Published:Updated:

எவ்வளவு நீளக் கயிறு... என்னென்ன பரிசோதனைகள்... எப்படி நிறைவேற்றப்படும் தூக்குத் தண்டனை? #Nirbhaya

நிர்பயா வழக்கின் குற்றவாளிகள்
நிர்பயா வழக்கின் குற்றவாளிகள்

திகார் சிறை தூக்குத் தண்டனைக்கு ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறது. வன்கொடுமை வழக்கு ஒன்றில், நாட்டிலேயே முதல்முறையாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதால் பரபரப்பு நிலவுகிறது. நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தூக்குத் தண்டனை எப்படி நிறைவேற்றப்படும்?

இந்தியாவையே உலுக்கிய சம்பவம் அது. ஏறத்தாழ 7 ஆண்டுகள் கடந்தும், அந்தச் சம்பவத்தின் கோரம் இன்னும் மறையவில்லை. இந்தியாவின் தலைநகரம் டெல்லியில் நிகழ்ந்த அந்தச் சம்பவம், இந்தியாவில் வாழும் பெண்களின் அவலநிலையை உலகத்திற்குக் காட்டியது. வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவிக்கு ஆதரவாகப் பல்லாயிரக் கணக்கானோர் தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்ய வீதியில் இறங்கினர். தொடர்ந்து அடக்குமுறை, ஆணாதிக்கம், வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல், முதலானவற்றுக்கு உள்ளாகும் இந்தியப் பெண் சமூகம், வன்கொடுமை செய்து தாக்குதலுக்கு உள்ளான அந்தப் பெண்ணுக்கு சூட்டிய பெயர், 'நிர்பயா'. 'நிர்பயா' என்றால் 'பயமற்றவள்' என்று பொருள்.

வழக்கில் கைதான 6 பேரில், ஒருவர் சிறார். ராம் சிங் என்ற குற்றவாளி, 2013-ம் ஆண்டு திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காவல்துறை தரப்பில் தற்கொலை என்று சொல்லப்பட்டாலும், ராம் சிங்கின் வழக்கறிஞரும் குடும்பத்தினரும் அதைக் கொலை என்றே கருதுகின்றனர். குற்றவாளிகளோடு இருந்த சிறாருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. மற்ற நால்வருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீடு, நிராகரிப்பு ஆகியவற்றைக் கடந்து, தற்போது நால்வருக்கும் ஜனவரி 22-ம் தேதியன்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

நிர்பயா போராட்டம்
நிர்பயா போராட்டம்

திகார் சிறை தூக்குத் தண்டனைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. வரும் ஜனவரி 22-ம் தேதியன்று காலை 7 மணிக்கு, நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் வினய் ஷர்மா, பவன் குப்தா, அக்‌ஷய் தாகூர், முகேஷ் ஆகிய நால்வருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. வன்கொடுமை வழக்கு ஒன்றில், நாட்டிலேயே முதல்முறையாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதால், திகார் சிறையில் பரபரப்பு நிலவுகிறது.

தண்டனைக்கான ஒத்திகை!

'டெல்லி சிறை விதிகள் 2018' என்ற விதிமுறைகளின்படி, தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதற்கு என்னென்ன விதிகள் பின்பற்றப்படுகின்றன என்று கூறப்பட்டிருக்கிறது. சிறைக் கண்காணிப்பாளருக்குத் தண்டனையை நிறைவேற்றும் நேரத்தைத் தீர்மானிக்கும் அதிகாரம் வழங்கப்படுகிறது. தண்டனை நிறைவேற்றும் நேரம் குறித்த அறிக்கையை அவர் காவல்துறை உயரதிகாரி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, அரசு ஆகியோருக்கு அனுப்புவார். பொதுவாக, அதிகாலை வெளிச்சம் வருவதற்கு முன்பே தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும்; அதற்கான நேரத்தை ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்றவாறு அரசு வெளியிடும். சிறைவாசிகள் யாருக்கும் தூக்குத் தண்டனையைப் பார்வையிட அனுமதி கிடையாது.

தூக்கு
தூக்கு

முதலில், பொதுப்பணித்துறையைச் சேர்ந்த தலைமைப் பொறியாளர் ஒருவர், தண்டனை நிறைவேற்றப்படும் தூக்குமேடையை 4 நாள்களுக்கு ஒரு முறை பார்வையிடுவார். தண்டனை நிறைவேற்றப்படும் நாளுக்கு முந்தைய நாள் மாலை, சிறைக் கண்காணிப்பாளர் முன்னிலையில் தலைமைப் பொறியாளர் தூக்கு மேடையை நேரில் பார்வையிட வேண்டும். தூக்குத் தண்டனைக்குப் புதிய கயிற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று விதிகளில் குறிப்பிடப்படவில்லை. எனினும் தூக்குக்கயிறு பலமுறை சோதனை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

கைதியைவிட, ஒன்றரை மடங்கு அதிக எடையுள்ள மணல் மூட்டையை, ஏறத்தாழ 1.83 மீட்டர் முதல் 2.44 மீட்டர் வரையிலான நீளம் கொண்ட கயிற்றில் கட்டித் தொங்கவிட்டு, கயிற்றின் பலம் பரிசோதிக்கப்படும். ஒவ்வொரு கைதிக்கும் 2 கயிறுகள் கூடுதலாக வைக்கப்பட்டிருக்கும். தண்டனையின்போது, கயிற்றில் பிரச்னை ஏற்பட்டால், அதற்கு மாற்று ஏற்பாடாக இந்தக் கயிறுகள் பயன்படும்.

தூக்கு கயிறு
தூக்கு கயிறு
மாதிரி புகைப்படம்

அடுத்ததாக, தண்டனை நிறைவேற்றப்படும் நாளுக்கு 4 நாள்களுக்கு முன்பு, மருத்துவ அதிகாரி ஒருவர் கைதியின் எடைக்கு ஏற்ப, எவ்வளவு நீளத்தில் அவரது உடல் தொங்கவிடப்பட வேண்டும் என்பதைக் கணக்கிடுவார். எடை அதிகமாவதற்கேற்ப நீளம் குறைக்கப்படும்.

கைதியின் எடை 45.36 கிலோவுக்குக் கீழ் இருந்தால், தூக்குமேடையிலிருந்து தரைக்கு 2.44 மீட்டர் நீளத்தில் தொங்கவிடப்படுவார்; 45.33 கிலோ முதல் 60.33 கிலோ வரை எடையுள்ள கைதிக்கு, 2.29 மீட்டர் தூரமும், 60.33 கிலோ முதல் 75.33 கிலோ வரை எடையுள்ள கைதிக்கு 2.13 மீட்டர் தூரமும், 75.33 கிலோ முதல் 90.72 கிலோ வரை எடையுள்ள கைதிக்கு, 1.98 மீட்டர் தூரமும் உடலைத் தொங்கவிடுவதற்கான நீளமாக நிர்ணிக்கப்பட்டிருக்கின்றன. 90.72 கிலோ எடைக்கும் அதிகமாக உள்ள கைதிக்கு, 1.83 மீட்டர் நீளம் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கைதிகளின் உயரம், எடை ஆகியவற்றின் விவரங்கள் ஏற்கெனவே சிறைத்துறையின் பதிவுகளில் இருந்தாலும், தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு 4 நாள்களுக்கு முன்பு, அவை மீண்டும் அளவிடப்படும். தூக்குக் கயிற்றின் நீளம், உடல் தொங்கவிடப்படும் உயரம் ஆகியவற்றைத் தீர்மானிக்கும் பொறுப்பு, மருத்துவ அதிகாரிக்கு வழங்கப்படும். தூக்குக் கயிறு, பருத்தி அல்லது மணிலாவால் தயாரிக்கப்படும். அதன் சுற்றுவட்டம் 2.59 முதல் 3.81 சென்டிமீட்டர் வரை இருக்கும்.

சிறை
சிறை
``திகார் சிறை, ஜனவரி 22  காலை 7 மணி!" - நிர்பயா பாலியல் வன்கொடுமைக் கொலை வழக்கு கடந்து வந்த பாதை

கைதியின் இடது காதுக்குக் கீழ் தாடைப் பகுதியிலிருந்து, கைதியின் உயரம் துல்லியமாக அளவிடப்படும். கயிறு தொங்கவிடப்பட்டுள்ள இடத்திலிருந்து, கீழே கட்டப்பட்டிருக்கும் இடம் வரையிலான நீளம் கணக்கிடப்படும். கைதியின் கழுத்தின் சுற்றளவு கணக்கிடப்படும். இந்தக் கணக்குகளை வைத்து, தூக்குத் தண்டனை ஒத்திகை நடைபெறும். ஒத்திகை சரியாக நடந்து முடிந்த பிறகு, கயிற்றின் சுருக்குப் பகுதியில் மெழுகு அல்லது வெண்ணெய் தடவப்பட்டு, இரும்புப் பெட்டி ஒன்றில் வைத்து பூட்டி வைக்கப்படும். அது, சிறையின் துணை கண்காணிப்பாளரின் பொறுப்பில் அளிக்கப்படும்.

தண்டனை நிறைவேற்றப்படும்போது யாரெல்லாம் இருக்கலாம்?

சிறையின் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், மருத்துவ அதிகாரி, சிறையின் மருத்துவர் ஆகியோர் தண்டனை நிறைவேற்றப்படும் வரை இருக்க வேண்டும். மாவட்ட மாஜிஸ்ட்ரேட் அல்லது துணை மாஜிஸ்ட்ரேட் தண்டனை நிறைவேற்றுவதற்கு முன்பு, கையெழுத்திட வேண்டும். தண்டனை பெறும் கைதி விரும்பினால், அவரின் மத நம்பிக்கைக்கு ஏற்ப மத குரு ஒருவர், பாதுகாப்பு மற்றும் சிறை விதிமுறைகள் ஆகியவற்றை மீறாமல் அனுமதிக்கப்படுவார். அரசு சிறப்பு ஆணை பெற்ற ஆய்வாளர்கள், மனநல நிபுணர்கள் ஆகியோருக்கு சிறப்பு அனுமதி உண்டு.

திகார் சிறை
திகார் சிறை

ஆயுதம் தாங்கிய சிறைக் காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபடலாம். தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டு, கைதியின் உடல் சிறை வளாகத்தை விட்டு வெளியேற்றப்படும் வரை, எந்தச் சிறையும் திறக்கப்படாது. கைதிகள், தங்கள் சிறையிலேயே இருக்க வேண்டும் என்று விதிமுறைகள் கூறுகின்றன.

தூக்குத் தண்டனை எப்படி நிறைவேற்றப்படும்?

தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு சிறைக் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், மாவட்ட மேஜிஸ்திரேட், மருத்துவ அதிகாரி ஆகியோர் கைதியின் சிறைக்குச் சென்று அவரை சந்திப்பார்கள். கைதியின் கையெழுத்து தேவைப்படும் ஆவணங்கள், அவரது உயில், முதலானவை சிறைக் கண்காணிப்பாளர், மாவட்ட மேஜிஸ்திரேட் ஆகியோரின் பார்வையில் கைதியால் கையெழுத்திடப்படும்.

`அவனுகளை சும்மா விடக் கூடாது என நினைத்தேன்!'- கும்பகோணம் பாலியல் வழக்கில் இறுதிவரை போராடிய இன்ஸ்பெக்டர்

அதன்பிறகு, சிறைக் கண்காணிப்பாளர், மாவட்ட மேஜிஸ்திரேட், மருத்துவ அதிகாரி ஆகியோர் தூக்குமேடைக்குச் சென்றுவிடுவர். கைதியுடன் துணை கண்காணிப்பாளர் இருக்கலாம். தூக்குமேடை தயார்செய்யப்பட்டதும், துணை கண்காணிப்பாளர் காவலர்களுடன், கைதியின் கையைப் பின்னால் கட்டி அழைத்து வருவார்கள். முன்னால் இரு காவலர்கள், பின்னால் இரு காவலர்கள், ஒவ்வொரு கையையும் பிடித்துக்கொள்ள, இரு காவலர்கள் என மொத்தம் 6 காவலர்கள் கைதியைத் தூக்குமேடைக்கு அழைத்து வருவார்கள்.

சிறைக் கண்காணிப்பாளர், மாவட்ட மேஜிஸ்திரேட்டிடம் கைதியை நேரில் அடையாளம் கண்டதாகவும், கைதிக்குப் புரியும் மொழியில் அவருடைய தண்டனை வாரண்ட் படித்துக் காட்டப்பட்டதாகவும் கைதி முன்னிலையில் உறுதியளிப்பார். பருத்தியால் செய்யப்பட்ட முகமூடியால் கைதியின் முகம் மூடப்படும். தூக்கு மேடையைப் பார்வையிடுவதற்கு, கைதிக்கு அனுமதியில்லை. தூக்கு மேடையில் ஏற்றப்பட்டு, கைதியின் கழுத்தில் சுருக்கு மாட்டப்படும் வரை, கைதியின் இரு கைகளையும் பிடித்தவாறு பாதுகாப்புக் காவலர்கள் இருக்க வேண்டும். சிறைக் கண்காணிப்பாளர் சிக்னல் தந்ததும், தண்டனையை நிறைவேற்றுபவர் லீவரைப் பிடித்து இழுக்க, தூக்கு மேடையில் தரைத்தளம் திறக்கும்.

தூக்கு மேடை
தூக்கு மேடை
மாதிரி புகைப்படம்

தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு, 30 நிமிடங்களுக்கு கைதியின் உடல் தூக்குக்கயிற்றில் தொங்கவிடப்படும். அதன்பிறகு, சிறை மருத்துவர் கைதி இறந்துவிட்டதை உறுதி செய்வார். தூக்குத் தண்டனையை நிறைவேற்றுபவருக்கு, டெல்லி மாநில அரசு ஒவ்வொரு கைதிக்கும் ஏற்ப தனித்தனியாக சம்பளம் வழங்கும்.

தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டு இறந்த கைதியின் உடலை, அவரது மத நம்பிக்கைக்கு ஏற்ப இறுதிச் சடங்குகள் செய்து நல்லடக்கம் செய்யப்படும். கைதியின் உறவினர்கள் உடலை வாங்கும் பட்சத்தில், காவல்துறையின் பாதுகாப்போடு, கைதியின் இறப்பு, பொது நிகழ்வுகள் எதுவும் இல்லாமல், அஞ்சலி செலுத்துவதற்காக அளிக்கப்படும். சிறையிலிருந்து கைதியின் உடல் தகனம் செய்வதற்காக ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்லப்படும். அதற்கான வாடகையை சிறைக் கண்காணிப்பாளர் அளிக்க வேண்டும். தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பதை வாரண்ட்டில் பூர்த்திசெய்து, காவல்துறை தலைமைக்கும் நீதிமன்றத்திற்கும் அனுப்ப வேண்டியது சிறைக் கண்காணிப்பாளரின் பொறுப்பு.

`உடல்தான் சிறையிலிருந்து வெளியே வர வேண்டும்!'- பாலியல் வழக்கில் தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு

இப்படியாக, மரண தண்டனையை அரசு நடைமுறைப்படுத்துகிறது. நாகரிகம் அடைந்த ஒரு சமூகத்தில் ஒவ்வொரு குற்றத்துக்கும் பின்னணிக் காரணங்கள் சமூகங்களில் நிகழும் ஏற்றத் தாழ்வுகளையும், மாற்றங்களையும் அடிப்படையாகக் கொண்டவை. அவற்றைத் தீர்க்காமல், குற்றங்களை ஒழிக்க முடியாது. ஒட்டுமொத்த சமூகத்தையும் மாற்றும் நீண்ட கால செயல்திட்டங்களை, பெண்கள் பாதுகாப்பை முன்வைத்து, அரசு செய்ய வேண்டும்.

பின் செல்ல