காவல்துறை சித்ரவதை மற்றும் லாக்கப் மரணங்கள் போன்ற காவல்துறையினருக்கு எதிரான புகார்களைக் கொடுக்க அனைத்து மாநிலங்களிலும் 'காவல் புகார் ஆணையம்' அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதன் காரணமாக காவல்துறையினருக்கு எதிராகப் புகார் அளிக்க மாநில அளவில் உயர் நீதிமன்ற அல்லது உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தலைமையில் புகார் ஆணையமும், மாவட்ட அளவில் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையிலான ஆணையமும் அமைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதையொட்டி கடந்த 2013-ம் ஆண்டு தமிழகத்தில் 'காவல்துறை சீர்திருத்த அவசரச் சட்டம்' கொண்டு வரப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவல்துறையினருக்கு எதிராகப் புகார் அளிக்க மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் அமைக்கப்பட்ட ஆணையத்தில் நீதிபதிகள் யாரும் நியமிக்கப்படவில்லை. இதற்கு பதிலாக, மாநில அளவிலான புகார் ஆணையத்துக்கு உள்துறைச் செயலாளர் தலைமையில் டி.ஜி.பி மற்றும் ஏ.டி.ஜி.பி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, கடந்த வாரம் காவல்துறை மற்றும் பொதுமக்களிடையே சுமுக உறவு நிலவும் வகையில் புதிய காவல் ஆணையத்தை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் அமைத்திருப்பதாக தமிழக அரசு அறிவித்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அமைக்கப்பட்ட 'காவல்துறை சீர்த்திருத்த அவசரச் சட்ட' விதிகளை சட்டவிரோதமானவை என அறிவிக்கக் கோரி மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஏ.ஜி.மவுரியாவும், காவல் புகார் ஆணையங்களை அமைகக் கோரி சரவணன் தட்சிணாமூர்த்தி என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.
பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. உயர் நீதிமன்றத்தின் கேள்விக்கு பதிலளித்த, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், காவல் ஆணையம் அமைக்க உயர் நீதிமன்ற உத்தரவின்படி ஓய்வுபெற்ற நீதிபதி சி.டி.செல்வம் நியமிக்கப்பட்டதாகவும், விதிகள் திருத்தப்பட்டனவா என்பது குறித்து, அரசிடம் தகவல்களை சேகரித்துக்கொண்டு பின்னர் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் ஜனவரி 31-ம் தேதி இது பற்றி விளக்கமளிக்க தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.