Published:Updated:

வேலுமணிக்கு 2 வாரம் கெடு; விசாரணை அதிகாரி மாற்றம்!- டெண்டர் முறைகேடு வழக்கில் நீதிமன்றம் அதிரடி

மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில் பதிலளிக்க அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு இறுதிக் கெடு விதித்துள்ளது, சென்னை உயர் நீதிமன்றம்!

Velumani
Velumani

சென்னை, கோவை மாநகராட்சியில் உள்கட்டமைப்புப் பணிகளுக்குக் கோரப்பட்ட டெண்டரில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அமைச்சர் வேலுமணி தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, நெருங்கியவர்களுக்கு ஒப்பந்தத்தை வழங்கியதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து நீதிமன்றக் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி, அறப்போர் இயக்கம் மற்றும் தி.மு.க சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

Chennai High Court
Chennai High Court

இந்த வழக்குகள், ஏற்கெனவே நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, மாநகராட்சி டெண்டர் முறைகேடு குறித்து அமைச்சர் வேலுமணிக்கு எதிராக தி.மு.க அளித்த புகாரில், ஆரம்பகட்ட விசாரணை நடத்த பொதுத்துறை முதன்மைச் செயலாளர் அனுமதியளித்துள்ளதாகவும், அதன்படி ஆரம்பகட்ட விசாரணை தொடங்கியுள்ளதாகவும், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தெரிவித்திருந்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆரம்பகட்ட விசாரணையின் நிலை அறிக்கையை ஒரு மாதத்தில் தாக்கல் செய்ய, கடந்த ஜனவரி மாதம் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

Vikatan

இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விசாரணை அதிகாரியான லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சங்கர் ஆஜராகி, முறைகேடு புகார் தொடர்பாக 349 உள்ளாட்சி டெண்டர்கள் குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்தி உள்ளதாகவும், 41 ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், 117 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், முழுமையான விசாரணை அறிக்கையைத் தாக்கல்செய்ய மேலும் 3 வார காலம் அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அரசு தலைமை வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

வேலுமணிக்கு 2 வாரம் கெடு; விசாரணை அதிகாரி மாற்றம்!- டெண்டர் முறைகேடு வழக்கில் நீதிமன்றம் அதிரடி

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், 'உத்தரவு பிறப்பித்து ஓராண்டுக்காலம் ஆகியும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை' எனத் தெரிவித்தனர். மேற்கொண்டு விசாரணையை லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்பி பொன்னி மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், இந்த விசாரணையைக் கண்காணித்து, 2 வாரங்களில் அறிக்கை தாக்கல்செய்ய லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் இதுவரை பதிலளிக்காத அமைச்சர் வேலுமணி பதிலளிக்க 2 வாரம் கடைசிக் கெடு விதித்து, விசாரணையை நவம்பர் 1-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.