நாட்டையே அதிரச்செய்த ஹாத்ராஸ் வழக்கில் சமீபத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பு பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அதை எதிர்த்து மகளிர் சட்ட உதவி மன்றம், சோக்கோ அறக்கட்டளை, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மதுரையில் கண்டனக் கூட்டத்தை நடத்தின.
இது குறித்து இக்கூட்டத்தை ஒருங்கிணைத்த மகளிர் சட்ட உதவி மன்றத்தின் தலைவர் வழக்கறிஞர் நிர்மலா ராணி, சோக்கோ அறக்கட்டளை இணை இயக்குநர் வழக்கறிஞர் செல்வகோமதி ஆகியோர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், "2020-ல் உத்தரப்பிரதேசத்தில் ஹத்ராஸ் எனும் இடத்தில் தலித் பெண்ணை ஆதிக்க ஜாதியைச் சார்ந்த நான்கு இளைஞர்கள் கடுமையாகத் தாக்கி, கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதில் சம்பவம் நடந்த இரண்டு வாரங்களில் மருத்துவமனையிலேயே அந்தப் பெண் இறந்து போனார்.
இந்த வழக்கில், ஹத்ராஸ் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட மூவரை விடுதலை செய்தும், ஒருவருக்கு மட்டும் தாக்குதல் நடத்தியதற்காக தண்டனையும் வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த மரண வாக்குமூலத்தை நிராகரித்து பாலியல் வன்புணர்வு நடந்ததற்கான சாட்சியமே இல்லை என்று கூறியுள்ளது.

இந்த தீர்ப்பை எதிர்த்தும், இன்று நிலவும் ஜாதிய, ஆணாதிக்க அரசியல் பின்னணியில் அலசிப் பார்த்து, எங்களது கண்டனக் குரலை எழுப்ப மகளிர் சட்ட உதவி மன்றமும், சோக்கோ அறக்கட்டளையும் இணைந்து கடந்த 18-ம் தேதி மதுரையில் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் அரங்கில் ஹத்ராஸ் தீர்ப்பை எதிர்த்து கண்டன கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் மகளிர் சட்ட உதவி மன்றம், சோக்கோ அறக்கட்டளை, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, நீதிபதி பகவதி பவுண்டேஷன், நீதிபதி சிவராஜ் பாட்டில் பவுண்டேஷன், மக்கள் கண்காணிப்பகம், மக்கள் சிவில் உரிமை கழகம், அனைத்திந்திய வழக்கறிஞர்கள் சங்கம், பெண்ணுரிமை இயக்கம், மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு, அகில இந்திய ஆயுள் காப்பீட்டு கழக ஊழியர் சங்கம், பெண்கள் இணைப்புக்குழு, இந்திய சமூக விஞ்ஞான பெண்கள் முன்னேற்ற ஆதார மையம், சமம் குடிமக்கள் இயக்கம் ஆகிய அமைப்புகள் கலந்து கொண்டு தங்கள் கருத்தை தெரிவித்தார்கள்.

இக்கருத்துகளின் அடிப்படையில், இக்கூட்டத்தின் இறுதியில் இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திறந்த மடல் அனுப்பப்பட்டது." என்று தெரிவித்துள்ளனர்.