மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் மேற்கு வங்கத்தில், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக 36,000 ஆசிரியர்களின் பணி நியமன ஆணையை கொல்கத்தா உயர் நீதிமன்றம் ரத்துசெய்திருப்பது பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.

கடந்த 2014-ல் மாநில ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களில் 42,500 பேர் ஆட்சேர்ப்பு முறையில், 2016-ல் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், அப்போது இந்த ஆட்சேர்ப்பில் பங்கேற்றவர்களில் பணி நியமனம் பெறாத 140 பேர் இந்த நியமனத்தில் குளறுபடிகள் நடந்திருப்பதாக நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருக்கின்றனர். மேலும் இந்த வழக்கில், பலர் ஆசிரியர் பயிற்சி பெறவில்லை என்றும், தேர்வில் தேர்ச்சி பெறாமலேயே தேர்வானதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதன் பின்னர்தான் நியமனம் செய்யப்பட்ட 42,500 பேரில், 6,500 பேர் மட்டுமே ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் என்பது தெரியவந்திருக்கிறது. இந்த நிலையில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அபிஜித் கங்கோபாதாய், ``மேற்கு வங்கத்தில் ஒருபோதும் இவ்வளவு பெரிய ஊழல் அறியப்படவில்லை" என்று கூறி 36,000 பேரின் பணி நியமன ஆணையை ரத்துசெய்து உத்தரவிட்டார்.
மேலும், 2016-ம் ஆண்டு நியமனத்தில் பங்கேற்ற, பயிற்சிபெற்ற விண்ணப்பதாரர்கள் உட்பட அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் மூன்று மாதங்களுக்குள் ஆட்சேர்ப்பு பயிற்சியை மேற்கு வங்க முதன்மைக் கல்வி வாரியம் உடனடியாக ஏற்பாடு செய்யும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதுமட்டுமல்லாமல், ``அனைத்துத் தேர்வாளர்களுக்கும் நேர்காணல், திறன் தேர்வு ஆகிய இரண்டும் நடத்தப்படும். முழு நேர்காணல் செயல்முறையும் கவனமாக வீடியோ எடுத்துப் பாதுகாக்கப்பட வேண்டும். புதிய விண்ணப்பதாரர்கள் ஆட்சேர்ப்பு தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். 2016-ம் ஆண்டு ஆட்சேர்ப்பு செயல்முறையில் மேற்கொள்ளப்பட்ட அதே விதிகள் மற்றும் சட்ட நடைமுறைகளின் கீழ் ஆட்சேர்ப்பு செயல்முறை இருக்கும்" என்று நீதிபதி அபிஜித் கங்கோபாதாய் தெளிவுபடுத்தினார்.