற எடுத்துக்கொள்கிறது’ என்பது, ‘கணவருடன் சேர்ந்து வாழ நினைக்கும் பெண்கள் கண்டிப்பாக தாலி அணிய வேண்டும்’ என்பதைச் சொல்வதாகதானே இருக்க முடியும்? மேலும் நீதிமன்றமே தன் தீர்ப்பில், ‘மனைவி தாலியைக் கழற்றுவது என்பது கணவருக்கு செய்யும் உளவியல் கொடுமை; அது அவரின் சம்பிரதாயங்களை புண்படுத்தியிருக்கும்’ என்ற தீர்ப்பை மேற்கோள் காட்டுவது, அதையே இம்முறையும் வலியுறுத்துகிறது என்றுதானே பொருளாகிறது? தாலி அணியாமல் இருப்பதை தன் தேர்வாக முன்வைக்கும் பெண்களை, அந்த அடையாளங்களில் இருந்து தன்னை விடுவிடுவித்துக்கொள்ள நினைக்கும் பெண்களை, ‘கோர்ட்டே சொல்லியிருக்கு தெரியும்ல...’ என்று நீதிமன்றத்தின் துணை கொண்டு கட்டுப்படுத்தாதா, மிரட்டாதா இந்தச் சமூகம்? ’விவாகரத்து வழக்கு நடந்துகொண்டிருக்கும் நிலையில் சம்பந்தப்பட்ட பெண்கள், தாலியைக் கழற்றினால், அது தீர்ப்புக்கு சாதமாகும்’ என்றும் இதில் வலியுறுத்தப்படுகிறது என்று கொள்ளலாம்தானே?
குறிப்பிட்ட வாதங்கள், சம்பந்தப்பட்ட இரு தனி நபர்களின் வாழ்க்கையின் சூழல்களின் அடிப்படையில் எடுத்தாளப்பட்டது என்றாலும், தீர்ப்பில் இடம்பெற்றுள்ள தாலி தொடர்பான வரிகள் பொது சமூகத்தில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம்தானே? ஒரு சினிமாவிலோ, சீரியலிலோ பிற்போக்கு கருத்துகள் இடம்பெறுவதையே விமர்சிக்கும், கண்டிக்கும் சூழலில், உட்சபட்ட முக்கியத்துவம் பெறும் நீதித்துறையின் கருத்துகளில் அதன் அவசியம் அதிகமாகிறதுதானே? மேலும், நீதிமன்றம் மேற்கோள் காட்டிய வல்லபாய் V ராஜசபை வழக்குபோல, இந்த வழக்கில் உள்ளதுபோல... தாலி இனி வரும் காலத்தில் நீதிமன்ற அறைகளில் மேற்கோள் காட்டப்பாடாமல் இருக்க, இப்போது அதில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்ட வேண்டியது தேவையாகிறதுதானே?
’விவாகரத்து தீர்ப்பு, சம்பந்தப்பட்ட மனைவி தாலியைக் கழற்றியதால் மட்டுமே வழங்கப்பட்டதல்ல. 2011-ம் ஆண்டில் இருந்து இருவரும் பிரிந்து வாழ்ந்தும், கணவருடன் சேர மனைவி தரப்பிலிருந்து முயற்சி மேற்கொள்ளப்படவில்லை என்ற பல காரணங்கள் உள்ளன’ என்பது புரிந்துகொள்ளப்படுகிறது. அதையேதான் வலியுறுத்துகிறோம். ஒரு விவாகரத்து வழக்கில் பிரிவுதான் தீர்வு என்று சொல்ல, சட்டரீதியான, சாட்சிரீதியான காரணங்களைக் குறிப்பிடலாம். ஆனால், மனைவி தாலியைக் கழற்றிவைத்ததையும் தீர்ப்பு குறித்த முடிவுக்கு வர ஒரு காரணமாகக் குறிப்பிட்டிருப்பது, ’இந்து திருமணச் சட்டம் பிரிவு 7, ஒரு திருமண பந்தத்துக்கு தாலி அவசியமில்லை’ என்று வரையறுத்துள்ள சட்டத்தை அவமதிக்கும், ஆணாதிக்கத்தை வலியுறுத்தும் வரிகள்.
இத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தாலி குறித்த வரிகளுடன் மாறுபடுவோம்!
- அவள்