Published:Updated:

``சாமான்ய மனிதரின் நம்பிக்கையை நாம் பெறவேண்டும்!” முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜஸ்டி செலமேஸ்வர்

செலமேஸ்வர்
செலமேஸ்வர்

சென்னையில், அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் ஒருங்கிணைத்திருந்த கருத்தரங்கில், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா மற்றும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர் கலந்துகொண்டு பேசினர்.

அகில இந்திய வழக்கறிஞர் சங்கம், `இந்திய அரசியலமைப்பின் 70 ஆண்டுகள் - நீதித்துறையின் பங்களிப்பு’ என்கிற தலைப்பில் கருத்தரங்கு ஒன்றை ஒருங்கிணைத்திருந்தனர். இதில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா மற்றும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 70 ஆண்டு நிறைவடைந்ததையொட்டி இந்த கருத்தரங்கு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.

அரசியலமைப்பின் 70 ஆண்டுகளில் நீதித்துறையின் பங்களிப்பு குறித்தும், அரசியலமைப்பின் விழுமியங்களைப் பாதுகாப்பதில் நீதித்துறை நடந்துகொண்ட விதத்தைப் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

கருத்தரங்கு
கருத்தரங்கு

ஆதவன் தீட்சண்யா:

ஆதவன் தீட்சண்யா தன்னுடைய கருத்துரையில், ``இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில் உள்ள அனைத்து விழுமியங்களையும், பாதுகாப்பதிலும் உறுதிப்படுத்துவதிலும் நீதித்துறைக்கு மிக முக்கியப் பங்கு இருக்கிறது. ஆனால், நீதித்துறை அதனை முழுமையாகச் செய்திருக்கிறதா என்கிற கேள்விக்கான விடையை நாம் காண வேண்டும். விதிவிலக்கான சமயங்களைத் தவிர, பல நேரங்களில் நீதித்துறை அதற்குத் தடைக்கல்லாகவும் இருந்துள்ளது. மற்ற அனைத்துத் துறைகளிலும் நடைமுறையில் உள்ல இடஒதுக்கீடு முறை ஏன் நீதித்துறையில் பின்பற்றப்படுவதில்லை. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொல்லிவிட்டால், அது இந்த நிலத்தின் சட்டம். இத்தகைய உயர்ந்த அதிகார பீடத்தில் நாட்டில் 80% உள்ள பட்டியல் இனத்தவர், பழங்குடிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் 70 ஆண்டுகள் ஆகியும் வழங்கப்படவில்லையே?

அதோடு மட்டுமில்லாது, இடஒதுக்கீடு அளவு என்பது 50 சதவிகிதத்தைத் தாண்டக்கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இன்றுவரை இந்தத் தீர்ப்பு எதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது என்பதற்கான நியாயம் வழங்கப்படவில்லை. சமத்துவத்தை நிலைநிறுத்தவேண்டிய உச்ச நீதிமன்றம், இடஒதுக்கீடு என்கிற உரிமையை ஆரம்பம் முதலே ஒவ்வாமையுடனே அணுகிவந்துள்ளது. அஸ்ஸாமைப் போல என்.ஆர்.சி - என்.பி.ஆர் மூலம் இந்தியா முழுவதும் திறந்தவெளி சிறைச்சாலை உருவாக்கப்பட உள்ளது. இதில், நீதித்துறையும் உடந்தையாக உள்ளதுதான் வருத்தமளிக்கக்கூடிய விஷயம்.

ஆதவன் தீட்சண்யா
ஆதவன் தீட்சண்யா

பொருளாதார ஏற்றத்தாழ்வு, வரலாற்றில் இல்லாத உச்சத்தில் இருக்கிறது. இதனை உச்ச நீதிமன்றம் எவ்வாறு பார்க்கிறது என்கிற கேள்வியும் உள்ளது. ஜனநாயக வழியிலான போராட்டங்களை ஒடுக்குவதில் பா.ஜ.க அரசுக்கு போட்டி போட்டுக்கொண்டு நீதித்துறை செயல்படுகிறது. அரசியல் சாசனத்தின் விழுமியங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சமயங்களில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்” என்று பேசி முடித்தார்.

செலமேஸ்வர்:

அடுத்து பேசிய நீதிபதி செலமேஸ்வர் தன்னுடைய கருத்துரையில், ``நீதியமைப்பு என்பது மக்களால் எளிதில் அணுகக்கூடியதாக இல்லை. மக்களுக்கு இந்த அமைப்பின் மேல் அதிருப்தி உள்ளது. இதில் இரண்டு முக்கியமான விஷயங்கள், வழக்குகள் முடிவுக்கு வருவதற்கு எடுத்துக்கொள்ளப்படுகிற கால தாமதம். இரண்டாவது, இந்திய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள். இதற்கு நீதிமன்றம் மட்டுமல்ல அரசின் அனைத்து அலகுகளுமே ஒருவகையில் காரணம். வழக்குகள் நடத்தி முடிப்பதற்கு முறையான கால அளவே கிடையாது.

செலமேஸ்வர்
செலமேஸ்வர்

உதாரணமாக, தேர்தல் வழக்குகளை உயர்நீதிமன்றங்கள் ஆறு மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்பது சட்டம். ஆனால், எந்த தேர்தல் வழக்குகளும் ஆறு மாதத்துக்குள் முடிவதில்லை. ஒட்டுமொத்த நீதித்துறையில் ஒரு நிலையற்றதன்மை நிலவுகிறது. நீதிபதிகள் நியமனமும் பணியிட மாற்றமும் சார்புத்தன்மையுடனே மேற்கொள்ளப்பட்டுவருகிறது. சிவில் உரிமைகளைப் பாதுகாப்பதில் உச்ச நீதிமன்றம் தோற்றுவிட்டது. உச்ச நீதிமன்றம் வெவ்வேறு காலகட்டங்களில் பல முன்னுதாரமான தீர்ப்புகளை அளித்துள்ளது. ஆனால், அதைத் தானே என்றுமே பின்பற்றியது இல்லை என்பதே வேதனையான விஷயம்.

வழக்குகள் விசாரிக்கப்பட்ட பிறகு தீர்ப்புகள் ஒத்திவைக்கப்படுவதும், மற்றுமொரு ஆபத்தான விஷயம். ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை முடிந்து எட்டு மாதங்கள் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது ஏன்? இவையெல்லாம் மக்களுக்கு இந்த அமைப்பின்மீது உள்ள நம்பிக்கையைக் குறைக்கவே செய்யும். சாமான்ய மனிதரின் நம்பிக்கையைப் பெற்றுள்ளவரையில்தான் ஒரு அமைப்பு திறம்படச் செயல்பட முடியும். இன்று சாமானிய மனிதருக்கு நீதித்துறையின்மீது எந்த அளவிற்கு நம்பிக்கை உள்ளது என்பதை ஆராய்ந்துபார்க்க வேண்டும்.”

கருத்தரங்கு
கருத்தரங்கு

உச்ச நீதிமன்றம் தன்னை மறு ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டிய கால நெருக்கடியில் இருக்கிறது. நிர்வாக அளவில் உச்ச நீதிமன்றம் முடிவெடுப்பது சீராக இருப்பதில்லை. இந்தியாவில் உத்தரப்பிரதேச, மத்தியப்பிரதேச மாநில உயர் நீதிமன்றங்களில் ஆங்கிலத்தோடு இந்தியும் வழக்காடு மொழியாக உள்ளது. ஆனால், இதே போன்றதொரு கோரிக்கை குஜராத் மற்றும் மெட்ராஸ் உயர் நீதிமன்றங்களிலிருந்து வந்தபோது உச்ச நீதிமன்றம் அதற்கு ஒருமனதாக மறுப்பு தெரிவித்துவிட்டது. அப்போது, இந்த இரண்டு உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்தவர்களுமே உச்ச நீதிமன்றத்தில் இருந்தனர் என்பதுதான் முரணான விஷயம். இங்கே, நீதிமன்றத்தை மட்டும் குறை சொல்லிவிட முடியாது. இந்த அமைப்பை சீர்படுத்த பார் கவுன்சிலின் பங்களிப்பும் அவசியம். இப்போது நாட்டில் உள்ள சூழ்நிலையில், அனைவரும் தைரியமான வெளிப்படையான நிலைப்பாடு எடுக்கவேண்டிய தேவை உள்ளது” என்று பேசி முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு