இந்தியாவுக்கு வெளியே உள்ள பிராந்திய பகுதிகளிலிருந்து, இந்திய சுங்க சாவடிகளை வந்தடையும் கப்பல்களின் சேவைகளுக்கு குஜராத்தில் உள்ள நிறுவனங்களுக்கு 5 சதவிகித ஜி.எஸ்.டி விதிக்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இந்நிலையில், வரி விதிக்க முடியாத பிராந்தியத்திலிருந்து வரும் கப்பல்கள் இந்திய நாட்டின் சுங்கச் சாவடிகளை அடையும்போது 5 சதவிகித ஜி.எஸ்.டி வரியை விதிக்க முடியாது, அதோடு மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி விதிக்கும் அறிக்கையும் ரத்து செய்வதாக குஜராத் உயர் நீதிமன்றம் அறிவித்தது.

குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசும், ஜி.எஸ்.டி கவுன்சிலும் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதியான டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான அமர்வு, ஜி.எஸ்.டி வரி விதிப்பு குறித்து தீர்மானிக்க ஏற்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதோடு மத்திய மாநில அரசுகளுக்கு ஜி.எஸ்.டி குறித்த சட்டங்களை இயற்ற அரசியலமைப்பு சாசனம் 246ஏ பிரிவின் கீழ் சம உரிமை உள்ளது. இதில் ஒரு அரசு மட்டும் எல்லா நேரத்திலும் முடிவெடுக்க முடியாது. அதேபோல் அரசியலமைப்பு சாசனம் 279 வது பிரிவின்படி, மத்திய மாநில அரசுகள் ஒன்றுக்கொன்று சுயமாகச் செயல்படக் கூடாது. எனவே, மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே முரண்பாடுகள் எழும்பட்சத்தில், நடைமுறையில் செயல்படுத்தக்கூடிய தீர்வுகளை ஜி.எஸ்.டி கவுன்சில் இரு அரசுக்கும் வழங்க வேண்டும்.

ஒருவேளை ஜி.எஸ்.டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தும் படி இருந்தால், இது அரசியலமைப்பின் கூட்டாட்சி அமைப்பையே பாதிக்கும். எனவே, குஜராத் உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ஆமோதிக்கிறோம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.