வழக்கில் ஆஜராக வந்த பேராசிரியை நிர்மலாதேவி நீதிமன்றத்தில் மயங்கி விழுந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு பேராசிரியை நிர்மலாதேவி அழைத்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. சிறையில் இருந்த நிர்மலாதேவி ஜாமீனில் வெளியே வந்த பிறகு நீதிமன்றத்துக்கு ஆஜராக வரும்போதெல்லாம் பரபரப்பான சம்பவங்கள் நடப்பது தொடர்ந்து வருகிறது.
ஏற்கெனவே ஆஜராக கெட்டப்பை மாற்றி வந்து பலருக்கும் வியப்பு ஏற்படுத்தினார். அதன் பின்பு மனநலம் பாதிக்கப்பட்டவர் போல நடந்துகொண்டார். திடீரென்று மொட்டை அடித்து வந்து அதிர்ச்சி ஏற்படுத்தினார். இந்த நிலையில், இன்று ஆஜராக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு வந்தவர் மயங்கி விழுந்தார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ள பேராசிரியர் நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இந்த வழக்கு சம்பந்தமாக ஏற்கெனவே சி.பி.சிஐ.டி-யினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், இன்று நீதிபதி பரிமளா, `கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றது. அவர்களை தவறான பாதைக்கு வழி நடத்த கூட்டுச் சதி செய்தது உட்பட 8 பிரிவுகளின் கீழ் உள்ள குற்றச்சாட்டை மூன்று பேரும் செய்தது உண்மையா?' என கேட்டதற்கு, `இந்தக் குற்றத்தைச் செய்யவில்லை. இது பொய் வழக்கு' என தெரிவித்தனர்.

நிர்மலா தேவியோ, ``நான் மாணவிகளை குழந்தையாகப் பார்த்து வந்தேன். அவ்வாறு எந்தத் தவறும் செய்யவில்லை'' என நீதிபதியிடம் தெரிவித்தார். ஆஜராக வருவதற்கு முன் காத்திருந்தவர் திடீரென்று மயங்கி விழுந்தது அங்குள்ளவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நிர்மலாதேவிக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் என்னதான் பிரச்னை என்பது புரியாமல் காவல்துறையினர் குழம்பி வருகிறார்கள். வழக்கு 23-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.