Published:Updated:

17 ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதி என விடுவிக்கப்பட்ட தாய்!-பெற்ற குழந்தை கொலை வழக்கில் நடந்தது என்ன?

``சகுந்தலா தன் பெற்றோர் வீட்டுக்குச் செல்லும்போது தனியாகத்தான் சென்றிருக்கிறார். குழந்தையைக் கொண்டு செல்லவில்லை. சகுந்தலா மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர்மீதான தண்டனையை ரத்துசெய்து விடுதலை செய்ய வேண்டும்."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பெற்ற குழந்தையைக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 17 ஆண்டுகளாகச் சிறையிலிருக்கும் பெண்ணின் தண்டனையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்துசெய்து உத்தரவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டையில் செல்வராஜ் - சகுந்தலா தம்பதிக்கு ஒன்றரை வயது குழந்தை உட்பட இரண்டு மகள்கள் இருந்தனர். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், கடந்த 2002-ல் சகுந்தலா கணவருடன் கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அவர் சென்ற மறுநாள் அவர்களின் ஒன்றரை வயது பெண் குழந்தை கிணற்றில் பிணமாக மிதந்திருக்கிறது.

கணவர் செல்வராஜின் புகாரில் `சந்தேக மரணம்’ என முதலில் விசாரித்த காவல்துறையினர், பின்னர் சகுந்தலாதான் குழந்தையைக் கிணற்றில் வீசியிருக்கிறார் எனக் கொலை வழக்கு பதிவு செய்து சகுந்தலாவைக் கைதுசெய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த திருச்சி மாவட்ட நீதிமன்றம், குழந்தையைக் கொன்ற சம்பவத்தில் சகுந்தலா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, 2004-ல் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கொலை
கொலை

தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்ததால் சகுந்தலா பிணையில் வெளியில் வந்தார்.

கடந்த 2014-ம் ஆண்டில் அவரது மேல்முறையீட்டு மனுவை மதுரை உயர் நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது. இதனால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தநிலையில், சகுந்தலாவின் மேல்முறையீட்டு மனு மீதான உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பை ரத்துசெய்து, அவருக்கு பிணை அளிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் தாமஸ் பிராங்க்ளின் சீசர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததால் இந்த வழக்கில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சகுந்தலாவுக்கு ஜாமீன் அளித்ததுடன், அவர் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

உயர் நீதிமன்ற தீர்ப்பு
உயர் நீதிமன்ற தீர்ப்பு

அதைத் தொடர்ந்து மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் சகுந்தலாவுக்கு ஆயுள் தண்டனை விதித்தது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டது.

அப்போது சகுந்தலா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ``சகுந்தலா தனது ஒன்றரை வயது குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை. சாட்சிகளின் தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளன. இறந்த குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையும் முற்றிலும் வித்தியாசமான தகவலை அளிக்கிறது.

`கிணற்றில் கிடந்த குழந்தையின் குடலிலோ, நுரையீரலிலோ தண்ணீர் இல்லை. கண்மூடிய நிலையில் இருந்தது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, குழந்தை இறந்த பிறகுதான் கிணற்றில் வீசப்பட்டிருக்கிறது.

கொடூரக் கொலை; 30 நிமிடத்தில் குற்றவாளிகளை அடையாளம் காட்டிய டாபர்மேன் நாய்!

சகுந்தலா தன் பெற்றோர் வீட்டுக்குச் செல்லும்போது தனியாகத்தான் சென்றிருக்கிறார். குழந்தையைக் கொண்டு செல்லவில்லை. சகுந்தலா மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர் மீதான தண்டனையை ரத்துசெய்து விடுதலை செய்ய வேண்டும்" என்று வாதாடினார்.

``சகுந்தலா மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும், சின்னச் சின்ன சம்பவங்கள்கூட சரியாக விசாரிக்கப்படவில்லை என்பது தெரிகிறது. சாட்சிகள் கூறிய தகவல்கள் அடிப்படையில் மனுதாரருக்கு தண்டனையை கீழ்கோர்ட்டு அளித்திருக்கிறது. எனவே சகுந்தலாவுக்கு அளித்த ஆயுள் தண்டனை ரத்துசெய்யப்படுகிறது. அவரிடம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டிருந்தால் அதைத் திருப்பி ஒப்படைக்க வேண்டும்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

நிரூபிக்கப்படாத குற்ற வழக்கில் 17 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்த சகுந்தலா, தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தியதால் தற்போது நிரபராதியாக விடுவிக்கப்பட்டிருக்கிறார். சமீப காலத்தில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கிய தீர்ப்புகளில் முக்கியமானதாக இந்த வழக்கு பார்க்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு