Published:Updated:

`அனுமதி பெறாமல் யாத்திரை நடத்தப்பட்டது ஏன்?’ - பா.ஜ.க-வுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

பா.ஜ.க-வின் வேல் யாத்திரை
பா.ஜ.க-வின் வேல் யாத்திரை

இந்தநிலையில், `வேல் யாத்திரையில் தலையிடக் கூடாது என தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட முடியாது’ என் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

தமிழக பா.ஜ.க சார்பில் வேல் யாத்திரை திருத்தணியில் இந்த மாதம் 6-ம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 6-ம் தேதி திருச்செந்தூரில் முடிவடையும் என்று பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார். ஆனால், கொரோனாவைக் காரணம் காட்டி தமிழக அரசு இதற்கு அனுமதி மறுத்தது. நீதிமன்றத்திலும் இந்தக் கருத்தை தமிழக அரசு உறுதியாகத் தெரிவித்தது.

வேல் யாத்திரை
வேல் யாத்திரை

இந்தநிலையில் அறிவிக்கப்பட்ட அதே நாளிலேயே எல்.முருகன் திருத்தணியில் தனது யாத்திரையைத் தொடங்கினார். யாத்திரையைத் தொடங்கிய சில நிமிடங்களில் கைதுசெய்யப்பட்டதுடன், யாத்திரையும் தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர் இரண்டாவது முயற்சியாக மீண்டும் வேல் யாத்திரை செல்ல முயன்றபோது மீண்டும் தடுத்து நிறுத்தப்பட்டார். இதற்கிடையே வேல் யாத்திரைக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், வேல் யாத்திரையின்போது பா.ஜ.க-வினர் காவல்துறையினரிடம் அத்துமீறிச் செயல்பட்டதாக காவல்துறை டி.ஜி.பி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வேல் யாத்திரை: அ.தி.மு.க அரசின் அனுமதி மறுப்பு... அரசியல் பின்னணி என்ன?

மேலும் டி.ஜி.பி தரப்பில், `` பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் பல இடங்களில் முறையாக முகக் கவசம் அணியவில்லை. மத்தியில் ஆளும் பா.ஜ.க-வினர் பொறுப்பை உணராமல் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு செயல்படுகின்றனர். வேல் யாத்திரை, கோயில் யாத்திரை அல்ல... முழுக்க முழுக்க அரசியல் யாத்திரையே” எனத் தெரிவித்தது. மேலும், ஓசூரில் பா.ஜ.க-வினர் ஏற்பாடு செய்திருக்கும் வேல் யாத்திரைக்கும் அனுமதி வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு தரப்பில், கோயில்களில் வழிபாடு நடத்த அனுமதி வழங்கியபோதும், நவம்பர் மாதம் 30-ம் தேதி வரை யாத்திரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

இந்தநிலையில் `வேல் யாத்திரையில் தலையிடக் கூடாது என தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட முடியாது’ என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. மேலும், `அரசு அனுமதி அளிக்காத நிலையில் எப்படி யாத்திரை செல்ல முடியும்... அனுமதி பெறும்வரை பொறுத்திருக்காமல் யாத்திரை நடத்தப்பட்டது ஏன்?’ என நீதிபதிகள் பாஜ.க தரப்பினரிடம் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கை டிசம்பர் மாதம் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு