Published:Updated:

`சாத்தான்குளம் சம்பவம் போல இனி நடக்கவே கூடாது!’ - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ( ஈ.ஜெ.நந்தகுமார் )

சாத்தான்குளம்: `கொரோனா தொற்று பாதிப்பினால் ஏழை எளிய மக்கள் வியாபாரிகள், கூலித்தொழிலாளர்கள், மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் காவல்துறையினர் இப்படி நடந்திருக்கக் கூடாது' - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கு நேரத்தில் கூடுதல் நேரம் கடையைத் திறந்து வைத்திருந்ததாகக் கூறி, தந்தை ஜெயராஜையும் மகன் பென்னிக்ஸையும் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில், இருவரும் கோவில்பட்டி கிளைச்சிறையில் மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இது தொடர்பான வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

பென்னிக்ஸ், தந்தை ஜெயராஜ்
பென்னிக்ஸ், தந்தை ஜெயராஜ்

இன்று காலையில் விசாரணையைத் தொடங்கிய நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி ஆகியோரைக் கொண்ட அமர்வு, இந்த வழக்கில் எடுத்த நடவடிக்கைகள் பற்றி, தூத்துக்குடி எஸ்.பி-யும், டிஜிபி-யும் வீடியோ கான்ஃபரன்ஸில் 12.30-க்கு ஆஜராக வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டார்கள்.

மதியம் 12.30-க்கு விசாரணை மீண்டும் தொடங்கியபோது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் செல்லப்பாண்டியன், ``முதலமைச்சருடன் டிஜிபி அலுவல் சார்ந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டிருப்பதால் ஆஜராக முடியவில்லை. அவருக்குப் பதிலாக தென் மண்டல ஐ.ஜி ஆஜராவார்” என்று கூற, அதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.

நீதிமன்றம் நேரடியாக கண்காணித்துக் கொண்டிருக்கிறது!

`இந்தச் சம்பவம் தொடர்பாக 2 காவல் உதவி ஆய்வாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 2 காவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும்' ஐ.ஜி தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து நீதிபதிகள் தங்களது உத்தரவில், ``இந்த வழக்கை நீதிமன்றம் கவனமாகக் கையாண்டு வருகிறது. கோவில்பட்டி குற்றவியல் நீதிபதி, இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில் இந்த நீதிமன்றம் அதில் தலையிடாது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
ஈ.ஜெ.நந்தகுமார்

மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழு உடல்கூறாய்வு செய்து அதன் அறிக்கையையும் வீடியோவையும் தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி டீன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இறுதிச்சடங்கில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த வழக்கை நீதிமன்றம் நேரடியாக கண்காணித்துக் கொண்டிருக்கிறது, நீதி நிலை நாட்டப்படும்.

சாத்தான்குளம் சம்பவம்போல இனிமேல் நடக்காமல் இருக்க டிஜிபி, காவல்துறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசு வழக்கறிஞம் இதுபற்றி அரசிடம் கூற வேண்டும். பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவே உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை எடுத்துள்ளது.

பென்னிக்ஸ், தந்தை ஜெயராஜ்
பென்னிக்ஸ், தந்தை ஜெயராஜ்

கொரோனா தொற்று பாதிப்பினால் ஏழை எளிய மக்கள் வியாபாரிகள், கூலித்தொழிலாளர்கள், மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் காவல்துறையினர் இப்படி நடந்திருக்கக் கூடாது. மக்கள்தான் நாட்டின் இறையாண்மை. அனைத்து நிறுவனங்களும் மக்களுக்காவே ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனால், காவல்துறை மக்களிடம் மனித நேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும்'' என்று உத்தரவிட்டனர். இவ்வழக்கு 26-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

சாத்தான்குளம்: `நடந்தது கொலை... நீதி கிடைக்காமல் ஓய மாட்டோம்! -கொதிக்கும் தங்கை
அடுத்த கட்டுரைக்கு