Published:Updated:

"என் மகன் 22 வயசுல கைதானான் இப்போ 54 வயசு; அவனுக்கு விடுதலை கிடைக்கணும்" - ரவிச்சந்திரனின் தாய்

ரவிச்சந்திரன்

பேரறிவாளன் விடுதலை டி.வி-ல பார்த்தப்போ, அந்த நிமிஷம் என் மகனை நெனச்சு என் கண்ணெல்லாம் கண்ணீரா நெறஞ்சுபோச்சு என ரவிச்சந்திரனின் தாய் உருக்கமாகக் கூறினார்.

"என் மகன் 22 வயசுல கைதானான் இப்போ 54 வயசு; அவனுக்கு விடுதலை கிடைக்கணும்" - ரவிச்சந்திரனின் தாய்

பேரறிவாளன் விடுதலை டி.வி-ல பார்த்தப்போ, அந்த நிமிஷம் என் மகனை நெனச்சு என் கண்ணெல்லாம் கண்ணீரா நெறஞ்சுபோச்சு என ரவிச்சந்திரனின் தாய் உருக்கமாகக் கூறினார்.

Published:Updated:
ரவிச்சந்திரன்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனைக் கைதிகளாக முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உட்பட 7 பேர் சிறையில் உள்ளனர். இதில் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சட்டப்பிரிவு 142-ஐப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் நேற்று பரபரப்புத் தீர்ப்பு அளித்தது. இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்விவகாரத்தில் பேரறிவாளன் விடுதலையை அவருடைய குடும்ப உறுப்பினர்களும், தாய் அற்புதம்மாளும் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.

ரவிச்சந்திரன்
ரவிச்சந்திரன்

விடுதலை குறித்துப் பேட்டியளித்த பேரறிவாளன் "தீயவர் வீழவேண்டும், நல்லவர் வாழ வேண்டும்" என்று கூறினார். இதன் தொடர்ச்சியாகப் பல்வேறு கருத்துகளும், விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையிலுள்ள மீதி 6 பேரின் நிலை என்ன என்பது அடுத்த பேசுபொருளாகியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறை சென்ற நபர்களில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரனும் ஒருவர். தற்போது ரவிச்சந்திரன் பரோலில் வெளியே வந்துள்ளார். சிறையிலிருந்து வெளிவந்த அவர், அவருடைய சொந்த மாவட்டமான தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகாவுக்குட்பட்ட சூரப்பநாயக்கன்பட்டியில் தாய் ராஜேஸ்வரி உடன் சொந்த வீட்டில் வசித்துவருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து அதே வழக்குக்காகக் கைதுசெய்யப்பட்டு தற்போது பரோலில் உள்ள ரவிச்சந்திரன் குடும்பத்தினர் நிலைப்பாடு என்ன? பேரறிவாளன் விடுதலையை ரவிச்சந்திரனின் குடும்பத்தினர் எப்படிப் பார்க்கின்றனர் என்பதை அறிய ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரியிடம் பேசினோம்.

"முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் என் மகன் ரவி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது அதில் பேரறிவாளனுக்கு விடுதலை கிடைத்திருப்பது ரொம்ப மகிழ்ச்சியா இருக்குது. இதுமாதிரியே என் மகன் ரவிக்கும் விடுதலை கிடைக்கிறதுக்குத் தமிழக அரசு ஏற்பாடு செய்யணும். இதுவரையிலும் தமிழக அரசு என் மகன் உட்பட ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்குற மத்தவங்களுக்கும் சேர்த்து எடுத்துட்டு வர முயற்சிக்கு நன்றி. கடந்த ஆறு மாசத்துல என் பையன் வெளிவந்ததுதான், என் வாழ்க்கையில எனக்கு நடந்த மிகப்பெரிய சந்தோஷமான சம்பவம். 6 மாத பரோலில் வந்த அவனுக்கு பரோல் காலம் முடிஞ்சுபோச்சு. இப்போ பரோல் காலநீட்டிப்பு கேட்டு அனுமதி வாங்கியிருக்கோம். வர்ற ஜூலை மாசம் வரைக்கும் என் மகன் ரவிச்சந்திரனுக்கு பரோல் நீட்டிப்பு வழங்கியிருக்காங்க. இந்தச் சமயத்துல பேரறிவாளன் விடுதலைச் செய்தி எங்களுக்கு புதுத்தெம்பு தந்த மாதிரி இருக்கு.

பேரறிவாளன்
பேரறிவாளன்

இந்த வழக்குல என் மகன் ரவி கைதாகி ஜெயிலுக்குப் போகும்போது அவனுக்கு வயசு 22 இருக்கும். இப்ப அவனுக்கு வயசு 50க்கு மேல ஆகுது. ஒரு தாயோட உச்சபட்ச எதிர்பார்ப்பு, கடமையைப் பூர்த்தி பண்ணி வச்சு அழகு பார்க்கவேண்டிய சமயத்துல ரவி ஜெயிலுக்குள்ள போய்ட்டான். அதுவே எனக்கு மிகப் பெரிய கஷ்டம். சரியான காலத்தில் அவனுக்குப் பண்ண வேண்டிய கடமைகளைப் பண்ண முடியாம இவ்வளவு காலமும் அவன் தனியாளாவே இருந்துட்டான். ரவிக்கு 54 வயசு ஆகுது, இப்ப வரைக்கும் அவனுக்குக் கல்யாணம் ஆகலை. இருக்குற வரைக்கும் நான் பாத்துப்பேன். ஆனா, எனக்கு அப்பறம் அவனுக்குன்னு யாரு இருப்பாங்க. இதெல்லாம் நினைக்கும்போதே படபடன்னு வருது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரவியை இந்த கேஸ்ல இருந்து வெளிய கொண்டு வருவதற்காக இருக்கிற எல்லாத்தையும் இழந்திருக்கேன். ஆனா அவன வெளியில் எடுக்குற முயற்சிய மட்டும் நான் கைவிடவே இல்லை. சமீபத்தில்கூட எங்க பூர்வீக சொத்தை ஏழு லட்சத்துக்கு வித்து கேஸ் நடத்திட்டு வர்றேன். ஆனாலும் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஏழு லட்சமும் செலவானதுதான் மிச்சம். ஆனா, அதுக்காக நான் வருத்தப்படல. எனக்கு என் மகன் திரும்பி வரணும். அது ஒண்ணுதான் குறி. அதுக்காக எவ்வளவு தூரம் வேணாலும் போராடுவேன். என்னோட கணவர் பொய்யாளி, அரசு உத்தியோகத்தில் வேலை பார்த்தார். இப்ப அவர் உயிரோட இல்ல. ஆனா அவர் எங்களுக்குக் குடுத்துட்டுப் போன பென்ஷன் தொகைய வச்சுதான் என் வாழ்க்கைய ஓட்டிக்கிட்டு இருக்கேன்.

பேரறிவாளன் விடுதலைய டி.வி-ல பார்த்தப்போ என் மகனும் இதேபோல கேஸ்ல இருந்து விடுதலை ஆகணும்னு அடி மனசு துடிச்சிது. அந்த ஒரு நொடி என் மகனைப் பார்த்தப்போ, கண்டிப்பா அவன் விடுதலையாகிடுவான்னு மனசுக்குள்ள தோணுச்சு. அந்த நெனப்பு ஓடும்போதே கண்ணெல்லாம் கண்ணீரால நெறஞ்சுபோச்சு என்று சொல்லும்போதே அவரின் குரல் தழுதழுத்துவிட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்தான், என் மகன் உட்பட மற்ற 6 பேரையும் விடுதலை செய்வதற்கு முயற்சிகள் எடுக்கணும். இத என்னோட கோரிக்கையாக வைக்கிறேன்" எனச் சொன்ன நிலையில் பேசமுடியாமல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து, சூரப்பநாயக்கன்பட்டியில் ரவிச்சந்திரனும், அவரின் தாயார் ராஜேஸ்வரியும் தங்கியுள்ள வீட்டைச் சுற்றிலும் காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டுள்ளனர். சாதாரணமாகக்கூட யாரும் உள்ளே நுழைய முடியாதபடிக்கு சோதனைகளும், குறுக்கு விசாரணைகளும் பலமாக உள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். மேலும், ஊடகத்தினர், பத்திரிகையாளர்கள் என யாரும் ராஜேஸ்வரியின் குடும்பத்தினரைச் சந்திக்கவோ, கருத்துகள் கேட்பதற்கோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism