Published:Updated:

`அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்குச் சமம்!’ - நீதிபதிகள் வேதனை

நெல்
நெல்

நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் பாதிக்கப்படுவது பற்றிய வழக்கில் அரசுக்கு பல்வேறு கேள்விகள் எழுப்பிய நீதிபதிகள், `அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்குச் சமம்' என்றும் கருத்து தெரிவித்தனர்.

`அரசு அதிகாரிகள் ஊதியத்தைத் தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்' என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனையுடன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

சூர்யப்பிரகாசம் என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், ``தமிழக அரசின் கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டுவருகிறது. ஆனால், இந்தக் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்க விவசாயிகள் நீண்டநாள்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இதனால், விளைந்த நெல்லை வெயிலிலும் மழையிலும் போட்டுவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, தமிழ்நாடு முழுதும் கொள்முதல் நிலையங்களை அதிகப்படுத்த வேண்டும். கொள்முதல் செய்வதற்கு தாமதமானால் விவசாயிகள் தங்குவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, நெல் கொள்முதல் சம்பந்தமாக பல்வேறு கேள்விகளை எழுப்பினர். மேலும்,``நெல் கொள்முதல் செய்ய தமிழகத்தில் எத்தனை கொள்முதல் நிலையங்கள் இருக்கின்றன... கொள்முதல் நிலையங்களில் நெல்லைப் பாதுகாக்க என்னென்ன வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன'' என்று கேட்டனர்.

விற்பனைக்குச் செல்லும் நெல்
விற்பனைக்குச் செல்லும் நெல்

``தாங்கள் உற்பத்தி செய்த பொருள்களைச் சரியான நேரத்தில் விற்க முடியாமல் விவசாயிகள் வீதிகளில் இரவு பகலாக காத்துக் கிடக்கின்றனர். ஏகப்பட்ட சிரமத்துக்கிடையே வாழ்கிறார்கள். அது மட்டுமல்லாமல் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்ய ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் அரசு அதிகாரிகள் வாங்குவதாக அறிகிறோம். உற்பத்தி செய்த பொருள்களை விற்பனை செய்ய முடியாமல் தவிப்பதும், அப்படி விற்பனை செய்ய அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதும் வேதனையானது" என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

வேலூர்: `லஞ்சம் வாங்கத் தனி அலுவலகம்!’ - சுற்றுச்சூழல் அதிகாரி சிக்கியது எப்படி?

``தங்களது ஊதியத்தைத் தாண்டி அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமமாகும். காலதாமதத்தால் விவசாயிகள் கொண்டுவரும் நெல்லில் ஒரு நெல்மணி முளைத்தால்கூட சம்பந்தப்பட்ட கொள்முதல் நிலைய அதிகாரியிடம் அதற்கான பணத்தை வசூலிக்க வேண்டும்" என்று வேதனையுடன் கூறினர்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

இந்த வழக்கில் நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குநரை எதிர் மனுதாரராகச் சேர்த்தும், இது சம்பந்தமாக அரசுத் தரப்பில் உடனே விளக்கமளிக்க உத்தரவிட்டும் வழக்கை 16-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு