Published:Updated:

`பள்ளிக் குழந்தைகளா ஆணவக்கொலைகளைச் செய்கிறார்கள்?' - காட்டமாகக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள்

சத்யா கோவிந்தராஜன்

’ஓர் அலுவலரின் அலட்சியத்தால்தான் ஓர் உயிர் கொல்லப்படுகிறது' என்று தங்களின் ஆதங்கத்தைப் பதிவுசெய்தனர்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

"ஆணவக்கொலைகளைக் கட்டுப்படுத்த மாநில அரசு மிகச் சொற்பமான நடவடிக்கைகளையே மேற்கொண்டுள்ளது" என்று நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு தமிழக அரசின் நடவடிக்கைகளை விமர்சித்திருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆணவக்கொலைகளுக்கு எதிராகத் தாமாக முன்வந்து இம்மாத முதல் வாரத்தில் இவ்வழக்கை விசாரிக்க எடுத்த நீதிபதிகள், மாநில அரசிடம் நிலை அறிக்கையைக் கோரியிருந்தனர்.

ஆணவக்கொலை
ஆணவக்கொலை

சமர்ப்பிக்கப்பட்ட நிலை அறிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்ட ஆணவக்கொலைகளைக் 'கண்காணிக்கப் பரிந்துரைக்கப்பட்டதாகச்' சொல்லப்பட்ட சிறப்புச் செயல்திட்டங்கள் எப்படிச் சாத்தியம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இதற்காகச் சிறப்பு போலீஸ் டீம் அமைக்கப்பட்டதாக அந்த நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழகத்தில் 1,300 காவல் நிலையங்கள் இருக்கும்போது இது முழுமையாகச் சாத்தியமற்றது என்று நீதிபதிகள் கூறினர். மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள சிறப்பு போலீஸ் குழுக்களுக்கு ஆணவக்கொலைகளைத் தடுக்கத் தரப்பட்ட அறிவுறுத்தல்கள் எங்கே என்று கேள்வி எழுப்பினார்கள்.

நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்ரமணிய பிரசாத் அமர்வு
நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்ரமணிய பிரசாத் அமர்வு

கூடுதலாக அந்த அமர்வு, காவல் சிறப்புக் குழுக்களால் எந்தத் திடமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டியதுடன், அந்தச் சிறப்புப் பிரிவின் ஏதாவது ஓர் அறிக்கையைத் தங்களிடம் சமர்ப்பிக்க இயலுமா என்றும் கேட்டனர்.

அதுமட்டுமல்லாமல், மாநில அரசு ஆணவக்கொலைகளுக்கு எதிராக ஏன் எந்த விழிப்புணர்வு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பினார்கள். ஒருகட்டத்தில், நீதிமன்றத்தில் இருந்தவர்களைப் பார்த்து, 'நீங்கள் யாராவது ஆணவக்கொலைகளுக்கு எதிராக அரசு ஏதேனும் துண்டுப் பிரசுரங்களைத் தந்ததைப் பார்த்தீர்களா?' என்று கேட்டனர்.

தமிழக அரசு
தமிழக அரசு

பள்ளிகளில் இதுகுறித்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டபோது, ’பள்ளிக் குழந்தைகளா அல்லது பெற்றோர், உறவினர்களா.. யார் ஆணவக்கொலைகளைச் செய்கிறார்கள். பிறகு ஏன் பள்ளிக் குழந்தைகளிடம் இதுகுறித்துப் பேச வேண்டும்?’ என்றும் கேள்வி எழுப்பினார்கள். ஆணவக்கொலைகள் தொடர்பாகப் பாதிக்கப்பட்டவர்களுக்காகத் தனியாக ஏன் ஓர் அவசர உதவி எண்கூட அரசுத் தரப்பில் இல்லை என்றும் உயர் நீதிமன்ற அமர்வு கேட்டது. தூத்துக்குடியில் நடந்த இரட்டைக் கொலைகளால் ஜூலை 9-ம் தேதியன்று இவ்வழக்கைத் தானாக முன்வந்து எடுத்தது இந்த அமர்வு என்பது குறிப்பிடத்தக்கது.