Published:Updated:

`வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்!’ - உச்ச நீதிமன்றத்தை நாடிய விவசாயிகள் சங்கம்

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம் ( Rajanish Kakade )

`இந்த வேளாண் சட்டங்கள் குறிப்பிட்ட வர்த்தக நிறுவனங்களுக்கு விளைபொருள்களின் விலையைத் தீர்மானிக்கும் அதிகாரத்தைக் கொடுத்துவிடும்.’- விவசாயிகள்

மத்திய அரசு, மூன்று புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை, கடந்த செம்பம்பரில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்தச் சட்டங்களுக்கு செப்டம்பர் 27-ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். அவர்களின் போராட்டம் இரண்டு வாரங்களைக் கடந்திருக்கும் நிலையில், மத்திய அரசு விவசாயிகளுடன் பலகட்டங்களாகப் பேச்சுவார்த்தைகள் நடத்தியது. அதில் எந்த ஒரு முடியும் எட்டப்படாத நிலையில், சட்டங்களைத் திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்திருக்கிறார்கள். இந்தநிலையில், பாரதிய விவசாயிகள் சங்கம் சார்பில் வேளாண் சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

நரேந்திர சிங் தோமர்
நரேந்திர சிங் தோமர்

அதில்,``வேளாண் சட்டங்கள், குறிப்பிட்ட வர்த்தக நிறுவனங்களுக்கு விளைபொருள்களின் விலையைத் தீர்மானிக்கும் அதிகாரத்தைக் கொடுத்துவிடும். வேளாண்மை வர்த்தகமயமாகிவிடும். விவசாயிகள் அந்த வர்த்தக நிறுவனங்களின் பேராசைக்கு இரையாகிவிடுவார்கள்' என்று குறிப்பிட்டிருக்கிறது.

விவசாயிகள் சார்பில் வழக்கறிஞர் ஏ.பி.சிங் தாக்கல் மனுவில், ``போதிய விவாதங்களுக்கு உட்படுத்தப்படாமல் அவசர அவசரமாக இந்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. நாட்டின் பல்வேறு விவசாய சங்கங்கள், தங்கள் கருத்துகளைத் தெரிவித்தும் அரசு அதை கருத்தில்கொள்ளவில்லை.

அம்பானி நிறுவனங்கள் புறக்கணிப்பு; டோல்கேட் கட்டணம் கிடையாது - உக்கிரமடையும் விவசாயிகள் போராட்டம்!

விவசாய விளைபொருள்கள் சந்தைக் குழுஅமைப்பு (APMC) விலை, குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) முறை மற்றும் நிதி உதவியை வலுப்படுத்த வேண்டும்’’ என்றும் அந்த மனுவில் கோரப்பட்டிருக்கிறது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்
Rajanish Kakade

வேளாண் சட்டங்களுக்கு எதிரான ஆறு மனுக்கள் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. தி.மு.க எம்.பி திருச்சி சிவா, ராஜஸ்தான் மாநிலங்களவை எம்.பி மனோஜ் ஜா, சத்தீஸ்கர் கிசான் காங்கிரஸின் ராகேஷ் வைஷ்ணவ் ஆகியோரும் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்கள். இந்த மனுக்கள் மீதான விசாரணை டிசம்பர் இறுதி வாரத்தில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

`குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) முறை தொடரும்’ என்று மத்திய அரசு சார்பில் எழுத்துபூர்வ உத்தரவாதத்தை மத்திய அரசு கடந்த 9-ம் தேதி கொடுத்தது. ஆனால், விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு அதை நிராகரித்தது. வேளாண் சட்டங்கள் முழுமையாகத் திரும்பப் பெறப்படும்வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்தனர். போராட்டத்தின் அடுத்தகட்டமாக ரயில் மறியலில் ஈடுபடவிருப்பதாகவும் விவசாயிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு