Published:Updated:

எம்.பி.,எம்.எல்.ஏ வழக்குகளை விசாரிக்கும் ஸ்பெஷல் கோர்ட் அமைக்க எவ்வளவு செலவு?#VikatanExclusive

சிறப்பு நீதிமன்றம் திறப்பு விழாவில்..
சிறப்பு நீதிமன்றம் திறப்பு விழாவில்..

மக்கள் பிரதிநிதிகள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க, அரசு எவ்வளவு செலவழித்திருக்க்கிறது என்ற தகவல் விகடனுக்குப் பிரத்யேகமாகக் கிடைத்திருக்கிறது.

`தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகளுக்குத் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்’ என வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யா பொதுநல வழக்கு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, `குற்றப் பின்னணி கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்., எம்.எல்.ஏ-க்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்’ என 2017 நவம்பரில் உத்தரவிடப்பட்டது.

சிறப்பு நீதிமன்றம்
சிறப்பு நீதிமன்றம்

இதன்பிறகு இந்த வழக்கு அதே ஆண்டு டிசம்பரில் விசாரணைக்கு வந்தபோது `குற்றப் பின்னணி கொண்ட மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். இதில் இரண்டு நீதிமன்றங்கள் 228 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான ஊழல் வழக்குகளை விசாரிக்கும். 65-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்மீது ஊழல் வழக்குகள் உள்ள தமிழ்நாடு, ஆந்திரா, பீகார், கர்நாடகா, கேரளா, மத்தியப்பிரதேசம், மராட்டியம், தெலங்கானா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய 10 மாநிலங்களில் தலா ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும். இந்தச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க 7.80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.' என மத்திய அரசு தெரிவித்தது.

`நீண்ட காலமாக எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மீது நிலுவையில் உள்ள 1,581 வழக்குகளை இந்தச் சிறப்பு நீதிமன்றங்கள் ஓர் ஆண்டுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும். இந்தச் சிறப்பு நீதிமன்றங்கள் 2018 மார்ச் 1-ம் தேதி முதல் செயல்பட வேண்டும்' என சுப்ரீம் கோர்ட் உத்தரவு போட்டது. மாவட்ட நீதிமன்றங்களில் மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகள் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டால் விரைந்து முடிக்கப்படும். அதனால், சிறப்பு நீதிமன்றத்தை அமைக்காமல் காலம் தாழ்த்தி வந்தது தமிழக அரசு. இதேபோல மற்ற மாநிலங்களிலும் தனி நீதிமன்றங்கள் அமைப்பதிலும் வழக்குகளை ஒதுக்குவதிலும் தாமதம் ஏற்பட்டது.

விகடன் லென்ஸ்
விகடன் லென்ஸ்

இந்த நிலையில், வழக்கு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில், ``மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்க 11 மாநிலங்களில் 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறப்பு நீதிமன்றத்துக்கு 1,233 வழக்குகள் மாற்றப்பட்டுள்ளன. இதில் 136 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. 1,097 வழக்குகள் நிலுவையில் உள்ளன" எனக் குறிப்பிட்டது.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என 2018 செப்டம்பர் 6-ம் தேதி அரசிதழில் வெளியிட்டார். 2017-ம் ஆண்டு நவம்பரிலும் டிசம்பரிலும் சுப்ரீம் கோர்ட் போட்ட உத்தரவுக்குத் தமிழ்நாடு செயல் வடிவம் கொடுப்பதில் அதிக அக்கறை காட்டவில்லை.

ஸ்பெஷல் கோர்ட் ஹால்
ஸ்பெஷல் கோர்ட் ஹால்

1991-1996 அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல்களை விசாரிப்பதற்காகத் தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டபோது, அந்த நீதிமன்றங்கள் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் இயங்கின. அதே இடத்தில்தான் மக்கள் பிரதிநிதிகளின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.

