கரூரைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர், "மத்திய, மாநில மோட்டார் வாகனச் சட்டத்தின்படி இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு அரசு பிறப்பித்திருக்கும் முறையில்தான் நம்பர் பிளேட் இருக்க வேண்டும். ஆனால், அதற்கு எதிராகத் தாங்கள் விரும்பிய அரசியல் தலைவர்கள், நடிகர்களின் படங்களை நம்பர் பிளேட்டில் வரைவது, ஸ்டிக்கர் ஒட்டுவது, தங்கள் இஷ்டம்போல் நம்பர் எழுதுவது போன்ற செயல்களை வாகன உரிமையாளர்கள் செய்துவருகிறார்கள். இது குறித்து மாவட்டப் போக்குவரத்து அதிகாரிகள், காவல்துறையினரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

எனவே, சட்டவிரோதமான நம்பர் பிளேட்டுகளை அகற்ற உத்தரவிட வேண்டும். விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்" என்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு, "இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் நம்பர் பிளேட்டுகளில் அரசு விதிமுறையின்படி அந்த வாகனத்தின் நம்பர் மட்டுமே இடம்பெற வேண்டும். வேறு வகையான எழுத்தோ, தலைவர், நடிகர்களின் படமோ இடம்பெறக் கூடாது. வாகனப் போக்குவரத்து அதிகாரிகள், காவல்துறையினர் இது குறித்து தினமும் சோதனை நடத்த வேண்டும். விதிமீறிய நம்பர் பிளேட்டுகளை அகற்ற வேண்டும். விதி மீறிய வாகனங்களைப் பறிமுதல் செய்து அதிகப்படியான அபராதம் விதிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.
வழக்கு விசாரணையின்போது, அரசு வழக்கறிஞர் திலக் குமார் ஆஜராகி, ``மனுதாரர் சந்திரசேகர் அதிகாரிகளிடம் மனு அளிக்கும்போது கோரிக்கையை மட்டும் வலியுறுத்தாமல், சட்டவிரோத நம்பர் பிளேட்டுகளை அகற்றவில்லையென்றால் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உத்தரவில் நாங்களே நடவடிக்கை எடுப்போம் என்று மிரட்டும் வகையில் மனு அளித்திருக்கிறார்" என்று நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

``ஒரு கோரிக்கையை வைக்கும்போது இது போன்ற மிரட்டும் தொனியில் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது எங்களையும் மிரட்டுவதுபோல் இருக்கிறது. மனுதாரருக்கு அதிகபட்ச அபராதம் விதிப்போம்" என்று நீதிபதிகள் மனுதாரரையும் எச்சரித்தனர்.