மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கடந்த ஆண்டு தொடக்கத்தில், தேசியப் பாதுகாப்பைக் காரணம் காட்டி, பிரபல மலையாள செய்தி தொலைக்காட்சி சேனல் `மீடியாஒன்’ (MediaOne) சேனலை தடைசெய்தது. மத்திய அரசின் இத்தகைய முடிவை கேரள உயர் நீதிமன்றமும் உறுதிசெய்ததையடுத்து, மீடியாஒன் சேனல் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதை விசாரித்த நீதிமன்ற அமர்வு, அரசின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த சேனலின் விமர்சனங்களை தேச விரோதம் அல்லது ஸ்தாபனத்துக்கு எதிரானது எனக் கருத முடியாது என்று கூறி, மீடியாஒன் சேனல் மீதான மத்திய அரசின் தடையை ரத்துசெய்தது.
மேலும் இந்த விசாரணையில், ``2020-ல் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி, நாட்டின் பிற பகுதிகளில் நடந்த போராட்டங்கள், கலவரங்கள் குறித்து சில சேனல்கள் விரிவாகப் புகாரளித்தன. அவற்றில் ஒன்றான மீடியாஒன் மீதான ஒளிபரப்புத் தடையை விதிக்கும் முடிவை நியாயப்படுத்துவதற்கான எந்தவோர் ஆதாரத்தையும் மத்திய அரசு நிரூபிக்கத் தவறிவிட்டது. மக்களின் உரிமைகளை மறுக்கும் வகையில் தேசியப் பாதுகாப்பை உயர்த்த முடியாது. இந்த வழக்கை உள்துறை அமைச்சகம் மிகவும் மோசமான முறையில் எழுப்பியிருக்கிறது.

இதில் பயங்கரவாதத் தொடர்புகளைக் காட்டுவதற்கு எதுவும் இல்லை. பத்திரிகைகள் தங்களை ஆதரிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டை அரசு எடுப்பதை அனுமதிக்க முடியாது. அதுமட்டுமல்லாமல், அரசாங்கத்தை விமர்சிப்பது என்பது ஒரு சேனலின் உரிமத்தை ரத்துசெய்வதற்கான காரணமாக இருக்க முடியாது.
எனவே, அரசின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த சேனலின் விமர்சனங்கள் தேசவிரோதம் அல்லது ஸ்தாபனத்துக்கு எதிரானவையாகாது. வளமான, துடிப்பான ஜனநாயகத்துக்கு பத்திரிகை சுதந்திரம் மிகவும் அவசியம்" என்று நீதிபதிகள் கூறினர்.
அதோடு, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நான்கு வாரங்களுக்குள் சேனலுக்கு புதுப்பித்தல் உரிமத்தை வழங்கும் என்றும் நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.