2016 சட்டசபைத் தேர்தலில் ஜெயித்த 232 சட்டமன்ற உறுப்பினர்களில் 75 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள். இதில் கருணாநிதி, ஜெயலலிதா இப்போது உயிருடன் இல்லை. மீதம் 73 பேர். இடைத்தேர்தலில் வென்ற டி.டி.வி தினகரன் மீது ஐந்து வழக்குகள் இருக்கின்றன. இவரோடு சேர்த்து, மொத்தம் 74 எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கப் போகிறது. இவர்களில் 42 பேர் மீது கொலை, கொலை முயற்சி, கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என சீரியஸ் வழக்குகள் இருக்கின்றன.

சிறப்பு நீதிமன்றத்தில் பாலகிருஷ்ணா ரெட்டி...
சிறப்பு நீதிமன்றத்தில் பாலகிருஷ்ணா ரெட்டி...

குற்றப் பின்னணி சட்டமன்ற உறுப்பினர்களில் 27 பேர் அ.தி.மு.க-வினர். 42 பேர் தி.மு.க-வினர். 5 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தவிர எம்.பி-க்கள் மீதான வழக்குகளையும் இந்த சிறப்பு நீதிமன்றம்தான் விசாரிக்கிறது. ஏற்கெனவே மக்கள் பிரதிநிதிகளாக இருந்தபோது நடைபெற்று வந்த வழக்குகள் விசாரணை முடியாமல் இருந்தன. அந்த வழக்குகளும் இந்த சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு அந்த விசாரணையும் நடைபெற்று வருகிறது. 2018 செப்டம்பர் மாதம் இந்தச் சிறப்பு நீதிமன்றம் தொடங்கப்பட்டது. சிறப்பு நீதிமன்றத்தை நீதிபதி குலுவாடி ரமேஷ் திறந்து வைத்தார்.

அன்று ஜெயலலிதா... இன்று ராமதாஸ்... தொடரும் முரசொலி நில விவகாரம்!

பேருந்துகள் மீது கல் வீசித் தாக்கிய வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்குச் சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதனால் அவரின் அமைச்சர் பதவி பறிபோனது. மனைவியைச் சுட்டுக்கொல்ல முயன்ற தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ அசோகனுக்கு 3 ஆண்டு தண்டனை கொடுத்தது சிறப்பு நீதிமன்றம். இப்படி அடுத்தடுத்து வழக்குகளை விசாரித்துத் தீர்ப்புகளைக் கொடுத்து வருகிறது சிறப்பு நீதிமன்றம்.

சிறப்பு நீதிமன்றத்தில் அசோகன்
சிறப்பு நீதிமன்றத்தில் அசோகன்

இந்தச் சிறப்பு நீதிமன்றம் அமைப்பதற்காக அரசு எவ்வளவு செலவழித்திருக்கிறது என்கிற விவரம் விகடனுக்கு பிரத்யேகமாகக் கிடைத்தது. அமர்வு நீதிபதி நிலையில் சிறப்பு நீதிமன்றம் மற்றும் உதவி அமர்வு நீதிபதி நிலையில் ஒரு கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தை அரசு புதிதாக அமைத்திருக்கிறது. ஒரு புதிய நீதிமன்றம் அமைக்கப்படும்போது அதற்குத் தேவையான பணியாளர்கள், உள் கட்டமைப்புகள் ஆகியவை புதிதாக உருவாக்கவோ அல்லது அமைக்கவோ வேண்டும். அதன்படி 2019 - 2020 நிதியாண்டில் இந்த சிறப்பு நீதிமன்றத்துக்காக 1,94,91,860 ரூபாயை அரசுக்கு ஒதுக்கியிருக்கிறது. இந்தச் சிறப்பு நீதிமன்றத்துக்காக பல்வேறு நிலையில் 34 பணியிடங்களையும் புதிதாக உருவாக்கியிருக்கிறார்கள்.

பின் செல்ல