பல அழியாத நினைவுகளையும் சுவடுகளையும் தாங்கியபடி விடைபெறுகிறது 2022-ம் ஆண்டு. நீதித்துறையிலும் 2022-ம் ஆண்டு பல முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளும் தீர்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. மகளிர் நலன், பெண்ணுரிமை சார்ந்த சில வழக்குகள், தீர்ப்புகள் பற்றிப் பார்ப்போம்.

மணமாகாத பெண்களின் கருக்கலைப்பு உரிமை
திருமணமாகாத பெண் ஒருவர், 22 வாரங்கள் ஆன தன் சிசுவை கருக்கலைப்பு செய்யக் கோரிய வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, உச்ச நீதிமன்றத்தை நாடினார். திருமணமாகாத பெண்கள், சம்மதத்துடன் உறவில் ஈடுபட்டு, அதனால் கருத்தரிப்பினும்கூட, கருக்கலைப்பு செய்வதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கருக்கலைப்புச் சட்டத்தில், திருமணமான பெண்கள், திருமணமாகாத பெண்கள் என வேறுபடுத்திப் பார்ப்பது தவறு என்று குறிப்பிட்ட நீதிமன்றம், திருமணமாகாத பெண்களும் 24 வாரங்கள் வரை கருக்கலைப்பு செய்துகொள்ளலாம் என்று கூறியது. திருமண பாலியல் வன்கொடுமை குறித்து இவ்வழக்கில் விவாதிக்கப்பட்டுள்ளது. பெண்களின் உடல் மீதான சுதந்திரம் அவர்களுக்கே உரியது எனவும் தீர்ப்பளித்து உரிமையை நிலைநாட்டியுள்ளது உச்ச நீதிமன்றம்.
குடும்ப வன்முறை பாதுகாப்பு சட்டப்பிரிவு
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள், குடும்ப வன்முறைப் பாதுகாப்பு சட்டம் பிரிவு 12ன் கீழ், நீதித்துறை நடுவரிடம் அளிக்கும் மனு, குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 468-ன் கீழ் காலவரையறைக்கு உட்பட்டது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஆனால், இதை நிராகரித்த உச்ச நீதிமன்றம், இனி குடும்ப வன்முறை சட்டப் பிரிவு 12-க்கு காலவரையறை கிடையாது எனத் தீர்ப்பளித்துள்ளது.

பாலியல் தொழிலாளர்களுக்கான கண்ணியம்
பாலியல் தொழிலாளர்களின் கண்ணியத்தை உறுதிப்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்றம் காவல்துறைக்கும், ஊடகத்துறைக்கும் அறிவுறுத்தியுள்ளது. பாலியல் தொழிலாளர்களை காவல்துறை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்றும், அவர்களை உடல்ரீதியிலோ, மனரீதியிலோ துன்புறுத்தக் கூடாது என்றும் காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாலியல் தொழிலாளர்களின் அடையாளமோ, புகைப்படமோ வெளியிடக் கூடாது என்றும், மீறினால் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் என்றும், தனது தீர்ப்பில் கூறியுள்ள உச்ச நீதிமன்றம், இந்தியாவின் பிரஸ் கவுன்சிலுக்கு இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட உத்தரவிட்டுள்ளது.
பாலியல் வழக்குகளில் இருவிரல் ஆய்வுக்குத் தடை:
பாலியல் அத்துமீறல் வழக்குகளில், பாதிக்கப்பட்ட பெண் வன்முறைக்கு ஆளாகியுள்ளாரா என்பதைக் கண்டறியும் இருவிரல் ஆய்வு அறிவியல்பூர்வமற்றது என்று கூறி, அதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அத்துடன், அத்தகைய ஆய்வை மேற்கொள்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்களை மீண்டும் துன்புறுத்தும் இச்செயல் இன்றும் தொடர்வது வருத்தத்துக்குரியது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இச்செயல், பாலியல் ரீதியில் உறவில் இருக்கும் பெண்கள், பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட மாட்டார்கள் என்னும் தவறான கருத்தை அளிக்கும் எனவும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு
செவிலியர் படிப்பில் இட ஒதுக்கீடு கோரிய வழக்கில், திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீட்டு வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
குழந்தையின் குடும்பப் பெயர் மீதான உரிமை
குழந்தையின் தந்தை இறந்த பின்பு, மறுதிருமணம் செய்து கொண்ட தாய், அவரின் குழந்தையின் குடும்பப் பெயரை தேர்வு செய்ய முடியும் எனத் தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம். மேலும், மாற்றுத் தந்தை என்று குறிப்பிட வேண்டும் என்கிற ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குழந்தைகளுக்கு மன உளைச்சலைத் ஏற்படுத்தும் என்று கூறி, அதை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்.
பாலியல் தொல்லை - விலகிய நீதிபதிக்கு மீண்டும் பணி
மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த மாவட்ட பெண் துணை நீதிபதி, மத்தியப்பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி, பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். இதன் காரணமாகப் பணியை மாவட்ட துணை நீதிபதி ராஜினாமா செய்தார். மீண்டும் பணியமர்த்தக் கோரிய வழக்கில், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் மறுத்தது. பிறகு உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 2022-ல், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்துக்கு, மாவட்ட துணை நீதிபதியின் பதவியை திருப்பி அளிக்க உத்தரவிட்டது.

ஆடை பெண்களின் உரிமை
கேரள எழுத்தாளரும், சமூகச் செயற்பாட்டாளருமான சிவிக் சந்திரன் மீதான பாலியல் சீண்டல் வழக்கில், முன்பிணை வழங்கும்போது, குற்றம்சாட்டிய பெண் பாலியல் உணர்வைத் தூண்டும் வகையில் ஆடை அணிந்திருந்ததாகக் கருத்து தெரிவித்திருந்தார் செஷன்ஸ் நீதிபதி. அந்தக் கருத்தை முழுவதுமாகத் திருப்பப் பெற்ற கேரள உயர் நீதிமன்றம், `பெண்கள் ஆடை அணிவது இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, அவர்களின் தனி உரிமை. ஒரு பெண்ணின் உடை, உணர்வை தூண்டும் விதமாக இருந்தாலும், அது ஆண்களுக்கு எந்த வகையிலும் பெண்ணை களங்கப்படுத்தும் உரிமையைக் கொடுப்பதில்லை’ என்றது கேரள உயர் நீதிமன்றம்.
பாலியல் வழக்கில் போலீஸால் கைவிடப்பட்ட தடயங்கள் வழக்கின் போக்கை தீர்மானிக்காது:
பாலியல் வன்கொடுமை வழக்கில், காவல்துறை தடயங்களைச் சேகரித்து தடவியல் துறைக்கு அனுப்பாமல் இருப்பது, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கும் நீதியை பாதிக்காது. பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்கு மூலத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும்போது, காவல்துறையின் மெத்தனப்போக்கு அவ்வழக்கைத் தீர்மானிக்க முடியாது என்று வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஒவ்வொரு பெண்ணுக்கும், திருமணம் செய்த வீட்டில் சேர்ந்து வாழும் உரிமை.
ஒவ்வொரு பெண்ணுக்கும் தான் திருமணம் செய்த வீட்டில் சேர்ந்து வாழ்வதற்கான உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. `திருமணம் செய்த வீட்டில், ஒரு பெண் சேர்ந்து வாழ்வதற்கான உரிமை உண்டு. அந்த வீட்டில் அவர் முன்பு வாழ்ந்திராவிடினும்கூட, வீட்டில் பகிர்ந்து வாழ்வதற்கான உரிமை அப்பெண்ணுக்கு உண்டு. அப்பெண்ணை வீட்டிலிருந்து வெளியேற்றவோ, விலக்கி வைக்கவோ யாருக்கும் அதிகாரம் இல்லை. குடும்ப வன்முறை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், திருமணமான வீட்டில் சேர்ந்து வழ்வதற்காக உரிமை பெண்களுக்கு உண்டு’ எனத் தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

அடையாள அட்டையில் தந்தையின் பெயர் கட்டாயமில்லை:
உச்ச நீதிமன்றம் பல முறை தீர்ப்பு வழங்கியும், அடையாள அட்டையில் தந்தையின் பெயர் கட்டாயம் என மக்களை அலையவிடுகின்றனர் அரசு அதிகாரிகள். இதோ மீண்டுமொரு தீர்ப்பு, கேரள உயர் நீதிமன்றத்தில். `திருமணம் செய்யாத பெண்கள் அல்லது பாலியல் வன்முறைக்கு ஆளானவர்களுக்கு பிறந்த குழந்தைகளும் இந்நாட்டின் குடிமகன்/குடிமகள். இந்திய அரசியலமைப்புச் சட்டம் அவர்களுக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளில் யாரும் தலையிட முடியாது. அதனால், அடையாள அட்டையில் தந்தை பெயர் இருக்க வேண்டிய கட்டாயமில்லை’ எனத் தீர்ப்பளித்தது கேரள உயர் நீதிமன்றம்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் ரகசியம் காக்கப்பட வேண்டும்
பாலியல் வன்கொடுமை வழக்குகளில், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, இறுதி அறிக்கை வரும் வரை குற்றவாளி உட்பட யாருக்கும் காண்பிக்கக் கூடாது எனப் பல நீதிமன்றத் தீர்ப்புகள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை ரகசியம் காக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் அதன் தீர்ப்பில், குற்றவியல் நடைமுறைச் சட்டம்/விசாரணை விதிகளில் தகுந்த மாற்றம் செய்யவோ, திருத்தம் செய்யவோ உயர் நீதிமன்றங்களுக்கு பரிந்துரை வழங்கியுள்ளது.

டாக்டர் புரூனோவை விடுவித்த உச்ச நீதிமன்றம்:
பெரும்பாலான ஆண்கள், பெண்களை மனநலன் பாதிக்கப்பட்டவர்கள் எனச் சொல்லியே நீதிமன்றத்தை நாடுகின்றனர் என மருத்துவர் புரூனோ வழக்கில் மகிளா நீதிமன்றம் கருத்து தெரிவித்து, அவருக்கு தண்டனை வழங்கியது. அதை முன்மொழிந்து சென்னை உயர் நீதிமன்றமும், அதே தண்டனையை உறுதி செய்தது.
பெண்கள் தொடர்புடைய பல வழக்குகளில் முற்போக்கான தீர்ப்பை வழங்கி வந்த உச்ச நீதிமன்றம், மருத்துவர் அமலியின் மரணத்தில், அவர் மனநலன் பாதிக்கப்பட்டவர் எனச் சொல்லிய புரூனோவின் வாதம் ஆதாரமற்றது எனும் மகிளா மற்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால், எவ்வித அதாரங்களு மின்றி ஒரு பெண்ணை மனநலன் பாதிக்கப்பட்டவர் எனச் சொல்லி, அத்தீர்ப்பை ரத்து செய்ததோடு, மருத்துவர் புரூனோவை விடுவித்தது உச்ச நீதிமன்றம்.
பல முற்போக்கான தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் வழங்கி வந்தாலும், நடைமுறையில் பெண்களுக்கு பெரும்பாலும் எட்டாக்கனியாகவே நியாயமான தீர்ப்புகள் அமைகின்றன. பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தடயங்களை சேகரிக்கத் தவறும் காவல்துறையால், ஒரு சில வழக்குகளில் மட்டுமே, ஆதாரங்கள் ஏதுமற்ற பாதிக்கப்பட்ட பெண்ணின் குரலை நம்புகிறது நீதிமன்றம். குடும்ப வன்முறை வழக்குகளில் பெரும்பாலும் பெண்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என ஆண்கள் முன்வைக்கும் வாதத்தை நீதிமன்றங்கள் உடைத்தெறிய வேண்டும்.